புலவர் வெற்றியழகன்.

உயர்திணையில் 'கள்' விகுதி.

 'அன்', 'ஆன்' ஆண்பால் ஒருமை விகுதிகள். 'அள்', 'ஆள்' பெண்பால் ஒருமை விகுதிகள். 'அர்', 'ஆர்' பன்மை விகுதிகள். 'கள்' என்னும் அஃறிணைப் பன்மை விகுதியை, உயர்தினைக்குப்  பயன்படுத்துதல் கூடாது.

புலவன் வந்திருந்தான் என்றெழுதுவதே சரியானது. புலவர் வந்திருந்தார் என்றிதனை மரியாதைப்பன்மையாக, எழுதுவதால், ஒருவர்க்குமேல் வந்தோரைக்குறிப்பிடுவதற்கு 'புலவர்கள் வந்திருந்தார்கள்' என்று 'கள்' விகுதியைச்சேர்த்தெழுதுகின்றனர். 'கள்' விகுதியைச்சேர்க்காமலேயே எழுதலாம். எ-டு:
புலவன் வந்தான் - ஒருமை.
புலவர் பேசினர் - மரியாதை ஒருமை. ( அர் - பெயர், வினைகளில் உயர்திணைப்பன்மையைக்காட்டும் ஒரு விகுதி; பெயர், வினைகளில் ஒருமைச்சிறப்பில் வரும் ஒரு விகுதி).
புலவர் பேசினார் - பன்மை.
(ஆர் - உயர்திணைப்பன்மைப்படர்க்கை விகுதி).
புலவர்மார் பேசினார் - மரியாதைப்பன்மை. ( மார் - பன்மை விகுதி). 
புலவோர் பேசினார் - பன்மை.
* ஆதிபகவன் (குறள் - 1) - 'அன்' விகுதி.
* நீந்துவர், நீந்தார், இறைவன், அடிசேராதார் (குறள் - 10) - முறையே, அர், ஆர், அன், ஆர் விகுதிகள் பயன்படுத்தப்பட்டு, 'கள்' விகுதி  தவிர்க்கப்பட்டது..
* அறுதொழிலோர் (குறள் -560) - உயர்திணைப் பன்மைக்கு 'ஓர்' விகுதி பயன்படுத்தப்பட்டதுடன், அளவற்றவரையும் குறிப்பதைக்காண்க.

"பூரியர்கள் ஆழும் அளறு" (குறள்-919) -இல், 'கள்' விகுதி சேர்க்கப்பட்டது பதிப்பித்தோர் தவறு. பூரியர் என்னும் சீர் கூவிளம். விளமுன் நேர் 'ஆழும்' என்று சரியாகவே தொடங்கப்பெற்றது. மேலும், "பூரியார் கண்ணும் உள" (குறள் - 242) இல், 'கள்' விகுதி பயன்படுத்தப்படாமையை நோக்குக.

மேற்கூறிய கருத்துகள் புலவர் திரு. வெற்றியழகனார் எழுதிய 'தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - எளியவுரை' என்னும் நூலிலிருந்து  தொகுத்து எழுதப்பட்டது. இது நிற்க.

'கள்' என்னும் அஃறிணைப் பன்மை விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தப்படுவதால், அர், ஆர், ஓர் முதலானப் பன்மை விகுதிகள் பயன்பாட்டை இழக்கின்றன. 'கள்' விகுதி மூவிடப்பெயர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
நாங்கள் × - யாம் √.
எங்கள் × - எம் ✓.
நீங்கள் ×  - நீர் ✓ .
தங்கள் × - நும் ✓,
தாங்கள் × - நீயிர் √.
அவர்கள்× - அவர் ✓.
இவ்வாறாக. நற்றமிழ் சொல்கள் பயன்பாட்டில் குறைகின்றன.  கள் = ஒரு வண்டு, களவு, சோர்வு, பொய், மது, மலர்த்தேன் என்னும் பொருள்களுடன் பன்மை விகுதி என்றும் தமிழகாரதியில் சொல்லப்பட்டுள்ளது. உயர்திணைப் பன்மை விகுதி எனச்சொல்லப்படவில்லை. மேலும், நாங்கள், எங்கள், நீங்கள், தங்கள், தாங்கள், அவர்கள் என்பன இலக்கணவிதிப்படி அமைந்த சொல்கள்தானா என்னும் ஐயமும் எழுகின்றது.

'கள்' மயக்கம் நீங்குமா? நன்றி.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர்ப்புலவர்