அண்ணாமலையூர்புலவர்

"கலித்தொகைப்பாடல்".
அண்ணாமலையூர் புலவர்
திரு. இராச மனோகரன்.

சங்கக்காலத்தில் எழுதப்பட்ட, பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்றாகிய, "கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில்" ஒரு சோற்றுப்பதமாக ஓர் இன்சுவைப்பாடலைச் சுவைப்போமா!

அந்துவனார் என்னும் புலவர் இயற்றிய, நெய்தல்திணையில் தோழியின்கூற்றாக அமைந்த இப்பாடலில் அறக்கருத்துகள் செறிந்துள்ளன. மக்கள்வாழ்க்கைக்கு வேண்டிய நல்லறங்களை எடுத்தோதுவதால் இவர் "நல்லந்துவனார்" என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்பட்டார்.

பத்தொன்பது அடிகளைக்கொண்ட இப்பாடலின், முதலைந்து அடிகள் தலைவனின் சிறப்பை உரைக்கின்றன. அடுத்த ஒன்பதடிகள் அறக்கூற்றின் வாயிலாக தலைவியுற்ற துயரை உரைக்கின்றன. இறுதி ஐந்தடிகள், தலைவியின் துயர்தீர்க்க தலைவனை விரைந்து செல்கவென வேண்டுகின்றன.  நாம் அறப்பகுதியையும் வேண்டல்பகுதியையும் காண்போம்.

"மாமலர் முண்டகம் ......
.................................................................
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையர்சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர்‌ அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் போறுத்தல்
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என்தோழி
நல்நுதல் நலனுண்டு துறத்தல் கொண்க!
தீம்பால் உண்பவர் கொள்கலன் வரைதல் 
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ; பூண்க நின்தேரே.

மன்பதைக்குப்பொதுவான ஒன்பது அறங்களை இலக்கணப்படுத்தி, அதன்வழி தலைவியுற்ற நிலைகளை வெளிப்படுத்தி, தலைவனின் கடைமையைக் குறிப்பதாகவும் வெளிப்படையாகவும் நறுந்தமிழால், அருந்தமிழால் அருமையாக தோழி உணர்த்தும் பாங்கினை ஒவ்வொன்றாக காண்போம்.

ஒன்று இன்மையால் துயருற்றவர்க்கு (அலந்தவர்), அதனை ஈந்து ஆற்றுப்படுத்துவது, ஆற்றுதல் (துயர்களைதல்) எனப்படும். திருவள்ளுவனார் 'வறியார்க்கு ஒன்று ஈவது' எனக்குறிக்கிறார். தலைவனின் காதலன்பைப்பெறாது தலைவி அல்லல் உறுகிறாள். அதனை, தலைவனல்லாது வேறுயாரும் ஆற்றுப்படுத்த இயலாது எனக்குறிப்பாக தோழி சொல்கிறாள்.

நம்முடன் உறவுகொண்டு பழகுபவர்களை நாம் பிரியாதிருப்பது, அவர்களைப் போற்றுவது (பேணுதல்) என்பதாம். இங்கு, களவொழுக்கம் நிகழ்ந்ததை நேரடியாகவே 'புணர்ந்தாரை' என்னும் சொல்லால் சுட்டி, தலைவியைப் போற்றவேண்டுகிறாள்.

பாடு என்னுஞ்சொல் துயரையும், நாமிருக்கும் நிலையையுங்குறிக்கும். ஒருவர் இருக்கும் நிலையை, அவருற்றதுயரை அவர் அறிவிக்காமல், நாமே அறிந்து அதற்கேற்ப செயல்பட (ஒழுகுதல்) வேண்டும்; அதுவே பண்பாம். அவ்வாறாக, தலைவன் தானே அறியாதநிலையில், தன்தலைவி படும்பாட்டை எடுத்துரைக்க வரநேர்ந்ததை, தோழி சொல்லாமல் சொல்கிறாள்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் 'பண்புடைமை' என்னும் தலைப்பை நூறாவது அதிகாரமாக அமைத்து உள்ளார். பாடறிந்து ஒழுகும் பண்பை ஒருவன் பெற்றால், அதுவே முழுமைத்தன்மையை அடைந்ததாகும் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே, பண்புடைமையை நூறாவது அதிகாரமாக அமைத்தாரோ!

தன் உறவுகளை (கிளை) வெறுக்காதிருப்பதுதான் அன்பு என்பது. "செல்வர்க்கழகு செழுங்கிளைத்தாங்குதல்" எனவும் வரையப்பட்டுள்ளது. கிளை (உறவு) என்னுஞ்சொல்லைத்தேர்ந்து உரைக்கிறாள் தோழி. தலைவியானவள் தலைவனுக்கு உறவாகிவிட்டாள்; அவளை வெறுக்கலாகாது என்பதனையும் தோழி உணர்த்துகிறாள்.

பேதையர்தம் (அறிவுகுறைந்தவர், உலகியல்  நடைமுறை அறியாதவர்) சொல்குற்றத்தை பொறுத்துக்கொள்ளுதல் (நோன்றல்)  என்பதே அறிவு எனப்படும். தலைவி அறியாமையால் ஏதும்சொல்லி, தலைவன் மனவருத்தம் அடைந்திருப்பானோ எனக்கருதிய தோழி, தலைவியை நேரடியாகவே பேதை எனவுரைத்து, அவள்தன் சொல்குற்றம் பொறுப்பாயாக எனவேண்டுகிறாள்.

மறாஅமை, மாறாதிருப்பது, சொற்பிறழாமை என்பது செறிவாம். இஃது இன்று 'நாணயம்' எனப்படுவது. தன்தலைவியை  பேதை என்றுரைத்ததை அடுத்து, தலைவன் கூறியகூற்றுகளை அவனுக்கு நினைவுப்படுத்தி, அவற்றிலிருந்து பிறழக்கூடாதென  எல்லைப்படுத்துகிறாள் தோழி.

தாம் உற்றது என்ன, தம்மனத்துள் உள்ளவை யாவை என்பனவற்றை,  பிறர் அறிய காட்டாதது, நிறை எனப்படும். நாமுற்ற துயரங்களை பிறரிடம் கூறுவது வழக்கமன்று. "தோழனோடும் ஏழைமை பேசேல்" என்பார் ஔவையார். நிகழ்ந்த களவொழுக்கம், கற்பொழுக்கமாக மலரும்வரை அது மறைவாக இருத்தல்வேண்டும்.  தலைவனின் பிரிவால் இருவருமே உறும் மெய்ப்பாடுகளின் வேறுபாட்டால் களவொழுக்கம் வெளிப்படல், நிறையன்று என்று தோழி உணர்த்துகிறாள்.

 ஒருவர் யாராக இருந்தாலும், தவறுசெய்வாராயின் கருணைக்கண்காட்டாது ஒறுத்தல், முறை எனப்படும்; தீமையை அப்போதே ஒழித்தல்.
"கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனொடு நேர்" -  என்று திருவள்ளுவர் அறங்கூறுகிறார். 

ஆயினும், தோழி கூறுவது மேற்கண்ட 'உயிர் நீக்கலையன்று'. தலைவிக்காக தலைவனை நேர்கண்டு, ஆற்றுதல் முதலாம் ஏழறங்களை உரைத்ததோழி, தலைவியின் உயிர்நீக்கலுக்கா வந்தாள்? ஈண்டு, கண்ணோடாது என்பது, கண்+ஓடாது = கருணை+ நீங்காது, எனப்பொருள்கொண்டு, உயிர்வௌவலை ஓருயிர் ஈருடலாம் என்னும் நிறையாக கொள்ளல்வேண்டும்.

தன்னைப்போற்றாதாரையும், மதியாது இகழ்ந்துபேசுவாரையும் பொறுத்துக்கொள்ளுதல் பொறையாம். இவ்வாறாக, நீளவுரைத்துவந்த தோழி இறுதியாக, தலைவியின் பாராமுகம், புறக்கணிப்பு என்பன இருந்தால் அவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறாள்.

வேண்டல்பகுதி: இவ்வாறு உரைத்ததன் பொருளை
 நீர் அறிந்தவராயின், உனக்கு நன்மைகளைத்தரும் அழகிய நெற்றியையுடைய என்தலைவியுடன் இன்பங்களைத்துய்த்து (நலனுண்டு), அவளை நீங்குதலை, துறத்தல் வேண்டும். என்தலைவி தீம்பால் போன்றாள். அவளை, கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்தவர் (உண்டவர்) நீர். தீம்பால் (நல்லின்பங்களை) உண்பவர்,  தலைவியை (கொள்கலம்), திருமணம் (வரைதல்) புரிந்துகொள்வது தலையாய கடமையல்லவா? நின்பிரிவால் வருந்தி துயருற்றிருக்கும் என்தலைவியின் துயர்களைய விரைந்து செல்க! (பூணுகதேர்).

வணக்கம்.
திருவள்ளுவர் ஆண்டு 2053,
சுறவம் திங்கள் 10ஆம்நாள்,
ஞாயிற்றுக்கிழமை.


Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்