அண்ணாமலையூர்ப்புலவர்
"தலையாய நட்பு".
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழுக்குப்பெருமை சேர்ப்பன. எட்டுத்தொகை நூல்களுளொன்று புறநானூறு. புறப்பொருள் ஒழுகலாறுகளான பொருள், வீரம், ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படுத்தி, மக்களை நெறிப்படுத்தும் பாடல்கள் நானூறு தொகுக்கப்பெற்றதால் 'புறநானூறு' என்னும் பெயர்பெற்றது. இதன்கண் நற்கருத்தமைந்த அணிகலணான பாடலொன்றைச்சுவைப்போம்; கடைபிடிப்போம்.
பாடலின் பின்னணி வருமாறு: உறையூரை தலைநகரமாகக்கொண்டு கோப்பெருஞ்சோழன் ஆண்டு வந்தான். பாண்டியநாட்டில் 'பிசிராந்தையார்' என்னும் நற்றமிழ்ப்புலவர் வாழ்ந்து வந்தார். இருவரும் நேரில்காணாமலே நட்புறவு பூண்டிருந்தனர். யாது காரணத்தாலோ, இருவரும் ஒருவரையொருவர் நேர்காண இயலவில்லை. ஆயினும், உள்ளத்தால் ஒன்றி நட்பினை வளர்த்து வந்தனர்.
கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்க்கிடையே ஆட்சியுரிமைக்கான பூசல்கள் நேரிட்டன. மன்னன் மனம்வெறுத்து உயிர்நீங்க எண்ணி, வடக்கிருந்தான். தன்னாருயிர் நண்பர் பிசிராந்தையார் தன்னைக்காண வருவார் என்று உறுதிகொண்ட மன்னன், அவர்க்கு தம்மருகில் ஓரிருக்கை அமைத்தான். உள்ளுணர்வு தூண்டப்பெற்ற பிசிராந்தையார், தன்நண்பனாம் மன்னனைக்காணப்புறப்பட்டார். விரைந்து வந்து மன்னனைக்கண்டு, மனம்வருந்தி அருகிலிருந்த இருக்கையிலமர்ந்தார். சிலமணித்துளிகளில் ஒரேகணத்தில் இருவரின் உயிர் நீங்கி, பின்னால் சாய்ந்தனர். இது 'சாவில் சாதல்' என்னும் தலையாய நட்பு. 'நோவில்நோதல்' என்பது இடையாய நட்பு. 'ஒண்பொருள் கொடுத்தல்' என்பது கடையாய நட்பு.
இந்நிகழ்வு தூண்டுகோலாய் அமைய, புலவர் கண்ணகனார் இயற்றிய பாடல் வருமாறு:
"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்(து)
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்(கு) என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே".
துகிர் = பவளம்.
மன்னிய = நிலைத்த.
மாமலை = பெரியமலை, பெருமையுடைய மலை.
பயந்த = தந்த.
காமர் = விரும்பப்படும்.
மணி = மாணிக்கம்.
இடைப்பட = இடைவெளி அமைந்த.
சேய = சேய்மை = தொலைவு.
புணர்ந்து = சேர்ந்து.
அருவிலை = விலையுயர்ந்த.
நன்கலம் = நல்லணிகலன்.
காலை = போழ்து.
ஒருவழித்தோன்றியாங்கு = ஓரிடத்தில் சேர்ந்திருப்பது போல.
பால் = பக்கம்.
பாலர் = பக்கத்தார்.
ஆப = ஆகுப = ஆவர்.
சாலார் = சால்பிலார், சான்றோர் அல்லாதார்.
நல்லவர் நல்லவரோடே சேர்வர்; அல்லவர் அல்லவரோடே சேர்வர் என்பதுதான் இப்பாடலின் முதன்மையான, செழுமையான கருத்து. மேலும், அவர்க்கு இடையேயுள்ள தொலைவு அவர்தம் சேர்க்கைக்குத்தடையன்று. இதனை, அழகான, இயற்கையாயமைந்த உண்மைகளை உவமைகளாக வைத்து அறங்கூறியுள்ளார் புலவர்பெருமான்.
பொன் மண்ணிற்கடியிலிருந்து பெறப்படுகிறது. கடலின் மேல்மட்டத்திலுள்ள பவளப்பாறைகளிலிருந்து பவளம் பெறப்படுகிறது. நாம் விரும்பும் மாணிக்கக்கற்களை, நிலைத்த பெரிய மலைகள் தருகின்றன. இவ்வாறாக பெறப்படும் பொருள்கள், பிறக்குமிடங்கள் மாறுபட்டவை; இடைவெளியும் தொலைவும் உடையன. இவற்றைக்கொண்டு விலையுயர்ந்த நல்லணிகலன் செய்யும்போது, அவை அவ்வணிகலனில் பதியப்பெற்று ஓரிடத்தில் தோன்றுகின்றன.
அதுபோல், சால்பமைந்த சான்றோர் தொலைவிலிருந்தாலும், அவர்தமையேநாடி ஒன்றுசேர்வர்.
எனவே, நாம் முதலில் நம்மை சால்புள்ளவர்களாக ஆக்கிக்கொண்டால், அச்சான்றாண்மை தன்னினமான சான்றோரிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும். நாம் சால்புடையராவதற்கு முதற்படி, ஒழுக்கமுடையவர், நல்லவர், உயர்ந்தோர் கூட்டுறவே. இதனையே, தெய்வப்புலவர் திருவள்ளுவர் 'பெரியாரைத்துணைக்கோடல்' என்கிறார்; இதன் எதிர்மறையாக 'சிற்றினம் சேராமை' என்கிறார்.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய மணியான ஒழுக்கங்களை, விலையுயர்ந்த மணிகளை உவமைகளாக கொண்டு, நல்லணிகலனான ஒரு பாட்டில் அமைத்துத்தந்துள்ளார், கண்ணகனார் என்னும் நல்லிசைப்புலவர். ொ
Comments
Post a Comment