இராச மனோகரன்
அண்ணாமலையூர்ப்புலவர்
திரு. இராச மனோகரன்.
"விட்டிசைத்தலும் விடாதிசைத்தலும்".
தமிழில் தனிச்சொற்கள் எனவும் பிணைப்புச்சொற்கள் எனவும் இருவகையுண்டு. 'வாழை' என்பது ஒரு தனிச்சொல். 'பழம்' என்பதும் அவ்வாறே. ஒரு பழம் இன்ன மரத்தினது என நாம் உணர்ந்தால், மற்றவர்க்கும் அதனையே உணர்த்த விரும்பினால், வாழையென்னும் சிறப்புச்சொல்லும், பழமென்னும் பொதுச்சொல்லும் பகரமெய்(ப்) பெற்று புணர்ந்து 'வாழைப்பழம்' என்னும் பிணைப்புச்சொல் ஆகும். வாழைப்பழம் வாழைமரத்திற்கேயுரிய பழம் எனவும், அல்வாழைமரத்திலும், தண்டு, இலை முதலான சினைகளைக்குறிக்காமல், அதன் பழம் ஒன்றனையே குறிக்கும் எனவும் அறியவேண்டும். வாழைப்பழம் எனும் இப்பிணைப்புச்சொல்லை ஒலிக்கும்போது பிளவுபடாமல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும். இதனையே விடாதிசைத்தல் (விடாது+இசைத்தல்) என்கிறோம். இவ்வாறாக விடாதிசைப்பது மட்டுமன்று, பிளவுபடுத்தாமல் ஒரே சொல்லாகவும் எழுதவேண்டும். ஒலித்தல், எழுதுதல் இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இலக்கணநோக்கின்படியும், பொருள்நோக்கின்படியும், ஒலிப்புமுறைப்படியும் ஒரு வல்லொற்றுத்தோன்றினால், அச்சொற்களை விடாதிசைக்கவேண்டும்; இடைவெளிவிடாது எழுதவும்வேண்டும். இசைப்பதும், எழுதுவதும் ஒன்றாகவே அமையவேண்டும். வருமொழியில் கசதப குடும்பச்சொற்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒற்று மிகவேண்டும் என்று கருதி, ஒற்று இட்டு தடுமாறுகிறார்; தெளிவின்றி இருக்கிறார்.
விட்டிசைத்தல் (விட்டு+இசைத்தல்) என்றொன்று இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, 'எழிலன் பலர் உதவி கொண்டு வாழ்ந்தான்' என்னும் முற்றுத்தொடர்மொழியைக் (வாக்கியம்) காண்போம். இதில், 'உதவி கொண்டு' என்ற இருசொற்கள் பிரித்தெழுதப்பட்டுள்ளன. இதனை ஒலிக்கும்போது சிறு காலயிடைவெளிவிட்டு ஒலிக்கவேண்டும். இதுதான் விட்டிசைத்தல் என்பது. இதனால் விளங்கும்பொருள் யாதெனில், எழிலன் தன்னளவில் வாழ்வதற்கு வகையில்லையென்பதால், பலரின்/ பலரது உதவிகளை ஏற்று (கொண்டு) வாழ்ந்தான் என்பது. இம்முற்றுத்தொடர்மொழியில் ஒரு வேற்றுமையுருபைச்சேர்ப்போமா! 'எழிலன் பலரின் உதவி கொண்டு வாழ்ந்தான்'. இப்போது முன்பைவிட பொருள் துலங்குகிறதல்லவா? இப்போதும் 'உதவி கொண்டு' எனப்பிரித்தே எழுதப்படவேண்டும்; சிறு காலயிடைவெளியுடன் ஒலிக்கப்படவும்வேண்டும்.
இதே முற்றுத்தொடர்மொழி (வாக்கியம்), 'எழிலன் பலர்க்கு உதவிக்கொண்டு வாழ்ந்தான்' என்றமையும்போது, உதவி, கொண்டு ஆகிய இருசொற்களும் ககரமெய்(க்) பெற்று பிணைப்புச்சொல்லாக 'உதவிக்கொண்டு' என்றாகிறது. இதன் பொருளாவது, எழிலன் பிறர் உதவியில்லாமல் தன்னளவில் வாழ்ந்து வருவதுடன், பலர்க்கும் உதவிகளை வழங்கவும் செய்கிறான் என்பதாம். 'உதவிக்கொண்டு' என்னும் ககரமெய்(க்) பெற்ற பிணைப்புச்சொல் விடாதிசைக்கப்படுவதுடன், பிரிக்காத, பிளவுபடாத ஒருசொல்லாகவும் எழுதப்பட்டது. இதுவே விடாதிசைத்தல் என்பதாம்.
இந்நுட்பங்கள் இல்லாமல் எழுதுவதாக இருந்தால், மேற்கூறிய முற்றுத்தொடர்மொழிகள் எவ்வாறமையும் எனக்காண்போமா?
'எழிலன், பலரின் உதவிகளைப்பெற்றுக்கொண்டு வாழ்ந்தான்' என்றமையும். இதில் ஏழெழுத்துகள் கூடுதலாக வருகின்றன.
'எழிலன் பலர்க்கு உதவிகளைச்செய்துகொண்டு வாழ்ந்தான்' என்றமையும். இதில் ஐயெழுத்துகள் கூடுதலாக வருகின்றன. 'வாழை மரத்தினது பழம்' என்றமையும். இதில் ஐயெழுத்துகள் கூடுதலாக வருகின்றன.சொற்களை விட்டிசைப்பதாலும், ஒற்று தோன்றியவிடத்து விடாதிசைப்பதாலும் 'முயற்சி சுருக்கம்' நிகழ்கின்றது.
ஆங்கிலமொழிக்கு இத்தன்மையில்லை. அவர் முயற்சி சுருக்கத்தை வேறொருவழியில் அடைகின்றனர். எடுத்துக்காட்டாக, electronic voting machine என்பதை EVM என்றழைப்பர். Ministry of Finance என்பதனை MoF என்றழைப்பர்.
வணக்கம்.
Comments
Post a Comment