தமிழிலக்கணம்.
"மொழிமுதலெழுத்துகள்".
தமிழில், 247 எழுத்துகளுள்ளன. மொழிமுதலில் வரக்கூடாதவை.
வல்லினத்தில் - 'ட்', 'ற்'.
மெல்லினத்தில் - 'ங்', 'ன்', 'ண்'.
இடையினத்தில் - 'ர்', 'ல்', 'ழ்', 'ள்' -
ஆகிய இவ்வொன்பது மெய்யெழுத்துகளின் "உயிர்மெய் எழுத்துகள் (9×12 = 108)" சொல்லுக்கு முதலெழுத்தாய் வாரா.
உ, ஊ, ஒ, ஓ ஆகியவற்றின் வகர உயிர்மெய்கள் அதாவது 'வு', 'வூ', 'வொ', 'வோ' ஆகிய நான்கு உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு
முதலெழுத்தாய் வாரா.
இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ ஆகியவற்றின் யகர உயிர்மெய்கள் அதாவது 'யி', 'யீ', 'யெ', 'யே', 'யை' 'யொ' ஆகிய ஆறு உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலெழுத்தாய் வாரா.
இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவற்றின் ஞகர உயிர்மெய்கள் அதாவது 'ஞி', 'ஞீ', 'ஞு', 'ஞூ', 'ஞே'' 'ஞை' 'ஞோ', 'ஞௌ' ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலெழுத்தாய் வாரா.
மெய்யெழுத்துக்கள் 18-ம் சொல்லுக்கு முதலெழுத்தாய் வாரா.
ஆய்தவெழுத்து சொல்லுக்கு முதலெழுத்தாய் வராது.
தொகுக்கும்போது 108 + 4 + 6 + 8 + 18 + 1 = 145 உயிர்மெய் எழுத்துகள் தமிழ்மொழி சொற்களுக்கு முதலெழுத்தாய் வாரா. இந்த உயிர்மெய் எழுத்துகளை கொண்டு துவங்கும் ஒரு சொல், தமிழ் சொல்லன்று என்பது எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியதாகும்.
உலகிலுள்ள எந்தவொரு மொழியிலாவது, அந்த மொழியிலுள்ள எழுத்துகளில் பாதிக்குமேற்பட்டவை மொழிமுதலாய் வாராதிருக்குமா? தமிழ்மொழிக்கு இப்படியொரு சிறப்பிருக்கிறது பாருங்கள்! இதுபோன்றவொரு சிறப்பு உலகிலுள்ள வேறெந்த மொழிக்காவது இருக்குமா?
மருத்துவர் திரு. வ. பொன்முடி அவர்களின் "தமிழ்வெல்லத்தாழி" என்னும் புணர்ச்சியிலக்கண நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
கூடுதல் செய்தி :
யகர வர்க்க உயிர்மெய் எழுத்துகளில் 'யா' என்ற ஒரு உயிர்மெய் எழுத்தே தமிழ்சொல்லுக்கு முதலில் வரும். ஏனைய பதினொன்றும் சொல்லுக்கு முதலில் வாரா. இதன்படி முன்னம் குறிப்பிட்டவையுடன் சேர்த்து 'ய', 'யு', 'யூ', 'யோ'' 'யௌ' ஆகிய ஐந்து உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலெழுத்தாய் வாரா. ஆக, சொல்லுக்கு முதலெழுத்தாய் வாராத தமிழெழுத்துகள் '150'.
Comments
Post a Comment