தமிழர்மதம்
தமிழர்மதம் -
மறைமலையடிகள்
அத்தியாயம் - 2
ஆரியர் இன்னாரென்பது.
இந்திய ஆரியர் என்பார் பெரும்பாலும் நீண்டுயர்ந்த யாக்கையினரென்றும், வெள்ளை நிறத்தினரென்றும், கரிய அல்லது நீல விழியினரென்றும், நீண்டமுகத்தின்மேல் மிகுந்த மயிரினரென்றும், ஒடுங்கி யுயர்ந்திருந்தாலும் தனிப்பட நீளாத மூக்கினரென்றும் அறியப்படுகின்றனர்.
இவ்வாரிய மாந்தர், காசுமீரத்திலும், பஞ்சாபில் சிந்துநதி நெடுக அம்பாலா வரையிலுள்ள இடங்களிலும், இராசபுதனத்திலுமே காணப்படுகின்றனரென்றும், அவர் வழங்கிய ஆரியமொழி, பாரசீகம், இலத்தீன், கிரேக்கம் முதலான மேல்நாட்டுமொழிகளோடு இனமுடையதென்றும் ஆராய்ந்து சொல்லியிருக்கின்றனர்.
ஆனாலுந், தனிப்பட்ட ஆரிய குழுவினர் இவர்தாமென்று உறுதிபடுத்திச்சொல்லுவதற்கு இன்றியமையாத சான்றுகள் கிடைத்திலாமையின், இப்போதுள்ள இந்தியமக்களில் இவர்தான் ஆரியரென்று பிரித்துக்காட்டுதல் இயலவில்லையென்றும் மேனாட்டாசிரியர்களே உண்மையை ஒளியாமற்சொல்லிவிட்டனர்.
இவ்விந்திய நாட்டின் வடக்கேபோந்து குடியேறிய ஆரியர் மிகச்சிறுதொகையினராகவே அந்நாளில் இருந்தாராகல் வேண்டும். பெருந்தொகையினராய் இருந்து நாகரீக ஒளிமிக்கு நன்குயிர்வாழ்ந்த தமிழ்மக்களிடையே, மிடிபட்டு ஒளியின்றி வந்துகலந்த ஆரியர், பெரும்பாலும் அவரின் வேறாய்ப்பிரித்து தனிப்படவைத்து காண்டற்கு இயலாமலே மறைந்து போயினர்.
அத்தியாயம் -2இன் முடிவு.
பதிவு - 2.
Comments
Post a Comment