"தமிழர்மதம்".

தனித்தமிழ்தந்தையென அறியப்படும் மறைமலையடிகளார் "தமிழர்மதம்" என்னும் நூலையெழுதியுள்ளார். மறைமலையடிகளாருக்கு அறிமுகம் தேவையில்லை. அவரை அறிமுகப்படுத்துவது, சூரியன் ஒளிதரும் என்பதுபோன்றது.

இந்நாளில், பலரும் இன்னார் தமிழர், இதுதான் தமிழர்மதம் என ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்தோதி வருகின்றனர். இது பொதுவெளியில் முக்கியமான பேசுபொருளாகி இருக்கிறது. 

மறைமலையடிகளாரும் ஆய்ந்து தமிழர்மதம் இன்னதுதான் என முடிவுகட்டி அறிவித்துள்ளார்கள்.
 அவர், அவர்தம் நூலில் சொன்னவைகளை எழுத்துமாறாமல் இத்தொடரில் சுருக்கமாகவும், பொருள் தெளிவு சிதையாத அளவுக்கு விரித்தும் எடுத்தெழுத உத்தேசித்துள்ளேன். 'பதிப்புச்செம்மல்' திரு ச. மெய்யப்பன் அவர்களது  'மணிவாசகர் பதிப்பகம்', மார்ச்சு 2005இல் வெளியிட்ட "தமிழர்மதம்" என்னும் நூலே ஆதாரம்.

காதல்புரிபவர்கள் மத்தியில், காதலிப்பதாக இருந்தால் வேற்றுமொழிபேசும் பெண்ணை காதலி. அப்படிச்செய்தால் இல்லறம் அமைந்தாலும் அல்லது அமையாவிட்டாலும், உனக்கு கூடுதலாக ஒரு மொழியை தெரிந்துக்கொண்ட பலன்கிட்டும், என்பார்கள். அதுபோல், இத்தொடரை ஊன்றிகற்பவர்கள், தமிழர்மதம் இன்னதுதான் என்ற துணிவுபெறத்தவறினாலும், தமிழ்மொழிநடையையும், தனித்தமிழ்ச்சொற்களால் ஒரு நூலையெழுத முடியும் என்பதையும், தமிழின் இனிமையையும் அறியலாம். ஆக, ஏதேனும் ஒரு பலன் உறுதி. இனி நூலுக்கு செல்வோம்.

அடிகளாரின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:
"திருவள்ளுவர் ஆண்டு 1969, சித்திரைத்திங்கள், 24-ஆம் நாள் எழுதத்துவங்கிய இந்நூலை திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனித்திங்கள் 26-ஆம் நாள் எழுதிமுடித்தோம். ஆகவே, இதனை எழுதிமுடிப்பதற்கு ஓராண்டும், இரண்டு திங்களும், இரண்டு நாளும் ஆயின. இந்நூலை எழுதி வெளியிடுவதற்கு எமக்குண்டான வாழ்க்கைச்செலவு உரூபாய் 1500 ஆகும்".

"இந்நூல், தமிழையுந் தமிழர்தம் மதத்தையும் பற்றி யாம் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபுகளை மிகச்சுருங்காமலும் மிகவிரியாமலும், நன்கு விளக்கவேண்டுமளவுக்கு விளக்கிச்செல்வதாகும்".

"யாம் இதன்கண் விளக்கியிருக்கும் பொருள்கள் அத்தனையும் மிகப்பழைய உண்மைபொருள்களே யல்லாமல், முன் இல்லாது புதியவாய் முளைத்த பொருள்கள் அல்லவென்றுணர்தல் வேண்டும்".

பதிவு எண் -1இன் முடிவு.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்