தமிழர்மதம்

தமிழர்தம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 10
"மதம் இன்னதென்பது".

'மதம்' என்னுஞ்சொற்பொருளும் அதன்வழக்கும் ஆராய்ந்துகாண்பது இன்றியமையாததாய் இருக்கின்றது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்டநூல்களில்மட்டுமே 'மதம்' என்னுஞ்சொல், கடவுளைப்பற்றியாதல், உயிரைப்பற்றியாதல், உலகத்தைப்பற்றியாதல், ஒழுக்கத்தைப்பற்றியாதல் மக்கட்குழுவினர் கொண்ட கொள்கைக்கும் பெயராய் தமிழ்நூல்களில் வழங்கப்பட்டு வருகின்றது. கி. பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டநூல்களில் 'மதம்'  என்னும் சொல் கொள்கையென்னும் பொருளில்  வருதலைக்காண்கிலோம். புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு முதலான பழைய இலக்கியங்களில் 'மதம்' என்னுஞ்சொல் வலிமை, செருக்கு, அறியாமை, அழகு முதலான பொருள்களில் வருகிறதேயன்றி, கொள்கையென்னும் பொருளில் வரவில்லை. கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இயற்றபபட்டதான மணிமேகலையிலுங்கூட 'சமயம்'  என்னுஞ்சொல் வந்திருகின்றதேயன்றி, அதற்கு ஈடான 'மதம்' என்னுஞ்சொல் வரவில்லை. கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் முற்பாதியிற்றோன்றிய மாணிக்கவாசகப்பெருமான் அருளிச்செய்த திருவாசக காலத்திலிருந்துதான் 'மதம்' என்னுஞ்சொல் கொள்கையென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கிவருகிறது.

பண்டைத்தமிழிலக்கணமான தொல்காப்பியத்திலோ 'மதம்' என்னுஞ்சொல்லாதல், 'சமயம்' என்னுஞ்சொல்லாதல் எவ்விடத்துங்காணப்படவில்லை. இதுகொண்டு, பல்வகைமதங்களும் இத்தமிழ்நாட்டில் தோன்றுதற்குமுன்னமே, தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்கிநிற்கும். 

அங்ஙனமே, மணிமேகலைகாலத்திற்கு அஃதாவது ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட ( இத்துடன் 70 ஆண்டுகளைச்சேர்க. அடிகளார் 1950-இல் சிவன்திருவடியடைந்தார்), எந்த தமிழிலக்கியத்திலும் 'சமயம்', :மதம்' என்னுஞ்சொற்கள் வழங்காமையை உற்றுநோக்குங்கால், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்குமுன்னே இத்தென்றமிழ் நாட்டின்கண்ணே பலவகைச்சமயப்பகுப்புகள், பலவகைமதவேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கிநிற்கும்.

கடவுளும் உயிரும் இல்லையென பாழ்ங்கொள்கைப்பேசும் நாத்திகரும்; வேள்வியாற்றுதல் பட்டினிக்கிடத்தல் முதலானவினைகளே ஒருவர்க்கு வீட்டின்பத்தைத்தரும்,  இவற்றின் வேறாக கடவுளொருவன் உளனெனக்கொண்டு அவனைவழிபடுதலும் பிறவும்  வீணேயாமெனக்கரையும் மீமாஞ்சகரும்; உயிருங்கடவுளும் எல்லாம்பொய், அறமே மெய்யெனக்கழறும் பௌத்தரும்; இவ்வுடம்போடிருந்து உலக இன்பங்களை நுகருதல்விடுத்து, கடவுளும்உயிரும் இருவினையும் மறுமையும்மறுப்பிறப்பும் உளவெனக்கொண்டுழன்று உடம்பைமாய்தல் அறியாமையேயாம் எனக்கூவும் உலோகாயதரும், இவரின் இன்னும் பல்வேறுவகையரான சமயவாதிகளும், மாணிக்கவாசகர்காலத்தும் அவர்க்கும்முற்பட்ட மணிமேகலை ஆசிரியரான கூலவாணிகன் சாத்தனார் காலத்தும் இத்தமிழ் நாட்டின் கண் வந்துபல்கிவிட்டமை, மாணிக்கவாசகர் திருமொழியாலும், மணிமேகலையில் 'சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை'யாலும் நன்குணரப்படும்.

அத்தியாயம் - 10 தொடரும்.
பதிவு - 12.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்