தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 11
"தமிழர்கொள்கை".

பகுத்தறிவும், நாகரிகமுதன்மையும் வாய்ந்தவராகிய நந்தமிழ்மேன்மக்கள் இம்மைமறுமை வாழ்க்கைக்குரிய கொள்கைகளை உடையராயிருந்தனர். அவைதம்மை சிறிதாராய்ந்து உரைப்பாம்.

இவ்வுடம்பொடு இசைந்து, சிறிதுகாலம் நாம் இந்நிலவுலகத்தின்மேல்  இருந்து உயிர்வாழும் வாழ்க்கையே, இம்மைவாழ்க்கையாகும். இனி, இவ்வுடம்பையும் இந்நிலத்தையும் விட்டுப்போய், இப்போது நம் பொறிபுலன்களுக்கு நேரே விளங்காத,  வேறு நுண்ணியவுலகங்களில் அவ்வுலகங்களுக்கேற்ற நுண்ணியவுடம்புகளில் இருந்து சிலகாலம் வாழும் வாழ்க்கையும், அவ்வாழ்க்கையும் அங்கு முடிந்தபின் மீண்டும் புருவுடம்பிற்புகுந்து அப்புருவுடம்பிற்கேற்ற பருப்பொருள் உலகங்களின் பிறந்து உயிர்வாழும் வாழ்க்கையும் சேர்ந்து, மறுமைவாழ்க்கை என்று கருதப்படும்.

இம்மண்ணுலகில் பிறவியெடுப்பதற்கு முன்னமே, இந்நிலமும் இந்நிலத்து நுகர்பொருள்களும் அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலம் இல்லையானால் நாம் பிறவியெடுத்து உலவுதல் முடியாது. நாம் இந்நிலத்திலிருந்து  வாழ்வதற்கு ஓர் உடம்பும்,  நுகர்பொருள்களை நுகர்தற்கு ஏற்ற மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் புறக்கருவிகளும்; மனம், நினைவு, அறிவு, முனைப்பு என்ற அகக்கருவிகளும் பிறவும் நமக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளுள் ஒன்றாயினும் பலவாயினும் குறைவுபடுமாயின், மக்களென்போர் அறிவும்இன்பமும் பெறுதல் சிறிதும் இயலாது.

நமக்கு அறிவுவிளங்கி, இவற்றை அறிதற்கும்நுகர்தற்கும் முன்னமே, இவ்வுலகையும் இவ்வுடம்பையும் நமக்கு படைத்துக்கொடுக்கும்படி நாம் எவரையேனும் கேட்டதுண்டா? சிறிதுமில்லையே. நமக்கு படைத்துக்கொடுக்கப்பட்ட இவைகளை நாம் வேண்டாமென்றுதான் கழித்துவிடுதல் இயலுமோவெனின், அதுவுஞ் சிறிதும்இயலாலதன்றோ? நாம், பிறப்பிக்கப்படுங்கால் பிறந்தேயாகல் வேண்டும்; இறப்பிக்கப்படுங்கால் இறந்தேபோகல் வேண்டும். இவைகளை மாற்றிவிடுதல் எவராலும் ஆகாது.

இவ்வுலகமும் உடம்பும் பொய்யென்று சொல்லிவிட்டால், இவையெல்லாம் பொய்யாய்விடுமென்று சிலர் சொல்கிறார்கள். நிலையின்றி அழிவது வேறு, பொய்யாவது வேறென்று பகுத்தறிதல் வேண்டும். நிலையின்றி அழிவதெல்லாம் நம்பொறிபுலன்களுக்கு விளங்காத நுண்ணிய நிலையினை அடைகின்றனவேயன்றி, அவை பொய்யாகவில்லைளயென்பது, இஞ்ஞான்றை இயற்கைப்பொருணூல் ஆசிரியரால் ஆராய்ந்து நிறுவப்பட்டிருக்கின்றது.

தெளிந்த மெய்ப்பொருள்களாய் இருக்கும் உலகத்தோடும் உடம்போடும் சேர்ந்துலவி, அம்முகத்தால் சிறிதுசிறிதாக அறிவுவிளங்கப்பெற்றுவரும் சிற்றுயிர்களான நாம், இவ்வரும் சேர்க்கையை நம்மறிவாலும் நஞ்செயலாலும் பெறவியலாமல், நம்மினுஞ்சிறந்த பேரறிவும், பேராற்றலும், பேரியக்கமும் வாய்ந்த வேறு ஓர் அரிய, விழுமிய உயிரின் செயலால் பெற்றிருத்தலினாலேயே, இவ்வுடம்பின் சேர்க்கையையும், இவ்வுலகின் சேர்க்கையையும், இவ்வுலகத்துப்பொருள்களின் சேர்க்கையையும் விட்டு நீங்கும்படி நேருங்கால், அந்நீக்கத்தை தாங்கவியலாமல் மக்களாகிய நாம் எவ்வளவோ நெஞ்சம் நொந்து கதறியழுகின்றோம்.

அத்தியாயம் - 11 தொடரும்
பதிவு -14.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்