தமிழர்மதம்

தமிழர்மதம்-
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 12
"கொல்லா அறம்".

இந்த வழியை முதன்முதற்கண்டறிந்து அதற்கேற்பத்தமது இம்மைவாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன்மக்களாயிருந்த ஒரு பெரும் பகுதியாரேயென்பது கருத்திற்பதிக்கற்பாற்று. தமிழரில் மேன்மக்களைத்தவிர, மற்றவை மக்கட்பிரிவினரிலுள்ள எந்த மேன்மக்களும், இவ்வருமருந்தன்ன உண்மையினைக்கண்டறிந்திலர்; இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்,
"எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வருஉ மேவற் றாகும்" (பொருளதிகாரம் 223) என்று மொழிந்தமையால் அறியப்படும்.

தமிழ்மேன்மக்கள் எந்தப்பிறவியையும் கொல்லுதலும் ஆகாது, ஒரு பிறவியைக்கொன்று அதன் ஊனைத்தின்னுதலும் ஆகாது என்னுங்கொள்கையினை விடாப்பிடியாய் கொண்டுநிற்கலாயினர். தெய்வப்புலமை திருவள்ளுவநாயனார்,
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்" என்றும்,
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று" என்றும், வலியுறுத்திக்கூறியிருத்தல் காண்க.

தமிழ்மேன்மக்களில் இக்கொல்லாவறத்தினை விடாப்பிடியாய்க்கொண்டு ஒழுகினவர்கள் வேளாளரேயென்பது "பட்டினப்பாலை" என்னும் பழையபாட்டினால் நன்கறியப்படுகிறது. இவர்கள் முழுமுதற்கடவுளை "சிவம்" என்னும் டபெயரால் அழைந்துவணங்கிவந்தமையின், இவர்கள் இடைப்பட்ட காலத்திலிருந்து "சைவர்" எனவும் பெயர்பெறலாயினர். இவர்கள் கைக்கொண்ட கொல்லாவறமும், அவ்வேளாளர்வழியே "சைவம்" என வழங்கப்பட்டுவருகிறது.  புலாலுணவு விட்டாரை "சைவமாயினர்" என வழங்கும்வழக்கும் இன்றுகாறும் நடைப்பெற்றுவருகிறது. கொல்லாவறம் சமண்சமயத்தார்க்கே சிறப்பாகச்சொல்லப்படினும், புலவுத்துறந்தாரை "சமணர்" என்றுரையாமல், "சைவர்" என்றே எல்லாரும் வழங்கிவருதலை உற்றுநோக்குங்கால், இத்தென்றமிழ்நாட்டில், சமண்சமயத்தார் வருவதற்கு பலநூற்றாண்டுகள் முன்னேதொட்டு சைவவொழுக்கத்தில் தலைநின்றவர் சைவசமயத்தவரான வேளாளர்களேயென்பது தெற்றெனப்புலனாகிறது.

பண்டைக்காலம்முதல் இற்றைக்காலம்வரை வந்த தமிழாசிரியரரும், அவர்தம்மெய்யுரை வழிநின்றொழுகிய வேளாண்மாந்தரும், இம்மைவாழ்க்கை எல்லாவுயிர்க்கும் இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாததான கொல்லா அறத்தினை முதன்முதற்கண்டறிந்து, அதனைத்தமக்குரிய முதற்பெருங்கொள்கையாக கடைப்பிடித்துவரலாயினர் என்பது இனிதுவிளங்கிநிற்கும். வடக்கிருந்த சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலாயினாரும் கொல்லாவறத்தினை விடாப்பிடியாய்க்கொண்டு ஒழுகினவரல்லரோவெனின்; சமணசாக்கியர் முதலான அவரெலலாம், ஆரியர் வருதற்கு முன்னமே இமரமலைவரையிற்பரவி நாகரிகத்திற்சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத்தமிழ்மேன்மக்களின் மரபில் வந்தவரேயென்பது ஆராய்ச்சியாற்புலனாதலின், பண்டைத்தமிழ்மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற்கண்டாரென்னும் எமதுரை சிறிதும் பிறழாது.

அத்தியாயம் - 12 தொடரும்.
பதிவு - 16.


Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்