தமிழர்மதம்
தமிழர்மதம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் - 8.
திராவிடஆரியரில் நாற்சாதி.
ஆரியர்க்குள் இல்லாத பார்ப்பனசாதி, நடுநாட்டிலிருந்த இத்திராவிடஆரியர்க்குள் மட்டுமே தோன்றிவளர்ந்தமை வடமொழிவல்ல ஆசிரியர் மாக்டானல் (Macdonell) என்பவரால் நன்கெடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.
திராவிடஆரியக்கலப்பில் புதிதாய்த்தோன்றிய பார்ப்பனரே, தமக்கு பிறப்பினாலேயே எவர்க்குமில்லா ஓர் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, அவ்வுயர்வு தாம் இறைவனது முகத்தினின்று தோன்றியமையால் உண்டாயதென கட்டிச்சொன்னாலன்றி தமிழ்ப்பொதுமக்கள், அதனை ஒப்புக்கொள்ளாரெனக்கண்டு அவரை அவ்வாற்றால் ஏமாற்றி, தமதுயர்வினை நாட்டுதற்பொருட்டு அப்புருஷசூக்தப்பதிகத்தை இயற்றி அதன்கண் நுழைத்தாராகல் வேண்டுமென்பது சிறிது ஆராய்ந்துபார்க்க வல்லாருக்கும் நன்கு விளங்கிநிற்கும்.
வடக்கே நடுநாட்டிலிருந்து உண்டான பார்ப்பனர் திராவிடஆரியக்கலப்பில் தோன்றிய இருபிறப்பாளரேயன்றி தனிப்பட்டஆரியர் அல்லரென்பதூஉம், அது பற்றியே தனிப்பட்டஆரியரை நாகரிகமில்லா "மிலேச்சர்" என அவர் இகழ்வாராயினர் என்பதூஉம் தாமேபோதரும் (மது : 2, 23).
வடக்கே கங்கையாற்றை அடுத்த நடுநாட்டிலிருந்த பார்ப்பனரே ஆரியரல்லாதபோது, விந்திய மலைக்கு தெற்கேயுள்ள நாடுகளிலும், இத்தென்றமிழ் நாட்டிலுமுள்ள பார்ப்பனர்கள், தம்மை ஆரியரென உயர்த்துப்பேசிக்கொள்வதும், தம்மவரல்லாத தமிழர் அனைவரையும் "சூத்திரர்" என்னும் இழிமொழியால் இழித்துப்பேசிவருவதும், அறிவுடையோர் செயலாகுமோ சொல்லுங்கள்.
வடநாட்டுஆரியராதல், வடநாட்டுமன்னராதல் கி.பி. முதல்நூற்றாண்டு வரையில் பெருந்தொகையினராய் தமிழ்நாட்டிற்போந்து நிலைபெறுதற்கு இடம்பெற்றிலரென்பது தேற்றமேயாம். அங்ஙனமாயின், கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் ஆரியர், தமிழ்நாடு புகுந்து நிலைப்பெற்றாரெனக்கூறுதல் ஆகாதோவெனின்; ஆகாது.
அத்தியாயம் -8இன் முடிவு.
பதிவு -9.
Comments
Post a Comment