தமிழர்தம்.

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் -14இன் தொடர்ச்சி,
"பன்மனைவியர் மணம்".

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட  இறையனாரகப்பொருளின்,  "காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்ததே" என்னும் சூத்திரத்திற்கு, தொல்லாசிரியர் நக்கீரனார் உரைத்த உரையிலிருந்து எடுத்துக்காட்டுதும்.

பண்டைக்காலத்திருந்த பெற்றோர்கள் தம் புதல்வர்கட்கு உரிமையாக தத்தஞ்செல்வவளத்திற்கு தக்கபடி, பெண்கள் இருவர் மூவரை அவர்க்கு  காமக்கிழத்தியராக வளர்த்துவைப்பர். தம்புதல்வன் தன்னாற்காதலிக்கப்பட்ட ஒரு மங்கையை மணஞ்செய்துகொண்டபின், அவன்றன் மனைவி மகபெற்றனளாயின், அம்மகவு நன்குவளர்ந்து  சிறுவன் சிறுமியாகும்வரையில், அவன் தன்மனைவியை அணுகாமைப்பொருட்டு, அவனுக்கு உரிமையாக தாம்வளர்த்த இளமங்கையரை அவன் பெற்றோர்கள் அவனுக்கு மனைவியாக அமைத்துவைப்பர். இவ்வாறு தனக்கு அமர்த்தி வைக்கப்பட்ட மனைவியரை ஒருவர்பின் ஒருவராய்க்கூடி வாழ்க்கை நடத்திநிற்பனாகலின், அவன்றன் காதற் முதன்மனையாளும் ஏனை மனைவியரும் அடுத்தடுத்து மகப்பெற்றுவளர்க்கும் துன்பத்திற்கு ஆளாகாமலும், தங்கணவனை தொடர்பாக மருவி தமதுடல்நலத்தையும் தாம்பெறும் மக்களின் உடல்நலத்தையும் பழுதுபடுத்தாமலும், மனநல உடல்நலன்கள் நன்கு வாய்க்கப்பெற்று கிட்டத்தட்ட நூறாண்டுகள் வரையில் இனிதுயிர் வாழ்ந்துவந்தனர். அவர்தந்கணவரும் கவலையும் நோயுந்துன்பமும் இலராய் செவ்வனே இன்பந்துய்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்து நின்றனர்.

காதலின்மணந்த முதன்மனைவிக்குபின், பெற்றோர்களால் வளர்த்து அமர்த்திவைக்கப்பட்ட மனைவியர் 'காமகிழத்தியர்' அல்லது 'இற்பரத்தையர்'  என்னும் பெயருடையராய் தலைமகனோடு ஒருங்கிருந்து வாழ்க்கை செலுத்திய வரலாறு,
"காமக் கிழத்தி மனையோ ளென்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்" என்னும் தொல்காப்பிய கற்பியற்சூத்திரத்தால் (5) நன்கறியக்கிடக்கின்றது. தொல்காப்பியர் காலம் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பண்டைக்காலம்முதல் இடைக்காலம் வரையில் பெருகியும், அதன்பின் இக்காலத்தில் அருகியும் நடைபெற்றுநிற்கும் பன்மனைவியர்மணம், இஞ்ஞான்றைத்தமிழ்மக்களுக்கு புதுமையாகவும்  பொருத்தமில்லாததாகவும் காணப்படலாம். பெண்பாலரும், அவர்வயிற்றில் பிறக்கும்பிள்ளைகளும், அவர்தங்கணவரும் நோயுங்கவலையும் வறுமையுந்துன்பமுமின்றி தமக்கும்பிறர்க்கும் பயன்பட்டு நீடுவாழ்தலை விழைவார்களானால், பழந்தமிழ் சான்றோர் வகுத்த இப்பன்மனைவியர் மணவாழ்க்கையை குற்றமாகவும் புதுமையாகவும் காண்பார் அல்லர்.

அத்தியாயம் - 14 தொடரும்.
பதிவு - 23.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்