தமிழர்மதம்.

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 7.
ஆரியருள் சாதிவகுப்பு இல்லை.

இவ்விந்தியநாட்டுள் வந்துகுடியேறுதற்கு முன்னமே மேற்கிளந்த நால்வேறுவகை சாதிப்பகுப்பு ஆரியர்க்குள் இருந்ததாயின், அஃது இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களில் அவராற்பாடப்பட்ட பதிகங்களில் காணப்படுதல் வேண்டும்; ஆனால், அவைகளில் அது சிறிதுமே காணப்படவில்லை. இருக்குவேத ஒன்பது மண்டிலங்கள் வகுத்துவைத்தபின், நெடுங்காலஞ்சென்று  இருக்குவேத பத்தாம் மண்டிலமாகிய இறுதிப்பகுதி திரட்டிச்சேர்க்கப்பட்டதென ஆராய்ச்சிவல்ல ஆசிரியர் அனைவரும் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றனர்.

இங்ஙனம் நெடுங்காலத்திற்குப்பின் சேர்க்கப்பட்டதாகிய இருக்குவேத பத்தாம்மண்டிலத்தின் தொண்ணூறாம் பதிகத்தின் பன்னிரண்டாஞ்செய்யுளில் மட்டுமே, "பிராமணர் விராட்புருஷனுக்கு வாய்ஆவார்; அவனுடைய இரண்டு தோளிலிருந்தும் இராஜந்யா உண்டாக்கப்பட்டனர்; அவன் தொடைகள் வைசியர் ஆயின; அவனுடைய அடிகளிலிருந்து சூத்திரர் தோற்றுவிக்கப்படடனர்", என்று நால்வகை சாதிபகுப்பு நவிலப்பட்டிருக்கின்றது.

ஆரியர் வருவதற்கு முன்னமே தமிழர்க்கு தொழில்வேற்றுமைப்பற்றி இயற்கையாயிருந்த அந்தணர், அரசர், வணிகர், பதிணெண்டொழிலாளர் என்னும் மக்கட்பாகுபாடே, மநுவினாலோ அல்லதவன் வழிவந்த வேறேவராலோ நாற்சாதியாக மாற்றப்பட்டு, இருக்குவேத பத்தாம் மண்டிலத்தில் நுழைக்கப்படலானமை தெற்றெனப்புலனாகிறது. இருக்குவேத புருஷ சூக்தத்தில், பிறப்பனால் பார்ப்பனருக்கு ஏனையெல்லாச்சாதியாரினும் பார்க்க, மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்றுநோக்குங்கால், அப்பதிகத்தை படைத்து அதனுள் நுழைந்தவர் ஒரு 'திராவிடஆரிய' பார்ப்பனரே ஆவாரென்பது துணியப்படுகிறது. 

இஞ்ஞான்றும் ஆரியப் பழக்கவழக்கங்கள் மிகுந்துள்ள வடநாட்டில் உறையும் பார்ப்பனர்கள் ஊன் உணவு கொள்பவராய் இருத்தலின், அவர் தம்மினத்தவர் அல்லாத மற்றவை வகுப்பினரை இழிவுபடுத்தக்காணோம். அவர் ஓரேகூடத்தில் தம்மவரல்லாத மற்றை இனத்தவர் காணயிருந்து, அவர் காண உணவு கொள்ளுதலையும், யாம் வடநாடு சென்றஞான்று நேரே கண்டிருக்கின்றோம்.

மற்று, திராவிட ஆரிய கலப்பிற்றோன்றி தென்னாட்டில் உறையும்  பார்ப்பனரோ, ஏனைவகுப்பினர் அனைவரையும், 'அடிமைகள்',  'வைப்பாட்டிமக்கள்' எனப்பொருள்படுஞ் "சூத்திரர்" என்னும் இழிசொல்லால் மிக இழித்துப்பேசி, அவரைத்தொடுதலும் ஆகாது, தாம் உணவருந்துங்கால் அவர், தம்மைக்காண்டலும் ஆகாதென ஒரு பெருங்கட்டுப்பாடு வகுத்துக்கொண்டு, தாமே இம்மாநிலத்தேவர்கள் என தம்மைத்தாமே உயர்த்துச்சொல்லி, தமக்கு பிறப்பினாலேயே பெரும்பெருமை தேடுபவராயிக்கின்றனர்.

இத்தன்மையனரான இத்தென்னாட்டு பார்ப்பனரன்றி வேறெவர்தான், தாம் இறைவனது முகத்தினின்றும் பிறந்தவரென்று சிறிதும் அச்சமின்றி, அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத்துணிவர்? அதனை எண்ணிப்பார்க்குங்கால், தென்னாட்டுப்பார்ப்பனர் எவரோ அப்பருஷசூக்த பதிகத்தைப்படைத்து இருக்குவேத பத்தாம் மண்டிலத்தில் நுழைத்து விட்டாரென்பது திண்ணமாய் பெறப்படுகிறது.

அத்தியாயம் 7-இன் முடிவு.
பதிவு - 8.



Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்