தமிழ்மரபுநடை

அறிஞர்தமிழா?
அச்சுக்கோர்ப்பவர்தமிழா?

"தமிழில் எழுதும்போது நாம் செய்கின்ற பிழைகளிலொன்று - ஒரு சொல்,. முதல்வரியில் முடியாமல் அடுத்தவரியில் தொடரும்போது, ஒரு சிறுகோடிடுதல் (hyphen) மரபு. தமிழில்மட்டும் நாம் இதை கடைபிடிப்பதில்லை. ஆனால், ஆங்கிலத்தைப்பொருத்தவரை இதை நாம் சரியாகச்செய்கிறோம். தமிழ்நாட்டிலிருந்துவெளிவருகிற ஆங்கிலப்பத்திரிக்கைகளை பாருங்கள். இந்த பிழை காணப்படாது". இவ்வாறு , மருத்துவர் வ.பொன்முடி அவர்கள் தாமெழுதிய "தமிழ்வெல்லத்தாழி" என்ற புணர்ச்சியிலக்கண நூலில் கூறியுள்ளார். இதுபற்றிய சிந்தனையின் விளைவே இப்பதிவு.

நாம் புத்தகங்களை அச்சிடும்போது, எழுத்துகோர்வைக்கு செவ்வகவடிவத்தை, ஒரோவொருக்கால் சதுரவடிவத்தை தேர்வுசெய்துகொள்கிறோம். இவ்வடிவத்தில் இடது வலது ஓரங்களில் எழுத்துகள் அமையுமாறு அச்சுக்கோர்க்கிறோம். இவ்வாறு செய்தால்தான் செவ்வக அல்லது சதுரவடிவம் மாறாது அமையும். இந்த வடிவ நிர்ணயம் தான் சொற்களை உடைப்பதற்கான மூலகாரணம். இதனால் space adjustment -க்காக ஒரு சொல்லை உடைப்பது, தொடர்மொழிகளை பிரிப்பது முதலான சரிகட்டல்களை அச்சுக்கோர்ப்பவர்கள் செய்கிறார்கள். இதில் அச்சுக்கோர்ப்பவர்களின் குறைந்தமொழியறிவு, சிரத்தைக்குறைவு, சுணக்கம் முதலான காரணங்களால், நூலாசிரியர் குறிப்பட்ட
 குறைபாடு நிகழ்கிறது. அதுமட்டுமல்ல, சொற்செட்டு சிதைவு, தொடர் பிரிப்பு முதலானவையும் நிகழ்ந்து, தமிழ்மொழியின் மரபுநடை பாழ்படுகிறது. வாசிக்கும்போது ஆற்றோட்டமான வாசிப்பிலும் சிறுகுறு தடைகள் ஏற்படுகின்றன.

இப்பிழைகளைய, சிறுகோடிடுவது (hyphen) ஒரு முழுமையான தீர்வாகாது. செவ்வக, சதுரவடிவில் எழுத்துகளை கோர்க்கவேண்டுமென்ற முறையை நாம் கைவிடவேண்டும்.  ஒரு வரியை இடதுபக்கம் ஆரம்பித்து எழுத்துகளை கோர்த்துக்கொண்டு செல்லும்போது, வலதுமுடிவில் ஒரு சொல்லையோ, தொடரையோ முழுவதுமாக எழுத இடமில்லையென்றால், அச்சொல்லை அடுத்தவரிக்கு கொண்டுவந்துவிடவேண்டும்.

இப்படி செய்வதால் வலது ஓரத்தில் சில எழுத்துகளுக்கான காலியிடம் இருப்பதனால், அச்சிடும் பக்கங்களின் எண்ணிக்கை கூடிவிடுமென எண்ணத்தோன்றும்.  நாம் ஒரு பத்தியை முடிக்கும்
 கடைசிவரியில், இவ்வாறான காலியிடம் நிறைய இருப்பதையறிவோம். இக்காலியிடம், பதிய உத்திக்கு தேவைப்படும் இடவசதியை பெருமளவுக்கு பூர்த்தி செய்துவிடும்.
மிஞ்சிப்போனால் புதியவுத்தியினால் ஓரிரு பக்கங்களே கூடுதலாக தேவைப்படும். ஒரு புத்தகத்தில் எப்படியும் சில பக்கங்கள் எதுவுமே அச்சிடப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கும். மேலும், ஒரு அத்தியாயம் முடிந்து, அடுத்த அத்தியாயம் துவங்கும்போது கால், அரை, முக்கால் பக்கங்கள் காலியாக இருக்கும். இவைகள் சரியாக பயன்படுத்தப்படுமானால், கூடுதல் பக்கங்கள் தேவைப்படாது.

நான் சொல்லும் முறை புதியதல்ல. நாம் எழுதும்போது கடைப்பிடிக்கும் முறைதான். நாம் முகநூல் பக்கத்தில் எழுதும்போது இந்தமுறைதான் நமக்கு அமைத்துத்தரப்பட்டுள்ளது.
இதனையே புத்தகங்கள அச்சிடும் போதும் பயன்படுத்தவேண்டும். அவ்வளவே.

இது செயல்படுத்தப்படுமானால்,  சொற்களை உடைத்தல், புணர்த்தப்பட்டபின்னும் சொற்களை பிரித்தல், தொடரை பிரித்தல் முதலான குறைகள் களையப்பட்டு, தமிழ்மொழியின் மரபுநடை மீளும்; வாசிப்பவர்களுக்கு அது இயல்பாக சித்தத்தில் பதியும்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்