தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 12இன் தொடர்ச்சி.
"கொல்லா அறம்".

தமிழ்மக்கட்குரிய கொல்லாவறம், அவர்கள் பண்டைக்காலத்தே வாணிபம் புரியச்சென்ற அயல்நாடுகளிலிருந்த அறிஞர்களாலும் மிகச்சிறந்ததாகக் காணப்பட்டு, அவர்களால் அக்காலத்திலேயே தழுவப்பட்டமை அத்தேய வரலாறுகளால் நன்கறியக்கிடக்கின்றது. இற்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நாகரிகவாழ்க்கையில் மிக்குவிளங்கிய எகுபதியருடைய (Egyptians) சமயநூல்களும், எதியோப்பியருடைய சமயநூல்களும் ஊனுணவை அறவே விலக்கிவிடல் வேண்டுமென்று கட்டளையிடுகின்றன. அவர்க்குப்பின் நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய கிரேக்கரும் உரோமரும், கட்குடி கூடாவொழுக்கங்களை கைக்கொண்டு தம்அருமைபெருமைகளை இழப்பதற்குமுன், சைவ உணாப்பொருள்களையே உண்டுயிர் வாழ்ந்துவந்தனர். சீனம், சப்பானிலுள்ள பௌத்தமடங்களில் பெருங்கூட்டமாய் உயிர்வாழுந்துறவிகள், எந்தவகையான ஊனுணவும் எடாமையோடு, வெண்ணெயும் பாலுங்கூட உட்கொள்வதில்லை. தமிழரின் கொல்லாவறம் இக்காலத்திற்போல அக்காலத்தும் அயல்நாடுகளிலிருந்த அறிஞர்களால் சிறந்ததொன்றாகத் தழுவப்பட்டதேயன்றி, அஃதவர்களால் விலக்கப்பட்டதில்லை யென்பதை அன்பர்கள் கருத்திற்பதித்தல் வேண்டும்.

ஆசிரியர் திருவள்ளுவர்,
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று", எனச்சொல்லியுள்ளார். இவ்வாறு திருக்குறளைப்போல் கொல்லாவறத்தை இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, ஏனையெல்லா அறங்களுக்கும் தலையாயமுதலிடத்தே தனிவைத்துரைத்த ஓர் அறநூலை, வேறெந்த அயல்நாட்டு மதநூல்களிலுங்காண்கிலம்.

விவிலியத்தை இம்மையொழுக்கத்திற்குரிய அறங்களைக்கூறுகின்றுழி கொல்லாமையை முதல்வைத்துரைப்பினும், அதுகூறிய கொல்லாமையென்பது ஆறறிவுடையமக்களை கொல்லாமையென்றே அதற்கு உரைவகுத்தார் பலரும் உரைப்பக்காண்டலின், அதன்கண் சிற்றுயிரைக்கொல்லாமையும் அடங்குமென்று உறுதிப்படுத்திக்கூறுதல் இயலாததாயிருக்கின்றது.

அத்தியாயம் - 12 முடிந்தது.
பதிவு - 19

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்