தமிழர்மதம்
தமிழர்மதம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் - 12இன் தொடர்ச்சி.
"கொல்லா அறம்".
தமிழரில் வேளாளர் என்னும் ஒரு வகுப்பாரைத்தவிர, மற்றையோரெல்லாரும் ஊன் உண்பவராகவேயிருத்தலாலும், தமிழ்நாட்டிற்குப்புறம்பேயுள்ள பெரும்பெருந்தேயங்களில் உறையும் பெரும்பெருந்தொகையினரான மக்கட்பிரிவினர் அனைவரும், ஊணுண் வாழ்க்கையினராகவே யிருத்தலாலும், இம்மைவாழ்க்கைக்கு சிறந்தது கொல்லாவறமே என்றுகூறுதல் பொருந்துமோவெனின், கூறுதும்.
உயிர்கள் இயற்கையாகவே மறைக்கப்பட்டஅறிவினராயும், அதனால் பலகுற்றங்களுடையாராயும் இருத்தல் எளிதில் புலனாகும். இவ்வுடம்பொடுகூடிய உயிர் வாழ்க்கை நீளநீள இவ்வுயிர்கட்குள்ள அறியாமையும் சிறிதுசிறிதாக விலகியொழிய, அவர்களது அறிவும் வரவர விளக்கமுடையதாகி விரிதலுறுகின்றது. அதனால், அவர்கள் பாலுள்ள குற்றங்களும் வரவர குறைந்துபோகின்றன. ஆகவே, இப்பிறவி கொடுக்கப்பட்டதன்நோக்கம், அறியாமையை அகற்றி, அறிவைத்துலக்கி குற்றங்குறைகளை தொலைப்பதற்கேயாகுமென்பது நன்கு விளங்குகின்றதன்றோ? இவ்வுடம்பு ஆறறிவுவாய்ந்த மக்களாகியநமக்கு இன்றியமையாததாய் இருத்தல்போலவே, ஆறறிவிற்குறைந்த எல்லாச்சிற்றுயிர்கட்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது.
புலி கரடி சிங்கம் ஓநாய் முதலான மறவிலங்குகள் ஏனைசிற்றுயிர்களை இரக்கமின்றிக்கொன்று , அவற்றின் ஊனைத்திண்ணுகின்றன. அங்ஙனமே ஆறறிவுடையமக்களும் செய்துவருவார்களானால், அம்மறவிலங்குகளுக்கும் இம்மக்களுக்கும் வேறுபாடு என்னை?
இம்மாநிலத்துறையும்மாந்தரில் எவரோ ஒருசிலர் ஒழிய, மற்றையெல்லாரும் குற்றமான எண்ணங்களும், குற்றமான செயல்களுமான பொய் பேசுதல், பொறாமைகொள்ளுதல், அவாவுற்று அலைக்கழிதல், புறங்கூறல் முதலானவை உடையராகவிருக்கின்றனர். அதுகொண்டு இவை விலக்கற்பாலதன்றென விளம்புவார் உண்டோ? இல்லையே. எத்துணைக்கொடிய குற்றங்களையும் தம்குற்றமாக நினையாமற்செய்வாரும், தாஞ்செய்யுங்குற்றத்தில் ஓர் எள்ளளவு தமக்கு, பிறர்செயக்கண்டால் அவரை வெறுக்கின்றமை நாடோறும் மக்கள்வாழ்க்கையில் காணப்படுகின்றது.
குற்றமான ஒருகொடியசெயலை எலலாருஞ்செய்தல்கண்டு, அதனைக்குற்றமெனக்கருதாமை பகுத்தறிவுவாய்ந்த மக்களாகியநமக்கு அடுத்ததன்று. பகுத்தறிவு பெற்றநாம் இச்சிறந்த பிறவியினைப்பெற்றது எதற்கு? உண்டுடுத்து உறங்கிக்கழிவதற்கா?
அத்தியாயம் - 12 தொடரும்.
பதிவு - 18.
Comments
Post a Comment