தமிழர்மதம்
தமிழர்தம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் - 10இன் தொடர்ச்சி,
"மதம் இன்னதென்பது".
கௌதமபுத்தர்காலத்திலிருந்து வடநாட்டுபார்ப்பனர் தென்றமிழ்நாடு புகுந்து, சோழ பாண்டிய அரசர்களை தம்வயப்படுத்தி, அவருதவியாற் பலவேள்விகள் வேட்டு, ஆரியச்சிறுதெய்வ வெறியாட்டுவேள்வியை இந்நாட்டில் பரப்பமுயன்றாராயினும், அருளொழுக்கத்திலும் ஒருமுழுமுதல்கடவுள் வழிபாட்டிலும் உறைந்துநின்ற வேளாண்மாந்தர்க்கும், அவரையே பெரிதுஞ்சார்ந்த ஏனைத்தமிழ்ப்பொதுமக்கட்கும், ஆரியவேள்வி இசையாமையின், அஃதிங்கு வேரூன்றாமலே ஒழிந்துபோயிற்று. ஆயினும், இங்கு வந்த வடநாட்டுப்பார்ப்பனர் தமிழ்ப்பொதுமக்களுடன்கலந்து, தமிழ்மொழியை நன்கு பயின்று, அதில் வல்ல நல்லிசைப்புலவர்களாயும், தமிழ்த்தெய்வமாகிய சிவபிரானையே வணங்கி, தமிழ்மேன்மக்கள் கொள்கையின் பாலராயும் மாறிவிட்டமையின், ஆரியமதம், தமிழர்மதமென இருவேறுமதங்கள் தோன்றுவதற்கு இடமில்லாது ஒழிந்தது.
ஆயினும், வடநாட்டுப்பார்ப்பனரை தொடர்ந்து, இத்தமிழ்நாடு போந்துநிலைப்பெற்ற பௌத்த சமணர்களாலேதாம் இங்கே பல்வேறு மதங்களும் மதவழக்கங்களும் கிளைக்கலாயின என்றறிதல்வேண்டும். அசோகவேந்தன் காலத்திலிருந்து கி.பி. முதல்நூற்றாண்டுவரையில், சிறிதேறக்குறைய முந்நூற்றாண்டுகளாக இங்குவந்து அமைதியாய்வாழ்ந்த பௌத்த, சமணர்கள், சோழ பாண்டிய அரசுகள் நிலைகுலையலான கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம்முதல் தமிழ்நாட்டின்மேல் படையெடுத்துவந்த கருநடமன்னரின் துணைக்கொண்டு, தஞ்சமயக்கொள்கைகளை இந்நாட்டின்கண்பரப்ப மிகமுயன்று, தங்கொள்கைகளுக்கு இணங்காத தமிழ்மக்களையெல்லாம் தம்மதங்களில் திருப்புதற்கு பலதீயமுறைகளையெல்லாம் கையாள்வாராயினர்.
இதனால், ஒருசார்கொள்கையினை உடையார் பிறிதொருசார்கொள்கையை உடையாரினின்று தம்மை வேறுபிரித்துக்காட்டுதற்கும், பிறரைத்தம்மினின்று வேறுபிரித்துக்காட்டுதற்கும் சைவரென்றும், வைணவரென்றும், பௌத்தரென்றும், சமணரென்றும், உலகாயதரென்றும், மாயாவாதிகளென்றும் வெவ்வேறுகுழுவினர்க்கு வெவ்வேறுசமயப்பெயர்கள் கொடுத்து வழங்குவாராயினர். இவ்வாறுண்டான பலவேறுமதங்களும் வடக்கிருந்து வந்தவராலேதாம் பல்கினவென்பதற்கு, அம்மதங்கள் பலவும் வடமொழிப்பெயர்கொண்டு உலவுதலும், அம்மதங்களைப்பற்றிய நூல்களெல்லாம் வடமொழியிலேயே வரையப்பட்டிருத்தலுமே உறுபெருஞ்சான்றாம்.
இதனை நன்குணர்ந்தே சுவாமி விவேகானந்தரும், மதச்சண்டைகளும் சாதிவேற்றுமை கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங்கருவியாய் இருந்ததும் இருப்பதும் ஸமஸ்கிருத மொழியேயாகுமென்றும், ஸமஸ்கிருதமொழி நூல்கள் தொலைந்துபோகுமானால், இப்போராட்டங்களும்தொலைந்துபோகுமென்று வருத்திக்கூறினார்.
பழைய தமிழ் நூல்களில் சமயப்போருக்காவது சாதிச்சண்டைக்காவது சிறிதும் இடமில்லாதிருத்தலை, அவற்றைப்பயில்வார் நன்குணர்வர்.
அத்தியாயம் - 10இன் முடிவு.
பதிவு - 13.
Comments
Post a Comment