தமிழர்மதம்.

தமிழர்தம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 13.
"காதலன்பு".

கொல்லாவறத்திற்கு அடுத்தபடியாக, இம்மைவாழக்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாததான இல்லொழுக்கம் மிகவுந்தூயதான அன்பையே தனக்குயிராக்கொண்டு  நிகழவேண்டுமென்பதுதான் தமிழரின் இரண்டாவது கொள்கையாதல் பண்டைச்செந்தமிழ்நூல்களால் அறியக்கிடக்கின்றது. கணவனும்மனைவியும் காதலன்பில் பிணைந்து நடத்துவதே இல்லொழுக்கமாகும். கணவனும்மனைவியும் கூடுங்கூட்டம் இல்லையானால் இல்லொழுக்கமேயில்லை. இல்லொழுக்கம் இல்லையானால் இம்மண்ணுலகில் மக்கள் எவருமேயிரார். அன்பும் இன்பமும் மக்கள் இருவரின் சேர்க்கையிலேதான் நிகழ்வனவா- யிருக்கின்றன. அம்மக்களுள்ளும் ஆண்பெண்பாலரின் சேர்க்கையே, தொடர்பான உண்மையன்பிற்கும், தொடர்பான இன்பநுகர்ச்சிக்கும் கருவியாயிருகின்றது. இவ்வாய்மை கண்டே ஆசிரியர் தொல்காப்பியனார் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்குமுன்னமே ஆண்பெண்பாலாரின் சேர்க்கையை நுவலும் "அகத்திணையியலை" முன் வைத்து, அவரல்லாத ஏனைப்பிறரின் சேர்க்கையை நுவலும் "புறத்திணையியலை" அதன்பின் வைத்து பொருளோத்தினை அருளிச்செய்தார்.

ஓர் ஆண்மகன் தன்னாற்காதலிக்கப்பட்ட ஒரு பெண்மகளையும், ஒருபெண்மகள் தன்னாற்காதலிக்கப்பட்ட ஓர் ஆண்மகனையும் மணந்து வாழ்க்கை செலுத்துதல் வேண்டுமென்பதே பண்டைத்தமிழ்மேன்மக்களின் கொள்கையாயிருந்தது. பண்டைத்தமிழ்மக்கள் வேறெதனையுங்கருதாது காதல்ஒன்றனையே மேலதாய்க்கருதி காதன்மணமே செய்துவந்தனரென்பது, தொல்காப்பியம், அகநானூறு, திருச்சிற்றம்பலக்கோவை முதலான பழந்தமிழ்நூல்களால் அறியக்கிடக்கின்றது.

மகளிரது கற்பொழுக்கத்தைக்காத்து நிலைபெறுவித்தற்கு, அவர் தங்காதலர்மேல்வைத்த உண்மைப்பேரன்பே துணைசெய்யுமல்லது, வேறுகாவலுங்கட்டுப்பாடும் துணைசெய்யாதென்பது பண்டைத்தமிழ்மக்களால் நன்குதெளியப்பட்டதாம்.

அத்தியாயம் -13 தொடரும்.
பதிவு - 20.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்