எழுவாய்த்தொடர்.
பிழைகள் - எழுவாய்த்தொடரைப்- பிரித்தெழுதுதல்.
எழுவாய்த்தொடரென்பது எழுவாயும் வினைமுற்றும் புணர்ந்து ஒரு தொடர்மொழியாவதாகும். எழுவாயும் பயனிலையும் புணர்ந்துவரும் தொடர்மொழிக்கு 'எழுவாய்த்தொடர்' என்பதும் பெயர்.
'மழைபெய்தது', 'வெயிலடித்தது' என்பவற்றைப்பாருங்கள். இவற்றில் மழையென்பதும் வெயிலென்பதும் தத்தமது வினைமுற்றுக்களுடன் புணர்ந்து நின்று எழுவாய்த்தொடராகின்றன.
எழுவாய்த்தொடரை, தொடராயெழுத வேண்டுமா அல்லது பிரித்தெழுத வேண்டுமாவென்பது, நாம் சொல்லவரும் பொருளுக்குக்கான பொருட்சிறப்பை, அந்த சொற்களுள் முதற்சொல்லுக்கு அளிக்கிறோமா அல்லது இரண்டாவதுசொல்லுக்கு அளிக்கிறோமா என்பதே முடிவுசெய்யும்.
இந்த வாக்கியத்தைப்பாருங்கள். "மழை பெய்துகொண்டேயிருந்தது".
இதில் மழையென்பதைவிடவும் அது பெய்துகொண்டேயிருந்தது என்பது சிறப்பித்து சொல்லப்பட்டுள்ளது.
*எழுவாய்த்தொடரும் அது பிரிந்துநிற்றலும்.
இந்த உரையாடலைப்பாருங்கள்.
மணி: நாளை உன் பிறந்தநாளன்றோ?
கண்ணன்: ஆமாம், நாளைதான் என் பிறந்தநாள்.
மணி: ஏன் வருத்தமாய்ப்பேசுகிறாய், உன் மாமாவந்திருக்கிறாரே?
கண்ணன்: மாமா வந்திருக்கிறார், ஆனால் அவர் இன்றே ஊருக்குப்போகிறார்!
'மாமாவந்திருக்கிறாரே?' என்ற இந்த வினாவில், எழுவாய்த்தொடரும் வினையெச்சத்தொடரும் உள்ளன.
இந்த வினாவுக்கான விடையில், 'மாமா வந்திருக்கிறார், ...' என்றிருக்கிறதன்றோ? இதில் மாமா என்ற எழுவாயும், 'வந்திருக்கிறார்' என்ற வினையெச்சத்தொடராகிய பயனிலையும் பிரிந்துநின்று, சொல்லவந்த பொருளில் மாற்றம்
கொண்டிருப்பதைப்பாருங்கள்.
இதைப்பேசும்போது, 'மாமா' என்பதற்கும் 'வந்திருக்கிறார்' என்பதற்குமிடையில் ஒரு சிறு இடைவெளிவிட்டுப்பேசுவதோடு, 'வந்திருக்கிறார்' என்பதில் சற்று அழுத்தங்கொடுத்துப்பேசுவது நமக்கு வழக்கமானது. இவ்வாறு, அழுத்தங்கொடுத்துப்பேசும்போதே, அதை கேட்பவரும் ஏதோ உட்பொருள் இருக்கிறதென்பதை உணர்ந்து கேட்பார். அதாவது, மாமா தன்னுடைய பிறந்தநாள்விழாவுக்கு தன்னுடன் இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தும் பொருட்டே, 'மாமா வந்திருக்கிறார், ... ' என்றுபேசுகிறான்.
எழுவாய்த்தொடரானது எப்பொருளில் தொடராயிருக்கும் என்பதும், எப்பொருளில் தொடராய் இருக்காதென்பதும் நன்குவிளங்குகின்றதன்றோ? எழுவாய்த்தொடர் மட்டுமல்லாமல் எல்லாத்தொடர்களுமே காரணத்தோடுதானமைகின்றன.
திரு. வ.பொன்முடி அவர்களின்
"தமிழ்வெல்லத்தாழி" என்னும் புணர்ச்சியிலக்கண நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.
Comments
Post a Comment