தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 12இன் தொடர்ச்சி.
"கொல்லா அறம்".
பழைய யூதமத்தினரும் ஊன் உண்ணாநோன்பின்கண் நின்றவரேயென்பது அவர்க்குரிய விவிலியவேதம் பழைய ஏற்பாட்டின் முதன்மறைப்பகுதியாலும், ஐசாயா, தானியேல் முதலான முனிவர்கள் அருளிச்செய்த அருளுரைகளாலும் நன்குபெறப்படுதலின், தமிழ்மேன்மக்களே கொல்லாவறத்தினை முதன்முதலில் கைப்பற்றியொழுகினாரென்றல் யாங்ஙமெனில்? கூறுதும். பண்டைக்காலத்தே மேனாட்டு கீழ்நாடுகட்குச்சென்று வாணிகம்நடாத்தினவர், இற்றைக்காலத்திற்போல, வேளாள வணிகரேயாவர். இவர்களே இருக்குவேதகாலத்தில் 'பணிகர்' என்றும், பாபிலோனியர்காலத்தில்‌ 'பிநீசியர்' என்றும் சொல்லப்பட்டவராவர்.

இவர்கள், தாம்வாணிகம்புரியச்சென்ற அயல்நாடுகளிலும் புலாலுண்ணா ஒழுக்கத்தில் தவறாதிருந்தமையால், இவர்களைப்பார்த்து அயல்நாடுகளில் இருந்தமக்களில் எவரோ ஒருசிலர் புலால்மறுத்த ஒழுக்கத்தை கைப்பற்றிநின்றாராகலின், அவர்கள்வழியே கொல்லாவறம் விவிலியவேத முதன்மறையிலும், வேறுசில இடங்களிலும் உயர்த்துச்சொல்லப்பட்டும் நிறைபெறலாயிற்று. யூதர்கள் கொல்லாவறத்தின் மேன்மைக்கண்டு, அதை அவரில் மேலோராயினர் கைக்கொண்டு ஒழுகியிருந்தால், சைவவேளாளர் பெருந்தொகையினராய் தமிழ்நாட்டில் இன்றைக்கும் உயிர்வாழ்ந்துவருதல்போல மேனாடுகளிலும் ஊனுண்ணாமக்கள் பெருந்தொகையினராய் காணப்படுதல்வேண்டும். அவ்வாறில்லாததால், அவரெல்லாம் கொல்லாவறத்திற்கு உரியரல்லரென்பது தேற்றமேயாம்.

தமிழ்மக்களில் மேலோராயிருந்த வேளாளரே முதன்முதல், ‌கொல்லாவறத்தின் விழுப்பமுணர்ந்து, அதனை கடைப்பிடியாய்க்கொண்டு ஒழுகினோராவரென்னும் உண்மை ஆணித்திறமாய் கருத்திற்பதிக்கற்பாற்று. கொல்லா அறத்தின்கட்பிறழாது கைக்கொண்ட முதற்பெருங்கொள்கையே தமிழர்மதத்திற்கு இன்றியமையா பேர் உறுப்பாய்ப்பிறங்குகின்றது என்பது உணரற்பாற்று.

அத்தியாயம் - 12 தொடரும்.
பதிவு - 17.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்