தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் -11இன் தொடர்ச்சி.
"தமிழர்கொள்கை".

நமக்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற்பெருகச்செய்யும் இவ்வுலகுடற்சேர்க்கை நமக்கு இனியதாகவே இருக்கக்காண்கின்றோமல்லது, இன்னாததாயிருக்கக்காண்கிலோம். தமது வாழ்வின் முன்னாளிலெல்லாம் இவைதம்மை வெறுத்துப்பாடிய மாணிக்கவாசகப்பெருமானே தமது பின்னாளில்,
"நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே யாட்கொண்டாய்,
மாயப் பிறவி யுன்வசமே
வைத்திட் டிருக்கு மதுவன்றி,
ஆயக் கடவேன் நானோ தான்?
என்னதோஇங் கதிகாரம்?
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே" என, அவ்வாறு தாஞ்செய்தது பிசகென உணர்ந்து உண்மையை ஒளியாமலே எடுத்திசைந்தார்.

இங்ஙனமே ஆசிரியர் திருமூலரும்,
"உடம்பா ரழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே" என்றும்,
"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே" என்றும்,  இருகால் அருளிச்செய்தார்.

இப்பிறவியை எல்லாரும் மிகவிரும்புவது, இஃது அறிவும் இன்பமும் பெறுதற்கு ஒரு ஒப்பற்ற கருவியாய் இருத்தல்பற்றியே யாமென்பதும் தெளியப்படுகின்றதன்றோ? இவ்வுலகியல் பொருள்களை பகுத்தாராய்ந்து உணர்ந்ததால் நமக்கு எவ்வளவு அறிவு வளர்கின்றது! நமதறிவு வளரவளர, அதனை பலதுறைகளிற்புகுத்தி பயன்படுத்தப்படுத்த, அவற்றை பயன்படுத்தத்தெரியாத காலங்களிற்பட்ட சொல்லற்கரும் துன்பங்களெல்லாம் நீங்கி, இப்போது நாம் எவ்வளவு நலன்களைப்பெற்று இன்புற்று வருகின்றோம்! அதுபற்றியே மக்களும் யுயிர்களும் இவ்வுலகவாழ்வினை துறந்துபோகவிரும்பாமல், அதன்கண் நிலைபெற்றிருப்பதற்கே விழைகின்றனர் என்பதூஉம் நினைவிற்பதிக்கற்பாலனவாகும்.

மக்கட்பிறவி யெடுத்தவர்களுள்ளும் ஏற்றத்தாழ்வான பலதிறப்பட்ட அறிவுடையவர்கள் இருந்தாலும், பொதுவாக எல்லாருந்தத்தம் அறிவுநிலைக்கேற்ப இப்பிறவியின் நோக்கத்தை உணர்ந்து பார்ப்பவராயும், இப்பிறவியால் மேன்மேலும் அறிவும்இன்பமும் பெறத்தக்கவழிவகைகளை நாடிமுயல்பவராயுமே இருக்கின்றனர். இப்பிறவியின் நோக்கத்தையும் பயனையும் சிறிதாயினும் ஆராய்ந்து பார்ப்பார்களானால், நாம் அறிவும்இன்பமும் பெறுதலில் ஆராவேட்கை யுடையராயிருத்தல் போலவே, ஏனையுயிர் ஒவ்வொன்றும் அங்ஙனமே அவற்றைப்பெறுதலில் அடங்கா வேட்கையுடையவாய் இருத்தலை எளிதில் அறிந்துகொள்ளலாம். ஆகவே, எந்த உயிரின் பிறவியையும் அழியாமல் நமது பிறவியின் பயனை நாம் அடையமுயலுதலே, நமக்கும் பிறர்க்கும் அறிவையும்இன்பத்தையும் பெருகச்செய்தற்கேற்ற வழியாகும்.

அத்தியாயம் - 11 முடிந்தது.
பதிவு - 15.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்