தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 9இன் தொடர்ச்சி.
தென்னாடு போந்த திராவிடஆரியர்.

இங்ஙனமாக, அசோகவேந்தன் காலத்தில் விந்தியமலைக்குத்தெற்கே வந்த திராவிடஆரியப்பார்ப்பனரே, நெடுக மராட்டியதேயத்திலும், ஆந்திர கன்னட மலையாளதேயங்களிலும், இத்தென்றமிழ் நாட்டிலும் குடியேறி, பல்வேறுவகைப்பிரிவினையுடைய பார்ப்பனர் ஆயினர்.

வடக்கிருந்துவந்த பார்ப்பனர் பல்வகைப்பறவைகள் மீன்கள் இறைச்சியுடன், மாட்டின்இறைச்சியையும் தின்றுவந்தனரென்பது இருக்கு முதலான வேதங்களாலும், அவற்றின் பிரமாணங்களாலும், மநு முதலான மிருதிநூல்களாலும் தெற்றென விளங்குகிறது.

இன்றைக்கும் வங்காளத்திலுள்ள பார்ப்பனர் ஊனுணவு கொள்வதை எவரும் நேரே சென்றுகாணலாம். இத்தமிழ்நாட்டிற்குடியேறி தமிழிற்சிறந்த புலவரால் வயங்கிய பார்ப்பனருங்கூட ஊனுணவை விலக்காமல் அதனை உட்கொண்டுவந்தமை, கபிலர்பாடிய "கடுக்கண்ண கொல்களிற்றால்" என்னும் புறநானூற்றுச்செய்யுளால் நன்கறியக்கிடக்கிறது.

இத்தமிழ்நாடு புகுந்த பார்ப்பனர், பண்டுதொட்டே ஊன்மறுத்த சைவ அருளொழுக்கத்தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம்பெறாமல், தம்போல் ஊனுணவு கொள்பவரான ஏனை இழிகுடித்தமிழருடன் மட்டுமே கலக்க இடம்பெற்று, தாந்தாங்கலந்த தமிழ்க்குடிமக்களின் ஏற்றத்தாழ்வுக்குத்தக்கவாறு, தாமுந்தம்முள் ஏற்றதாழ்வு பலவுடைய பல்வகைப்பார்ப்பனர் ஆயினர். இன்றைக்கும் மலையாளத்தில் நம்பூரிப்பாரப்பனரும் பிறரும் மலையாளமகளிரைக்கூடி வாழ்தல் எவரும் அறிந்ததோர் உண்மையன்றோ?

இன்னும், வடக்கிருந்து வந்த பாரப்பனரைப்பார்த்து, அவர் போல் ஆரியமொழியைக்கற்று, அதனையே கடவுள்வழிபாட்டிற்கும் மணசடங்கு பிணச்சடங்குகட்கும் பயன்படுத்தி, அவர்போல் தாமும் பூணூல்பூண்டும், கீழாடைமேலாடை உடுத்தும், உச்சிக்குடுமி வைத்தும் பார்ப்பனராகிவிட்ட தமிழ்மக்களும் பலர்; இன்னும் பார்ப்பனராகி வருந்தமிழரும் மிகப்பலர். இராமாநுசர் காலத்திலிருந்து வைணவப்பார்ப்பனராகிவரும் தமிழருக்குங்கணக்குண்டோ?

"அத்திப்பழத்தை பிட்டால் அத்தனையுஞ்சொத்தை" ஆதல்போல், பார்ப்பனவகுப்பை பண்டிருந்தது ஆராய்ந்துபார்த்தால், அதில் ஒருவகுப்பினரன்றி பல்வேறுவகுப்பினர் கலப்பும் ஊடுருவியிருத்தலை எளிதில் அறிந்துகொள்ளலாம். இஞ்ஞான்றை பார்ப்பனர் அனைவரும், ஆரியமொழியை தமக்கேயுரிய மொழியாக பயின்று, அவ்வாற்றால்தம்மை திராவிடமக்களினின்றும் வேறு பிரித்துக்கொண்டு, தம்மை "ஆரியர்" எனவழங்கிக்கொண்டாலும் அவருடம்பினுள் ஓடுவது பெரும்பாலும் திராவிட இரத்தமேயன்றி பிரிதில்லை.

ஆகவே, இவ்விந்தியநாட்டின் வடமேற்கு மூலையைத்தவிர, மற்றை நான்கெல்லைக்குள் பண்டைக்காலம் முதல் இன்றுகாறும் பரவி நிறைந்திருப்பவர் தமிழரும், அவர் இனத்தவரான திராவிட மக்களுமேயன்றி வேறுபிறர் பெரும்பாலும் இலர் என்பது தேற்றமேயாம் என்க.

அத்தியாயம் - 9 முடிந்தது.
பதிவு -11.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்