தமிழ்மரபுநடை.

அறிஞர்தமிழா; 
அச்சுக்கோர்ப்பவர் தமிழா? -1.

ஒவ்வோரு மொழிக்கும் அதற்கேயுரிய  'மொழிநடை' உண்டு. தற்போது தமிழை, ஆங்கிலமொழிநடையில் எழுதுவது பரவிவிட்டது. தமிழ்ச்சொற்களை பயன்படுத்துவதுடன், தமிழ்மொழிநடையையும் நாம் பயன்படுத்தவேண்டும்.

"தமிழ்மொழியின் நடையை உறுதிப்படுத்துவது 'புணர்ச்சி' எனப்படும் ஒர் இலக்கணமாகும். புணர்ச்சியென்பதற்கு 'சேர்தல்' என்பது பொருள். பேச்சிலோ எழுத்திலோ சொற்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதையும், அதற்கான வழிமுறைகளையும் விளக்குவதே புணர்ச்சியிலக்கணம்.

ஒர் இடத்திலுள்ள இரண்டு சொற்கள், தங்களுக்குள் சேரக்கூடிய தகுதியுடையவையே என்றாலும், அங்கே சொல்லவரும் பொருளுக்கு பொருந்தினால்மட்டுமே  அவற்றை புணர்த்தவேண்டும். பொருந்தாபுணர்ச்சியும், தகுதிபுணர்ச்சியை தவிர்ப்பதும் சொல்லவந்த பொருளை மாற்றிவிடும் - தமிழ்வெல்லத்தாழி என்னும் புணர்ச்சியிலக்கண நூலில் மருத்துவர் திரு வ. பொன்முடி மொழிந்தது".

செந்தமிழ் அந்தணர், முதுபெரும் புலவர் திரு இரா. இளங்குமரன் எழுதிய 'இணைச்சொல் அகராதி'  என்னும் நூலில் அச்சிடப்பட்ட ஒரு செய்தியை எனது ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன்.

"கிண்டலும் கேலியும்
கிண்டல் - ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று.
கேலி - நகையாடுதல் கேலியாம்.
          கிண்டியறிந்துகொண்ட செய்தியைக் கொண்டு நகையாடுதல் கிண்டலும் கேலியுமாம். "என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலும் கேலியுமாக இருக்கிறது" என்று இயலாதவர் தம்மை நொந்து கொள்ளுதல் கண்கூடு". 

மேற்சொன்ன பகுதி எவ்வாறு அச்சிடப்பட்டு இருந்ததோ, அவ்வண்ணமே எடுத்தெழுதப்பட்டுள்ளது.

இனி அறிஞர்தமிழில், அச்சுக்கோர்ப்பவர் செய்த தவறுகளைப்பார்ப்போம்.

1. ஒரு காற்புள்ளி விடுபட்டதால் நேர்ந்த பொருட்குழப்பத்தை, அறியலாமா! 'ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்' - என அச்சிடப்பட்டுள்ளது. 'ஒருவன் மறைவுச் செய்தியை', என்று சேர்த்துப்படித்துவிட்டால் அடுத்துச்சொல்லப்படும் 'அவன்' என்றசொல், மறைத்தவனையே  சுட்டுவதாக அமைந்துவிடும். கிண்டுபவனைப்பற்றிய சுட்டு இல்லாமல், தன்னிலை முன்னிலை மயக்கத்திற்கு  வழிகூட்டுகிறது. ஒருவன் என்ற சொல்லையடுத்து ஒரு காற்புள்ளி இட்டுவிட்டால், ஒருவன் என்பது கிண்டுபவனையும்; அவன் என்பது மறைத்தவனையும் சுட்டி, குழப்பத்தை நீக்கிவிடும். இது அச்சுக்கோர்த்தவர் பிழையல்லவா?

2. தமிழ்ச்சொற்களின் ஈற்றெழுத்தாக வல்லினமெய்யெழுத்து வராது என்னும் விதி, புறக்கணிக்கப்பட்டு பலச்சொற்களின் ஈற்றில் வல்லினமெய் நிறுத்தப்பட்டுள்ளது. எத்துணைச்சொற்களின் ஈற்றில் வல்லினமெய் நிறுத்தப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

3. " வாயில் இருந்தே" என்ற இருசொற்களை உச்சரிக்கும்போது, யாராவது இருசொற்களாக பேசுவதுண்டா? நீங்கள் இதனை சொல்லிப்பாருங்கள். இவ்விருசொற்களுக்கும் இடையில் கால இடைவெளியின்றி (without pause) ஒருசொல்போலவேதான் சொல்லுவோம். அவ்வாறு சொல்லும்போது 'ல்', 'இ' ஆகியன புணர்ந்து 'லி' என்ற மெய்யொலி ஆகிவிடுவதைக்காணுங்கள். இது யாதொரு முயற்சியுமின்றி இயல்பாக நடக்கும் புணர்ச்சி. 'வாயிலிருந்து' என்றே யாவரும் சொல்வர். இந்த இயற்கை  ஒலிசேர்க்கையை வெளிப்படுத்த தமிழில் வரிவடிவமிருக்க, அச்சொற்களை வலியபிரித்து  தனித்தனி சொற்களாக்கி, உச்சரிக்கும்போது ஒருசொல்லாக உச்சரிக்கும் முரண் ஏன்? 

எளிமைகருதி இவ்வாறு எழுதப்படுகிறதென்றால், 'நகையாடுதல்' என்ற சொல்லை 'நகை ஆடுதல்' என பிரித்தெழுதலாம். அல்லவா? இது பொருட்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடுமல்லவா!

4. 'கிண்டி அறிதல்' என்ற இருசொல்லாட்சி ஓரிடத்தில். அடுத்தப்பத்தியில் 'கிண்டியறிந்து' எனப்புணர்ந்து ஒரு தொடராக எழுதப்பட்டிருக்கும்போது, 'கிண்டி அறிதல்' என்ற இருசொல்லாட்சியை கைவிட்டு, 'கிண்டியறிதல்' என்று தொடராக எழுதியிருந்தால் இயல்பாக இருக்குமல்லவா?

5. சொற்கள் பொருந்துவதற்கான தகுதியிருந்தும், பொருள் தெளிவிற்காக புலவரய்யா புணர்ச்சியை தவிர்த்துள்ளதை அறியலாமா?  'கிண்டல் ஆயிற்று' என்பதை 'கிண்டலாயிற்று' எனப்புணர்த்த இடமுண்டு. ஆனால், அவ்வாறு புணர்த்தினால் 'கிண்டல்' என்ற சொல்லுக்கான வரையரை என்பதனை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நேரிடுமென்பதால், இது தவிர்க்கப்பட்டுள்ளது.

6. 'கேலியாம்' என்ற சொல்லை விரித்தால், 'கேலி செய்வது ஆகும்' என விரியும். புலவரய்யா எத்துணை எழுத்துக்களை குறைத்து 'கேலியாம்' என்ற செய்யுள்வழக்குக்கு உகந்த சொல்லாக அமைத்துள்ளார் என்பது எண்ணிமகிழத்தக்கது.  இது தமிழ்மொழிநடைக்கு ஏற்றம் தருகிறது.

7. 'நொந்துகொள்ளுதல்' என்று தொடராக வரவேண்டியது, 'நொந்து கொள்ளுதல்' எனப்பிரிக்கப்பட்டு இரு சொற்களாக அச்சிடப்பட்டு பொருள்செறிவை குறைக்கிறது.

சரி! பெரும்புலவரின் செய்தியை நாம் அச்சுக்கோர்த்தால் எப்படியமையும்? கீழுள்ளதுபோல் அமையும்.

"கிண்டலும் கேலியும்.
கிண்டல் - ஒருவன், மறைவுச்செய்தியை அவன் வாயிலிருந்தே பிடுங்குதல்; கிண்டியறிதல் 'கிண்டல்' ஆயிற்று.
கேலி - நகையாடுதல் கேலியாம்.
      கிண்டியறிந்துக்கொண்ட செய்தியைக்கொண்டு நகையாடுதல், கிண்டலும் கேலியுமாம். "என்னைப்பார்த்தால் உனக்கு, கிண்டலும் கேலியுமாக இருக்கிறது" என்று இயலாதார், தம்மை நொந்துகொள்ளுதல் கண்கூடு".

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்