தமிழர்மதம்.

தமிழர்மதம் - 
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 16, 
"புதல்வர்கள் பேறு".

இல்வாழ்க்கையின் சிறந்தபயனாவது நன்மக்களைப்பெற்று அவரை பலநலங்களும் வாய்ந்தவராக்கி , அவர் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டொழுக செய்தலேயாமென்பது தமிழர்தம் அடுத்த கொள்கையாகும். அது, 
"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு" - என்று தெய்வத்திருவள்ளுவர் விளம்புதலால் நன்கு பெறப்படும்.

தமிழர்தம் கோட்டாட்டின்படி இல்லறத்தை நடத்துவான் ஒருவனுக்கு முதற்கண் வேண்டற்பாலன தன்மனைவியின் காதலுங்கற்புமேயாகும். அதனையடுத்து அவனுக்கு வேண்டற்பாலது நன்மக்கட்பேறேயாம். மற்று, ஆரியர்தம் கோட்டாட்டின்படியோ, மனைவாழ்க்கையில் இருப்பானுக்கு முதற்கண் வேண்டற்பாலது புதல்வர்பேறேயாம்; புதல்வரைப்பெறுதல்பொருட்டு தன்மனைவி கற்பொழுக்கத்தில் பிறழ்ந்துநடத்தலும் அவள் கணவனுக்கு உடன்பாடேயாம். மேலும், புதல்வர்ப்பேற்றின்பொருட்டு  ஒரு பெண்ணையோ  அல்லது ஒன்றின் மேற்பட்ட பெண்களையோ மணத்தல் வேண்டுமென்று ஆரியர் கூறுவதல்லால், காதலன்பின் பொருட்டும், அன்பினையும் அறத்தினையும் வளர்த்தற்பொருட்டும் ஒருமங்கையுடன்கூடி இல்வாழ்க்கையை நடத்தல் வேண்டுமென்று அவர் கூறுவதில்லை. மனைவாழ்க்கையைப்பற்றிய கோட்பாட்டில் தமிழர்கொண்ட கருத்தும், ஆரியர்கொண்ட கருத்தும்  இங்ஙனந்தம்முள் பெரிதும் வேறுபட்டுநிற்றல் நினைவில் பதிக்கற்பாற்று.

இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்குமுற்பட்ட தொல்காப்பியனார் காலத்திலேயே, பெற்றோர் தம்மக்களை கல்வியில்வல்லவராக்கி, அவர் அக்கல்வியின் உதவிகொண்டு தம்வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை, நிலத்திலும் நீரினுஞ்சென்று ஈட்டிக்கொள்ள எவுவரென்பதும், அவர்தம் புதல்வரும் அவரேவியவாறே நிலமும்நீருங்கடந்து பலதேயங்கள் போய்ச்சேர்ந்து பல நன்முயற்சிகளைச்செய்து பொருளீட்டித்திரும்புவர் என்பதும், தொல்காப்யிய செய்யுளில் இனிது விளங்கிநிற்கின்றது.

"தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாங் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத்தன்மை அற்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு  வழங்கிவாழ்தற்குப் பிரியுமென்பது", என்று ஆசிரியர் நக்கீரனார், 'இறையனாரகப்பொருள்'  என்னும் நூலின் பாவொன்றுக்கு வரைந்தவுரையில், ஆண்மக்கள் தாமே முயன்றுதேடிய பொருளைக்கொண்டே வாழ்க்கை நடாத்தினார் என்பது தெற்றெனவுணரப்படும். இதனால், பெற்றோர் தமதுசெல்வத்தை பல அறத்துறைகளில் பயன்படுத்தி உலகத்திற்கு நன்மைபல செய்துவந்தனரென்பது புலனாகின்றது.

மற்று, இந்நாளிலோ பெற்றோர்கள் எல்லாரும் தம்மக்களுக்கு செல்வப்பொருள் சேர்த்துவைத்தலையே பெருங்கடமையாக பிழைபடக்கருதி, எத்தனையோ குடும்பத்தவர்களின் பொருள்களையெல்லாம் பலசூழ்சிகளால் கைப்பற்றி, தம்மக்களுக்கு சேர்த்துவைத்து, அக்குடும்பத்தவர்களைப் பாழாக்குவதுமல்லாமல், தம்மக்களையும் பாழாக்கிவிடுகின்றனர். எங்கும் தன்னயமும் தற்பெருமையும் பொய்யும் புனைசுருட்டும் ஏமாற்றமுமே தலைவிரித்தாடுகின்றன.

புதல்வர்க்கு பொருள் சேர்த்துவைக்கும் எண்ணம் தலைப்பட்டபின், நந்தமிழர்கள் ஈகையறங்களை அறவே மறந்துவிட்டார்கள்.! தமிழ் கற்பார்க்கும், தமிழ்நூல் வரைவார்க்கும் உதவிபுரியுநரைக்காண்பது அரிதினும் அரிதாய்விட்டது. துறந்தாரையும் துவ்வாதாரையும் கண்ணெடுத்துப்பார்ப்பவரும்  இல்லை! அற்றாருக்கும் அலந்தார்க்கும் அருந்துயர்களைவார் அற்றே போயினர். வெளியாரவாரங்களுக்கும் வெறும்பட்டங்களுக்கும் வெறும்புகழுக்கும் வேண்டுமட்டும் பொருளை வாரியிறைக்கும் செல்வர்களே எங்குங்காணப்படுகின்றனர்.

அத்தியாயம் - 16 முடிந்தது.
பதிவு - 27.




Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்