தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் -14இன் தொடர்ச்சி,
"பன்மனைவியர் மணம்".

துலுக்கர்மதத்தின் ஆசிரியர் முகமது முனிவர் ஆண் பெண் இருபாலரின் இயற்கைகளையும், அவர்தம் வாழ்க்கையின் இடர்பாடுகளையும் ஆராய்ந்து உணர்ந்தன்றோ, ஓர் ஆண்மகன் ஒருவரிலிருந்து நால்வர் வரையில் மனைவியர் பலரை மணந்துகொள்ளலாம் என்று தாம்அருளிச்செய்த குரான்மறையில் ஒரு சிறந்த சட்டம் வகுத்தளித்தார்.

பன்மனைவியருடனிருந்து வாழும் துலுக்கரின் வாழ்க்கை இனிது நடைபெறுகின்றதோ, இடர்ப்பட்டு நடைபெறுகின்றதோ என்பதனை நேரே சென்று ஆராய்ந்துகண்ட ஆங்கில ஆசிரியர் சிலர், அஃது இனிதாகவே நடைபெறுகிறதென முடிவு கட்டியிருக்கிறனர்.  ஒரு கணவருக்கு மனைவியர் பலரிருப்பது அவர்களுள் வழக்கத்தில் வந்துவிட்டமையால் ஒருவன் தன்மனைவிமார்தம்முள்  பொறாமை சிறிதுமின்றி அன்புடன் ஒருவருக்கொருவர் உதவியாய்நின்று ஒத்து உயிர் வாழ்கின்றனரென்றும்; தமக்கு மனைவியர் பலரிருத்தலின் அவரைவிட்டு வேறுமாதரை விழைந்துசெல்லும் கூடாவொழுக்கம் கணவர்பால் சிறிதும் காணப்படவில்லை என்றும்; ஆகவே, பன்மனைவியர் மணவாழ்க்கை துலுக்கருள் நலந்தருவதாகவே இருக்கிறதன்றி, தீதுதருவதாய் இல்லையென்றும் அவ்வாங்கில ஆசிரியர்கள் தெளிவாக வரைந்திருக்கிறனர். 

கிறித்துமதசட்டப்படி ஒரு மனைவி உயிரோடிருக்கையில் வேறு மனைவியரை மணவாத  வெள்ளைக்காரரிலோ, ஏறக்குறைய ஒவ்வொரு கணவன்மாரும் வழுவிய ஒழுக்கமுடையராய், மறைவிலே வைப்பாட்டிமார் இருவர் மூவர் நால்வரை மருவி வாழ்நாள் கழிக்கின்றனரெனவும் அவர்களே ஆராய்ந்து கணக்கெடுத்து நுவல்கின்றனர்.

கிறித்துவர் துலுக்கரின் இல்வாழ்க்கை வரலாறுகளை உற்றுநோக்குங்கால், பன்மனைவியர் மணவாழ்க்கையினை இனியதாக ஏற்கும் துலுக்கமதகோட்பாடும், பண்டைத்தமிழர் மதக்கோட்பாடும் பெண்மக்கள் ஆண்மக்கட்கு  பலநலங்களை தருவனவாயிருத்தல் தெற்றென புலனாகின்றதன்றோ?

அத்தியாயம் - 14 தொடரும்.
பதிவு - 24.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்