உரிச்சொல்.

உரிச்சொல் ஓர் அறிமுகம்.

பெயர்ச்சொற்களை, வினைச்சொற்களை விளக்கும், சிறப்பிக்கும் சொற்கள் "உரிச்சொற்கள்" எனப்படும். இவைகளை தற்காலத்தில் முறையே "பெயரடைகள்" எனவும் "வினையடைகள்" எனவும் அழைக்கின்றோம்.

பெயர்ச்சொற்கள் ஆறுவகைப்படும்.
1. பொருட்பெயர் -  எ-டு: முருகன்.
2. இடப்பெயர் - எ-டு: தமிழ்நாடு.
3. காலப்பெயர் - எ-டு: விடியற்காலம்.
4. சினைப்பெயர் - எ-டு: கண்கள்.
5. பண்புப்பெயர் - எ-டு: வாய்மை.
6. தொழிற்பெயர் - எ-டு: எழுதுதல்.

ஒரு வினையை அல்லது செயலை குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினைச்சொல், எழுவாயைக்காட்டும்; எண்ணைக்காட்டும்; காலத்தைக்காட்டும்; பாலைக்காட்டும்; இடத்தைக்காட்டும்.
எ-டு: நடந்தான்.
எழுவாய் - தோன்றா எழுவாய்.
எண் - ஒருமை.
காலம் - இறந்தகாலம்.
பால் - ஆண்பால்.
இடம் - படர்க்கை.

ஆனால், தொழிற்பெயர் மேற்சொன்னவைகளைக்காட்டாது.
ஒரு தொழிலைமட்டும் சொல்லும்.
எ-டு: நடத்தல்.

'குளிர்ந்தநீர்' என்னும் சொல்லில் 'குளிர்ந்த' என்னும் சொல், நீரின் தன்மையை விளக்குகிறது. எனவே, 'குளிர்ந்த' என்னுஞ்சொல் 'பெயரடை' எனவும் 'உரிச்சொல்' எனவும் அழைக்கப்படும்.

'வேகமாகநடந்தான்' என்னும் சொல்லில், 'வேகமாக'  என்பது நடந்தவன் எவ்வாறு நடந்தான் என்பதை விளக்குகிறது. எனவே, 'வேகமாக' என்னுஞ்சொல் 'வினையடை' எனவும் 'உரிச்சொல்' எனவும் அழைக்கப்படும்.

ஒருகுணம் தழுவிய உரிச்சொல், பலகுணம் தழுவிய உரிச்சொல் என உரிச்சொல் இருவகைப்படும். 

பல சொற்கள் ஒரேபொருளைத்தந்தால், அச்சொற்கள் ஒருகுணம் தழுவிய உரிச்சொற்கள் எனப்படும். சால, உறு, தவ, கூர், கழி, நனி என்ற ஆறும் இத்தன்மையன. எ-டு:
சாலச்சிறந்தது - மிகவும் (சால).
உறுபொருள் - மிகுதியான (உறு).
தவச்சிறிது - மிகவும் (தவ).
கூரறிவு - மிகுந்த (கூர்).
நனிநல்லர் - மிகவும் (நனி).
கழிநல்குரவு - மிகுந்த (கழி).

"கடி" என்னுமோர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத்தரும். அவை வருமாறு: காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (பிரகாசம்), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு என்பன. எனவே, 'கடி' என்னுஞ்சொல் 'பலகுணம் தழுவிய உரிச்சொல்' எனப்படும். இவற்றுள் ஒருசில வருமாறு:
கடிநகர் - கடி = காவல்.
கடிமலர் - கடி = வாசனை.
கடிமுரசு - கடி = ஒலித்தல்.
கடிதேகினான் - கடி = விரைவு.
கடிமிளகு - கடி = காரம்.

பண்புப்பெயரின் ஒரு சிறுவிளக்கத்திற்குப்பின், நீங்கள் தமிழாசிரியர் திரு இராம் முருகன் அவர்களது காணொலிக்குள் செல்லுங்கள். குணப்பெயர் எனவும் அழைக்கப்படும் பண்புப்பெயர் நிறம், வடிவம், சுவை, பயன், எண்ணிக்கை என்னும் ஐவகைப்பண்புகளை சுட்டும். எ-டு:
கார்மேகம் - நிறம்.
தீந்தமிழ் - சுவை.
வட்டக்கல் - வடிவம்.
முத்தமிழ் - எண்ணிக்கை.
நல்வாழ்வு - பயன்.


Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்