தமிழர்மதம்.
தமிழர்மதம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் -14இன் தொடர்ச்சி,
"பன்மனைவியர் மணம்".
ஒரு பெண் தான்காதலித்த ஒருவனையன்றி பிறனொருவனை கனவிலும்நினையாத மாண்பே கற்பொழுக்கமென பழந்தமிழ்நூல்கள் வகுத்தாற்போல, ஓர் ஆண்மகனும் தான்காதலித்த ஒருத்தியை அன்றி பிறளொருத்தியை கனவினும்நினையாத கற்பொழுக்கத்திற்கு உரியனனென அந்நூல்கள் வகுத்துரையாமை என்னையெனிற், கூறுதும்.
ஒருவன் தன்காதற்மனையாளை தவிர மற்றையொருத்தியை விரும்பாத மனதிட்பம் உடையவனாய் இருந்தாலும், அவன்தான் தன்மனையாள்பால் வைத்த காதல் மிகுதியால், அவள் மகப்பெறுதற்கு முன்னும் மகபெற்றபின்னும் அவளை அடுத்தடுத்து மருவாதிரான். அவ்வாறவன் அவளோடு கூடியொழுகுதலால் அவளுடம்பின் நலம் பழுதுபடுதல்மட்டுமேயன்றி, அவள் அடுத்தடுத்து ஈனுங்குழந்தைகளும் நோய்கொண்டு சிறிதுகாலத்தில் மடிந்துபோகின்றன. அதனால் அவனது இல்லத்தில் நோயுங்கவலையுந்துன்பமும் குடியாயிருக்கின்றன. இந்நிலைமையை ஆராய்ந்துபார்த்தே 'பன்மனைவியர் மணம்' என்னும் ஒழுகலாறை பண்டைத்தமிழ்சான்றோர் வகுத்துவைத்தனர். அங்ஙனமாயினும், தம்மனைவியரைக்கடந்த கூடாவொழுக்கம் எவர்க்கும் ஆகாமையும் எவரும் அறிந்ததேயாகும்.
பெண்பாலரும் ஆடவர்பலரை கணவராகமணந்து வாழ்தல் பொருத்தமுடைத்தாமன்றோ? துரோபதை, நீலமலைதோடர்கள், திபேத்தியர்கள், பழையபிரித்தானியர்கள், அராபியர்கள், வேறுவகுப்பினர் சிலர்க்குள்ளும் ஒருத்தி ஆடவர்பலர்க்கு மனையாளாயிருந்த வரலாறுகள் அறியப்படுகின்றன. ஆதலால், தமிழர்மட்டும் ஒருமங்கை ஒருவனைத்தவிர பிறனொருவனை கனவிலும்நினைதல் ஆகாதென வரையறை செய்ததென்னை என்று கூறுதும்.
ஒரு மங்கையின் உடம்பைப்பழுதாக்க ஒரு கணவனே போதும்; அவளுக்கு இன்னும் பலர் கணவராக அமர்ந்தால், அக்கணவன்மார் பலரால் அவ்வொருத்திக்கு நேரும் அலைக்கழிவினை எம்மொரு நாவால் எடுத்துரைத்தல் இயலுமோ, சொன்மின்கள்! ஒருத்தி ஆடவர்பலர்க்கு மனையாளாய் இருந்தாலும், அவள் அவருள் ஒரு கணவனிடத்தேதான் காதலன்பு பாராட்டுவாள். அதனால், ஏனைய கணவன்மார் தமக்குள் பொறாமையும் பகைமையும் கொண்டு கலாய்த்தலேயன்றி, அம்மாதினை பலவகையால் துன்புறுத்துவர். இன்னும், அவள்வயிற்றில்பிறந்த பிள்ளைகளிலும் இஃது இன்னாருக்கு பிறந்ததென்பது திட்டமாய் அறியப்படாமையால், அப்பிள்ளைகள்பால் அவள் கணவன்மார் பலரும் அன்பிலராயே யொழுகுவர்.
ஆகவே, பண்டைத்தமிழ்நூல்களும், அவர்தம் வாழ்க்கை வரலாறுகளை தழீஇ நூல்கள் இயற்றிய தமிழாசிரியர்களும், ஒரு மங்கை ஒருவனோடுறைந்து வாழும் கற்பொழுக்கத்தினையே வற்புறுத்தி வரலாயினர். அவர் வற்புறுத்திய கற்பொழுக்கவாழ்க்கையே இன்றுகாறும் இத்தமிழகத்தில் நிலைபெற்று வழங்கிவருதலை அறியாதார் யார்?
அத்தியாயம் - 14 முடிந்தது.
பதிவு - 25.
Comments
Post a Comment