தமிழர்மதம்.
தமிழர்மதம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் - 15.
"பின்முறை மணம்"
பெண்பாலார் பெரும்பாலும் ஆண்பாலாரைப்பார்க்கிலும் விரைவில் முதுமையடைகின்றனர். நாற்பதுக்கும் நாற்பத்தைந்தாண்டுகட்கும் இடையில் மாதரிற்பலர் பூப்பு நிற்கப்பெறுகின்றனர். பூப்பு நின்றபின் அவர்கள் கணவனை மருவுவதற்கும் புதல்வரைப்பெறுதற்கும் தகுதியற்றவராகின்றனர். நாற்பதாண்டுக்கு மேற்பட்டபின் மாதர் பலர்க்கு புணர்ச்சிவேட்கையே இல்லையாய் ஒழிகின்றது. பூப்பு நின்றபின் தன்காதன்மனையாளே ஆயினும், அவளை அவன் காதலன் மருவுதலாகாதென அறிவுடையோர் கூறுமுரை பொருத்தமுடையதாகவே காணப்படுகின்றது.
ஆண்பாலாரின் உடம்புநிலையோ அத்தகையதாயில்லை. யாக்கை நோயற்ற நல்லநிலையிலிருக்க, அறிவும் முயற்சியும் நன்குவாய்ந்து நீண்டநாள் உயிரோடிருக்கும் ஆடவர் பலர்க்கு எழுபதாண்டுக்குமேலும் புணர்ச்சி விருப்பும், மகளிரைமருவி புதல்வர்பெறும் ஆற்றலும் இயற்கையாய் பொருந்தியிருத்தலையும், அத்தன்மையினார் எழுபதாண்டுக்குமேலும் திருமணம் செய்துகொண்டுவாழ்தலையும் இன்றைக்கும் பல இடங்களில் பலரும் பார்க்கலாம்.
ஆண் பெண்பாலாரின் இவ்வேறுபட்ட உடம்பின் நிலைகளை உற்று நோக்கி ஆராய்ந்த நம் பண்டைய ஆசிரியர், நாற்பத்தைந்தாண்டுகட்கு மேற்பட்ட தங்காதன்மனைவியரையும் ஆடவர் மருவுதல்தவிர்ந்து, வேறுமாதரை மணந்துகொண்டு வாழ்க்கைசெலுத்தும் முறையினை ஏற்றுக்கொண்டமை நமது பழைய தொல்காப்பியநூலை ஆராய்ந்தாற்புலனாகிறது. ஓர் ஆண்மகன் தான் முதலில் மணந்துகொண்டமனைவி 'தொன்முறைமனைவி' என்றும், பின்னர் மணந்துகொண்டமனைவி 'பின்முறைமனைவி' என்றும் பெயர் பெறலாமை, தொல்காப்பியத்துக்கற்பியலில் போந்த,
"பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்" (31) - என்னும் நூற்பாவினால் இனிது விளங்கும்.
மேலும், இளமைக்காலத்தே தான் மணந்துகொண்ட காதன்மனைவி, முதுமைக்காலத்தே ஓய்ந்திருந்து இனிது காலங்கழிக்குமாறு, அவளுக்கு வேண்டும் உதவிகளைச்செய்து , அவளை உவப்பித்தலே அவள் கணவற்கு இன்றியமையாத கடமையாகும். இதனை நன்குணர்ந்த நம்பண்டைத்தமிழ்மக்கள் தம் தொன்முறைமனைவிக்கும் தமக்கும் உதவியாம் பொருட்டு, பின்முறைமனைவியாக மற்றுமொரு மாதை மணந்து, தம் தொன்முறைமனைவியுடனிருந்தே வாழ்க்கைசெலுத்திவந்தமை, அவர்தம் அருட்பான்மையினை இனிது புலப்படுத்துகின்றது.
பிழைபட்ட உணர்ச்சியும் அழுக்காறும் அறியாமையுங்கொண்ட, இஞ்ஞான்றை மாதர், ஆடவர்தமது வழுவான ஒழுகலாறே விழுமியதெனக்கருதி, உண்மை அருளொழுக்கத்தில் தலைநின்ற நம் பண்டைச்செந்தமிழ்மாந்தரின் ஒழுகலாற்றுக்கு குறைகூறுதல் ஏதமாமென அறிதல்வேண்டும்.
அத்தியாயம் - 15 முடிந்தது.
பதிவு - 26.
Comments
Post a Comment