தேர்தல் சீர்திருத்தம்.
தேர்தல் சீர்திருத்தம் - பதிவு -1.
'பிரசவ வைராக்கியம்', 'மயான வைராக்கியம்' என்பனபோலதான் தேர்தல் சீர்திருத்தமும் ஐந்தாண்டுக்கொருமுறை பேசப்படும். 2-5-2021 தநா சட்டமன்ற தேர்தல்முடிவுகள் வரவுள்ளநிலையில், நானும் இதை எண்ணிப்பார்க்க விரும்புகிறேன்.
'விகிதாச்சார பிரதிநிதித்துவம்' என்றதொரு கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. ஒரு கட்சி பெறும் வாக்குகளுக்கேற்ப சட்டமன்ற இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இதன் அடிப்படை. தற்போது கட்சிகள் பெற்றுவரும் வாக்கு விழுக்காட்டின்படி எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிபெரும்பான்மை (Simple majority) வாய்க்காது. அரசியல் நிலையற்றத்தன்மை (political instability) உருவாகும். தேர்தலுக்குபின் கூட்டணிகள் உருவாகும் என்பதுதவிர இதில் குறிப்பிடும்படி எந்தமாற்றமும் விளையாது. இதற்காக, விகிதாச்சார பிரதிநிதித்துவம் கைவிடப்படவேண்டும் என்பதல்ல.
நமது தேர்தல்முறையில் வாக்களிக்க தகுதியுள்ள எவரும் சட்டத்திற்குட்பட்டு, தேர்தலில் போட்டியிடலாம்; தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றம் செல்லலாம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுபவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்?
நமது தேர்தல் முறையில், இன்னார்தான் தமது மக்கள்பிரதிநிதியென்று நேரடியாக அடையாளம் காணப்பட்டு, மக்களால் வாக்களிக்கப்படுகிறார். அவர்கள் ஒருகட்சியையோ, அமைப்பையோ சேர்ந்தவராயும் இருக்கலாம். விகிதாச்சாரபிரதிநிதித்துவம் வந்தால், மக்கள் தங்களுக்கான பிரதிநிதி இன்னார்தான் எனயெப்படி அறிவர்? அடுத்ததாக, விகிதாச்சாரபிரதிநிதித்துவப்படி கட்சிகளுக்கு எப்படி தொகுதிகள் ஒதுக்கப்படும்? ஒரேத்தொகுதியை இருகட்சிகள் கேட்டால் யாருக்கு ஒதுக்குவர்?
2014 நாடாளுமன்றத்தேர்தலில் திமுக 20% வாக்குகள் பெற்றது;ஒரு நாடாளுமன்றத்தொகுதியில்கூட வெற்றிப்பெறவில்லை. சட்டப்படி செல்லுபடியான 20% வாக்குகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. இது தற்போதைய தேர்தல்முறையின் உள்ளார்ந்த குறைபாடு; தற்போதைய தேர்தல்முறையின் அராஜகம். இது களையப்படவேண்டும்.
ஒருகட்சி பெற்றவாக்குகள் ஒருகுறிப்பிட்ட தொகுதியில், தேர்வுபெற போதுமான அளவுக்கு இல்லாவிட்டாலும், அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஒட்டுமொத்தவாக்குகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். இதுதான் மக்களாட்சியின் மாண்பைப்பேண உதவும். இதற்கான எனது முன்மொழிவு அடுத்தப்பதிவில்.....
தொடரும்.
Comments
Post a Comment