தேர்தல் சீர்திருத்தம் .
தேர்தல் சீர்திருத்தம் - பதிவு - 2.
"இருவாக்குரிமை" என்பதே என் முன்மொழிவு. இது ஏற்கனவே பேசப்படும் பொருள்தான் ; சில நாடுகளில் செயலில் இருப்பதாகவும் அறியமுடிகிறது. இக்கருத்தினை யோசித்தப்போது அவ்விரவங்களை நான் அறிந்திருக்கவில்லை. சரி விஷயத்திற்குள் செல்வோம்.
வாக்காளருக்கு இரண்டுவாக்குகள் தரப்படவேண்டும். தற்போது நடைபெறும் தேர்தல்முறைப்படி, நேரடியாக தங்களது தொகுதிக்கான பிரதிநியைத்தேர்வுசெய்ய முதல்வாக்கு செலுத்தப்படும். வேட்பாளர் கட்சிசார்ந்தவராகவும் இருக்கலாம். இதனை "பிரதிநிதி(க்கான) வாக்கு" என அழைக்கலாம். தநா சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் பிரதிநிதிவாக்கின்மூலம் தொகுதிகளின் பிரதிநிதிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
'இரண்டாவதுவாக்கு' தான் விரும்பும் கட்சிக்கு அல்லது அமைப்புக்கு செலுத்தப்படும். இதனை "அமைப்பு(க்கான) வாக்கு" என அழைக்கலாம். 'அமைப்புவாக்கு'க்காக கூடுதலாக 234 எண்ணிக்கை ஒதுக்கப்படும். இது கட்சிகள் பெற்றவாக்குகளின் அடிப்படையில் அதாவது விகிதாச்சாரப்படி பகிர்ந்தளிக்கப்படும். ஒரு கட்சி 1% 'அமைப்புவாக்கு' பெற்றிருந்தால், அதற்கு இரண்டு ச.ம. உறுப்பினர்கள் வழங்கப்படும் (234÷100 = 2.34 > 2). கட்சிகள் பரிந்துரைக்கும் நபர்களை சட்டமன்றவுறுப்பினர்களாக தேர்தல்ஆணையம் அறிவிக்கும். 1% வாக்கு என்பது கட்டாயத்தகுதி.
இருவாக்குவுரிமைப்படி அமையவிருக்கும் சட்டமன்றம் 468 (234×2=468) உறுப்பினர்களைக்கொண்டதாக இருக்கும். சில மாநிலங்களில் சட்டமேலவை தற்போதும் உள்ளது. அதனைக்கலைத்துவிடலாம். ஏனெனில், அதன் நோக்கம் , 'பிரதிநிதிவாக்கு'மூலம் நிறைவேறிவிடுகிறது. நாமும் கூட சட்டமேலவை வேண்டுமென தொடர்ந்து வலியுத்திவருகிறோம். இனி, அதற்கான தேவையிருக்காது.
இந்த ஏற்பாட்டின்படி வாக்காளர்கள் மிகுந்த மனநிறைவோடு வாக்களிக்கமுடியும். அவையெல்லாம் என்னவென விவரிக்கத்தேவையில்லை; அவை யாவரும் அறிந்ததே.
'பிரதிநிதிவாக்கு' பிரிவின்படி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடுபெற, ஒரு கட்சி குறைந்தபட்சம் 1% வாக்குகளாவது பெறவேண்டுமென தகுதிநிர்ணயம் செய்யப்படவேண்டும். மேலும், இப்பிரிவின்கீழ் உறுப்பினர் ஒதுக்கீடு கேட்கும் கட்சிகள், மாநிலம் முழுமையும் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிடவேண்டும் என்பதும் தகுதியாக நிர்ணயிக்கப்படும்.
ஒரு கட்சி, 1% -கும் குறைவாக வாக்குகள் பெறுமானால் அந்த கட்சி அடுத்துநடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படாது. அக்கட்சியின் தலைவர் முதல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஈறாக அனைவரும் சுயேட்சையாக கூட ஒருதேர்தலுக்குமட்டும் போட்டியிட தடைவிதிக்கப்படும். இதன்மூலம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்; கட்சிகளுக்கும் பொறுப்புணர்வு கூடும்; தேர்தல்ஆணையத்தின் பணிச்சுமை குறையும்.
இந்தயிடத்தில் ஒன்றைக்குறிப்பிடவேண்டும். சுயேட்சையாகப் போட்டியிட்டு ஒரு தேர்தலில் காப்புத்தொகையை இழப்பவர், அவர்போட்டியிடும் அடுத்த ஒருதேர்தலுக்குமட்டும் அவருக்கான அரசுசலுகைகள் (காகிதத்தாள் ஒதுக்கீடு, எரியெண்ணை ஒதுக்கீடு, இன்னபிற...) எதுவும் வழங்கப்படாது.
இப்பதிவில், அடிப்படை மாறுதல் என்னவெனச்சொல்லப்பட்டது. அடுத்த பதிவில், சிலவிவரங்களைப்பேசுவோம்.
தொடரும்......
Comments
Post a Comment