"திருவள்ளுவர் உள்ளம்".
அதிகாரம் - 24.
"புகழ்".
பரிமேலழகரின் அறிமுகவுரை: " அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச்சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து, இறவாது நிற்கும் கீர்த்தி. இது பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் அதன்பின் வைக்கப்பட்டது.
குறள் எண்: 236.
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
அழகரின் குறளுரை வருமாறு: "மக்களாய்ப்பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்குணம் இல்லாதார், மக்களாய் பிறத்தலின் விலங்காய்ப்பிறத்தல் நன்று. புகழ் ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம். 'மக்களாய் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப்பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்".
அருத்தாந்தரம் = கருத்துப்பிரிவு.
அருத்தாந்தரநியாசம் = எதிர்க்கருத்து, வேற்றுப்பொருள்வைப்பணி.
அருத்தாபத்தி = ஆறு அளவைகளில் ஒன்று. அது, பகலுண்ணானாய்ப் பருத்திருப்பான் ஒருவன், இரவில் உண்டான் என்பதுபோல் அனுமித்தல்.
இவ்வுரை சரிதானாவென அறியமுற்படுமுன், வேறுசில உரையாசிரியர் என்னவுரைத்துள்ளனர் எனக்காண்போம்.
தேவநேயப்பாவாணர் உரை: "ஒருவர் இவ்வுலகில் பிறக்கின் புகழ்க்கேதுவான குணத்தொடு பிறக்க; அக்குணமில்லாதார் பிறத்தலைவிடப்பிறவாதிருத்தலே நல்லது". இவ்வாறுரைத்தப்பின் மேல்விளக்கமாகத்தொடர்கிறார்.
"பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்கு தோன்றுக, தோன்றற்க என்று கூறியதெல்லாம், புகழுக்கேற்ற நல்வினை செய்வானைப்பாராட்டியதும், அது செய்யாதானைப்பழித்ததுமே அன்றி வேறல்ல எனவறிக. புகழ் என்பது இங்கு ஆகுபொருளது".
இவ்வுரை பரிமேலழகரின் உரைத்தழுவியபின், தோழமைக்கண்டித்தலாக பிறவியின் கரணியத்தை பாவாணரய்யா சுட்டுகிறார். இறைவனை பிறவிக்கு காரணமாக பாவாணர் கூறுவது இறைவனுக்கு இழுக்குத்தரும். ஐயன் தனதுநூலில் இவ்வாறு கூறவில்லை. சான்றாக, குறள் எண் - 361இல் "அவா (ஆசை) பிறப்பை ஈனும் வித்து", எனத்தெளிவாக திருவள்ளுவர் உரைக்கிறார்.
அடுத்தக்குறளில் 362இல், "அவாவின்மை (ஆசைக்கொள்ளாமை) பிறவாமையைத்தரும்", என ஐயன் உரைக்கிறார். முடிவாக குறள் எண்- 370இல், "அவாநீப்பின் (ஆசைநீங்கின்) பேரா இயற்கை தரும் (மாறாத இயல்புடையபேரின்பத்தைத்தரும்) என முடிக்கிறார்.
இவையெல்லாம் பாவாணர் உரைகளே. இங்கே, பிறவிக்கு காரணம் இறைவன் / ஊழ் என்பதாக ஐயன் சொல்லவில்லை. வலிந்து பொருள்கொள்வதென்பது, அது அவரவர் திறன்சார்ந்தது!
புகழ் ஈண்டு ஆகுபெயர் என்கிறார் பரிமேலழகர். பிறப்புக்கு ஆகுபெயராய் புகழ் இருப்பதாக அறியமுடியவில்லை. அவ்வாறு சான்றுகள் இருந்தால், திருக்குறளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்களிலிருந்து அறிந்தவர்கள் சான்றுகள் தரவேண்டுகிறேன்.
ஐயன் இவ்வதிகாரத்தில் புகழின் சிறப்புகள், அதை ஈட்டாததால் ஏற்படும் இகழ்ச்சிகள் முதலானவைப்பற்றி விளக்குகிறார்.
இவ்வுலக நடைமுறையில் பலர்க்கும் அவர் இறப்பிற்குப்பின்னரே புகழ் வந்து சேர்கிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இதற்கு ஒரு சிறந்தசான்று.
'வருவிக்கவுற்றதால் வந்தேன்' என்றறிவித்த வள்ளல்பெருமானையே, வழக்குமன்றத்திற்கு இழுத்தனர். கருவிலே திருவார்த்த வள்ளல்பெருமானே, "கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன்" என மனம் நோநொந்து கூறினார். பரிமேலழகர் கூற்றுப்படி அவர் வாழும் காலத்தில் புகழடைய முடியாமல் போனதும், சிதம்பரத்தைச்சேர்ந்த பார்பனர்களால் விரட்டப்பட்டதும், புகழுக்கேற்ற குணங்கள் இல்லாது பிறந்ததாலா? பரிமேலழகரின் உரை உள்நோக்கமும் இனப்பாசமும் மிக்கதென்பது சொல்லாமலே விளங்கும். அதனை அடிப்படையாகக்கொண்டு உரையாசிரியர்கள் ஒட்டியும் வெட்டியும் உரைசெய்திருக்க வேண்டியதில்லை.
தோன்றுக, தோன்றற்க என்னும் சொற்களுக்கு பாவாணர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுபோல்வன. மக்களின் பெரும்பான்மை வாழ்வு திட்டமிட்டு நல்வினை செய்து அதன்மூலம் புகழ் ஈட்டுதலை நோக்கமாகக்கொண்டதன்று. தாம் வாழும்போது, தம்மால் மற்றவர்கள் துன்பமடைந்துவிடக்கூடாதென்ற ஒற்றைக்கொள்கையில் வாழ்ந்து முடிக்கின்றனர். உதவி புரியாவிட்டாலும், உபத்திரவம் புரிந்துவிடக்கூடாது என்பது வழக்கு. இதில் நல்வினைக்கோட்பாடு இயல்பாகவே உள்ளடங்கவில்லையா? அவர்களுக்கு புகழ் உண்டாகிவிடுகிறதா? இவ்வாறானவர்கள் இறந்தபின்னரே அவர்களது அருமை உணரப்படுகிறது. "இருக்கும்போது அவர் அருமை நமக்கு தெரியாமல் போய்விட்டதே", என்று மக்கள் புலம்புவது பெருவழக்கு.
பிறந்துவிட்ட எவரொருவரும், உயிர்வாழ்தல்பொருட்டு வினையாற்றியே தீரவேண்டியுள்ளது. அவர்கள் புகழுக்குரிய குணங்களுடன் பிறவாதும் இருக்கலாம்; புகழுக்கேற்ற நல்வினைகளை செய்யும் திறனற்றும் இருக்கலாம். ஆகவே, தோன்றுக, தோன்றற்க என்னும் சொற்களுக்கு வேறுபொருள் இருக்கவேண்டும்.
வ. உ. சிதம்பனார் அவர்களுரை சற்று மேம்பட்டத்தெளிவை வழங்குகிறது. அது வருமாறு: "(ஒருவன் பல்லார்முன்) தோன்றில் புகழுடன் தோன்றுக; புகழ் இல்லாதார் (பல்லார்முன்) தோன்றுதலினும் தோன்றாதிருத்தல் நன்மை". இவ்வாறு பொருள்தெளிவுகூட்டிய சிதம்பரனார் இக்குறளுக்கான கருத்தாக, "புகழ் செய்யாதார் தம்வீட்டைவிட்டு வெளியேறாமை நன்று" எனக்கூறி முடிக்கிறார். அவ்வாறாயின் அவர் உயிர்வாழ்தல் எங்ஙனம்? இவ்வாறாக நேரெதிர்நிலைக்குச்சென்று, பரிமேலழகரின் உரைக்கு அணிசெய்துவிடுகிறார்.
இனி, நாமக்கல் கவிஞரின் உரைகாண்போம். "(ஒரு காரியத்துக்கு) பலபேருக்கிடையில் முன்னால் வந்தால் ஏதாவது ஒரு சாமார்த்தியப்புகழுள்ளவன் வரவேண்டும். அந்தச் சாமார்த்தியப்புகழ் இல்லாதவன் முன்னால் வருவதைவிட மறைந்திருப்பதே நல்லது". ஏனெனில், அந்தக்காரியத்துக்கு வேண்டிய அளவுக்காவது வித்தகமுள்ளவனுக்குத்தான், பிறர் மதிக்கத்தக்க புகழுண்டு. 'தோன்றில்' என்பதற்கு 'முன்வந்தால்', அல்லது 'பிரவேசித்தால்', அல்லது 'தலையிட்டால்' என்பதுபொருள்". நாமக்கல்லார் உரைத்ததே சரியான, பொருத்தமான பொருள். மேலும், பரிமேலழகரின் உரையை எடுத்தெழுதி அவ்வுரை 'முற்றிலும் பயனற்றது' என்று அறுதியிட்டுவிட்டார்.
நாமக்கல்லார் 'ஒருகாரியம்' என்று சொல்வதுகூட பொருத்தமான சொல்லல்ல. ஒருவன் தனக்கான காரியத்தைக்கூட வினைத்திறத்துடன் செய்துமுடிக்கலாம். அதற்காக அவர்தம் குடும்பத்தார், உற்றாரும் சுற்றத்தாரும் அவரைப்பாராட்டக்கூடும். அத்தகைய பாராட்டுரை, ஐயன் குறிப்பிடும் புகழன்று. பொதுவில் பயன்தரும் ஒருகாரியத்தை ஒருவன் தன்வினைத்திறத்தால் சிறப்பாக முடித்து, அதற்காக புகழப்படுதலைத்தான் ஐயன் இக்குறளில் குறிக்கிறார். அவ்வாறான பொதுகாரியம் செய்யத்தலைப்படுபவன், புகழப்படுதற்குரிய வினைத்திறன் இருப்பின் தலைப்படுக அல்லது நீங்குக என்பதே ஈண்டு ஐயன் உரைப்பது. புகழ் என்பது பயனே; அதன் முன்நிபந்தனையும் முதற்காரணமும் வினையே.
இனிகுறளுக்கான நேரடிப்பொருளைக்காண்போம்.
" பல்லாரும் பயன்பெறும் ஒருவினையைச்செய்ய முன்தோன்றுபவன், புகழ் ஈட்டக்கூடுமானால் தோன்றுக. அவ்வாறு இல்லையாயின் முன்தோன்றாதிருத்தல் நன்று".
வணக்கம்.
Comments
Post a Comment