திராவிடம்.
"பெண்வழிசேறல்".
நாம் பெற்ற மகன், கரவாக ஒருத்தியால் கவரப்பட்டு, நம் சொற்கேளாமல் வாழ்க்கைப்பட்டுவிட்டான். எத்துணை எடுத்துக்கூறியும் நம் குலவழக்கத்தையோ, குடும்ப பழக்கத்தையோ கைக்கொள்வதில்லை. மோகமும் ஆசையும் கடந்தும், மீளவில்லை. அதுவே வாழ்க்கையாகிப்போனது. உறவு, கொண்டுகொடுத்தல் எல்லாம் பெண்வழியே நடைப்பெறுகின்றன.
போதாக்குறைக்கு, நமது சம்பந்தி வந்தான். நம் சிறப்புகளையெல்லாம் நுணுக்கமாக அறிந்தான். தனது மருமகளின் தனிக்குடித்தனம் நீடிக்கவேண்டுமானால், தந்தைவழி தொடர்புகள் மறையுமாறு செய்யவேண்டுமென முடிவெடுத்தான். நாயைக்கொல்வதானாலும் சட்டப்படி கொன்றால்தான், தனது சூழ்ச்சி வெளியே தெரியாதெனத் திட்டம் தீட்டினான். தனது மருமகனிடம், உங்கள் பெருமைகளுக்கு காரணம் நீங்கள் பிறந்த மண்தான். உங்களைப் பெற்றவர் காரணமல்ல. உங்களிடம் சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன என்றால் அதற்கு காரணம் நீங்கள் ஓரூரில் பிறந்தவர் என்பதால்தான். பாருங்கள், நீங்கள் இவ்வளவு காலமும் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்களே, அதற்கு உங்கள் தகுதியும், என் மகளின் திறமையும்தானே காரணம். உண்மையாகச்சொல்ல வேண்டுமானால், உங்களைப்பெற்றதாகச் சொல்பவர், உங்களுக்கு முன்னதாக பிறந்தவர்; மூத்தவர் என்று சொல்லாம். நீங்களெல்லாம் இன்னாரென அறியமுடியாதவர்களுக்கு பிறந்த மக்கள். முன்னதாக பிறந்தவன் என்பதற்காக, உன்னைப்பெற்றவன் என்பதை எவ்வாறு ஏற்கமுடியம்? என்றவாறெல்லாம் எரணத்தோடும், காரணகாரியத்தோடும் பண்ணிப்பண்ணிப் பேசினான், பிரித்தாளும் வித்தைக்கு ஏகபோக குத்தகைக்காரன். ஏற்கனவே, வெள்ளைத்தோல் சிறுக்கியிடம் சிக்கியவன், கள்ளுமுண்டு போதையேறினவன் ஆனான். அதன்பின், தன்தகப்பனுக்கு பங்காளியாக நடக்கலானான்.
பாவம் இவன் என்செய்வான்? பெற்றது ஐந்தும், அனைத்தும் இவ்வண்ணமே பங்காளியானால், புலம்புவதைத்தவிர, என்செய்வான்? மக்களோ தனித்தலைக்கட்டுவரி செலுத்திக்கொண்டிருக்கும், தனிக்குடித்தனம் என்னும் நிலையை அடைந்தவர்கள். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டவர். தோழனென அழைக்கச் சொல்கின்றனர். அயலூரார் வரும்போதெல்லாம், தகப்பன்நிலையை நிறுவ படாதபாடுபட்டான். ஏழை சொல் அவையேறவில்லை; மக்களும் ஏற்கவில்லை. போதாக்குறைக்கு மக்கள் எண்ணிக்கையில் பலர். மக்களாட்சி கோட்பாட்டின்படி, இவனுக்கு எண்ணிக்கை பலமும் இல்லை. பித்தனாகிப்போனான்.
சித்தனொருவன் வந்தான். யார் ஐயனே நீங்கள் என்றான். நான் தான் உன்னைப்பெற்றவன், முருகன் என்றான். பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்ற இலக்கியமாக தன்வாழ்வு ஆனதாகப்புலம்பினான். முருகன் முறுவலித்தான். நானே அப்படித்தானே இருந்தேன். நான் திருந்தவில்லையா? அப்படி உன்மக்களும் திருத்தும்காலம் வரும். வையத்தலைமையை உனக்கு தருவேன்; யாமிருக்க பயமேன் என்றான். அப்பனே, அதுவரை நானென்ன செய்ய என்றான். பிள்ளைகளின் தறுதலைத்தன்மை நீங்கும் காலம்வரை, அவர்களை மறந்திரு. இவன் என் தகப்பனாக இருக்கக்கூடாதோ என அவர்கள் ஏங்கும்வண்ணம் உன்னை தகுதியாக்கிக்கொள். நீ பெற்றதும், உன் தூரதூர உறவுகளும் உன்னை தேடிவரும். நீரற்ற குளமானால் பறவைகள் பிரிந்துதானே செல்லும். பழம் பழுத்த மரமாயிருந்தால் பிரிந்த பறவைகள் தானே நாடிவரும்.
உன்னில் இருந்து நானே இயக்குகிறேன். சில்லாயிரம் ஆண்டுகளாக, நாதன் உள்ளிருக்கையில் நட்டக்கல்லை நாடினாய். இதைக் காலமயக்கம் என்பர். அதனால், உள்ளிருந்து வெளிப்பட்டு உன்னிடம் பேச நேர்ந்தது. தெளிந்ததா மகனே?
பித்தம்நீங்கியது. சித்தம் தெளிந்தது. சித்தனானான். நன்றாக தமிழ் செய்யுமாறு தன்னை படைத்தனன் எனவறிந்தான்.
செய்க தமிழ், செய்க தமிழ். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே, அதைத்தொழுது படித்திடடி பாப்பா.
Comments
Post a Comment