திருவள்ளுவர் உள்ளம்.
திருவள்ளுவர் உள்ளம்.
'பிறவி'யும் 'அவா'வும்.
இவ்வாய்வுக்கு பரிமேலழகர், தேவநேயப்பாவாணர், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, வ.ஊ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் உரைகள் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை விரிவாகப்பேசப்படும். உரை வேறுபாடுகள் இருந்தால் மட்டுமே சொல்லப்படும். அல்லாக்கால், ஒத்தவுரைகள் எனக்கொள்க.
அதிகாரம் - 1. கடவுள் வாழ்த்து.
குறள் எண்: 10.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
"இறைவன் திருவடியாகிய புணையைச்சேர்ந்தவர் பிறவியாகிய பெரியகடலைக்கடப்பர். அப்புணையைச்சேராதவர் அக்கடலைக்கடவாதவராய் அதனுள் அழுந்துவர். பிறவியை பெருங்கடலாக உருவகித்து இறைவனடியை புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்".
இவ்வுரையின்படி, இறைவனை துணையாகக்கொள்ளாதவர்கள் பிறவாமையை அடையமுடியாது. அப்படியானால், பிறவிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட, இறைவனை ஏற்காத மகாவீரர், கௌதமபுத்தர் முதலானோர் பிறவாமையை அடையவில்லை எனக்கொள்ளமுடியுமா?
ஐயன் நீந்துவர், நீந்தார் என இரண்டு வினைச்சொற்களை ஆண்டுள்ளார். இது, ஒருவர் தானே செய்யவேண்டிய வினையைச்சுட்டும். புணை அல்லது கலம் அல்லது தெப்பம் ஒன்றினை பிடித்தவர் நீந்துதல் என்ற வினையைச்செய்ய முடியுமா? அல்லது தெப்பத்தில் ஏறிய ஒருவர் நீந்துதல் என்ற வினையைச்செய்ய முடியுமா? தெப்பத்தைப்பிடித்த ஒருவர் அதில் ஏறிவிடுவார். அவர் கலத்தைச்செலுத்தமட்டுமே செலுத்தமுடியும்; நீந்துதலைச்செய்யமுடியாது. திருவள்ளுவர் இறைவனை கலமாக உருவகித்திருந்திருந்தால் 'செலுத்துதல்' என்ற வினைச்சொல் லை ஆண்டிருப்பார். ஐயன் நீந்துதல் என்ற வினைச்சொல்லை ஆண்டுள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும். இது பிறர்துணையை எதிர்பார்க்காது தானே செய்ய வேண்டிய முயற்சியைக்குறிக்கிறது அதாவது மானுட முயற்சியைக்குறிக்கிறது. இதற்கான அகச்சான்றுகளை திருக்குறளில் இருந்தே காண்போம்.
அதிகாரம் - 37. அவாவறுத்தல்.
குறள் எண் : 361
"அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து". இக்குறளில் பிறப்புக்கு ஆசையே விதை என ஐயன் மிக உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக, குறள் எண் : 362
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்", என்னும் குறளில், ஆசையை நீக்குதல் பிறவாமையைத்தரும் என வழியையும் கூறிவிடுகிறார்.
இதனை மேலும் வலியுறுத்தி,
குறள் எண் - 370இல்,
"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்", என்று பிறவாமைக்கான வழியை மீண்டும் வலியுறுத்திச்சொல்லிவிடுகிறார். இம்மூன்று குறள்களிலும் ஆசையை விடுதல் என்னும் வினையை ஒருவர் அவராகவே செய்யவேண்டிய 'தன்முயற்சி' என்பதாகவே சொல்கிறார். இவற்றில் துணையைப்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை .
இவ்வாறாக, பிறப்புக்கான காரணத்தையும், பிறவாமைக்கான வழியைச் சொன்ன, மானுட முயற்சியை முதன்மைப்படுத்திய திருவள்ளுவர், இறைவனாகிய தெப்பத்தைப்பிடித்தவர் பிறவியைக்கடந்துவிடுவார் என எப்படி சொல்லயிருக்க முடியும்?
மானுட முயற்சியின் மூலம் தெய்வநிலையை அடையும் வழிமுறைகளை மேலும் இரண்டு இடங்களில் சொல்லியுள்ளார். பிறவாமை பெற்றவரே தெய்வநிலைக்கு உயரமுடியும் என்பதில் ஐயமிருக்க முடியாது. அக்குறள்களைக்காண்போம்.
அதிகாரம் - 5. இல்வாழ்க்கை.
குறள் எண் : 50.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்".
அதிகாரம் - 35. துறவு.
குறள் எண் : 346.
"யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்
வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்".
இவ்விரு குறள்களிலும், தனது முயற்சியினால் பிறவியை முடித்து தெய்வநிலைக்கு உயரலாம் என்றே தெளிவாகச்சொல்கிறார்.
இவ்வாறாக மானுட முயற்சியாலேயே பிறவாமையை அடையமுடியும் என வலியுறுத்தும் ஐயன், எங்ஙனம் இறைவனாகிய தெப்பத்தைப்பிடித்தவரே பிறவியைக்கடக்கமுடியும் என்று சொல்லுவார்?
ஆகவே, கடவுள் வாழ்த்தில் ஐயன் பிறவியைக்கடப்பதற்கான உபாயமாக இறைவனடியைச்சொல்லவில்லை. பிறவியைக்கடந்தால் சேருமிடம் இறைவனடி என்பதையே சொல்கிறார். நீந்துபவர் இறைவனடி சேர்வார். நீந்தாதார் பிறவியாகிய கடலிலேயே இருப்பார் என்பதே ஐயன் சொன்னது. ஈரேழ் பிறப்பு, ஏழேழ் பிறப்பு என்பனவெல்லாம் ஐயன் உரைத்ததே. இந்நீண்ட பிறவித்தொடரை பெருங்கடலுக்கு ஒப்பிட்டார். நீந்துதல் என்று தெளிவாக மனிதமுயற்சியைச் சொல்லியிருந்தும், உரையாசிரியர்கள் கருத்து பெருங்கடல் என்னும் உவமையில் நிலைப்பெற்றமை, அதனை ஏகதேச உருவக அணியாகவும், ஒருமருங்குருவகமாகவும் கொண்டு இறைவனை தெப்பமாக உருவகிக்க வைத்துவிட்டது. தவிரவும் ஒருபெருங்கடலை நீந்திக்கடப்பது என்பது மானுடமுயற்சிக்கு இயலாதென்பதாலும், உரையாசிரியர்கள் ஒரு துணையை உருவகிக்க வேண்டியதாகிவிட்டது.
ஊழ்வினைக்கோட்பாடு என்னும் மெய்யியல் அடிப்படையில் பார்த்தாலும் உரையாசிரியர்களின் உரை முரணுடையதே. ஒருவர் தமது வினைப்பயனை தாமே அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும். வினைப்பயன் கழயக்கழிய நாம் பிறவாமையை நோக்கி செல்வோம். இவ்வாறிருக்க, இறைவன் துணையை பற்றியது மட்டுமே பிறவாமையை நல்குமென்பது இறைவனின் ஏற்பாடாகிய ஊழ்வினைக்கோட்பாட்டுக்கு முரணானது. இவ்வாறெல்லாம் எண்ணுவது இறைவன் துணையை மறுப்பதாகாதோ என்றால், ஆகாது. இறைவன் எல்லாக் காரியங்களிலும் தோன்றாத்துணையாகவே இருப்பான்.
பிறவி, ஊழ்வினை ஆகியனவற்றை ஏற்றும், கடவுளை ஏற்காமலும் இருப்பவர்கள் பண்டுதொட்டே உலகெங்கும் இருந்து வருகின்றனர். இறைவன் இருக்கிறான் என்றால், அவனை மறுப்பவர்களும் அவனது பிள்ளைகளே. அல்லவா? அப்படியிருக்க, தன்னை ஏற்காதவர்களுக்கும் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது இறைவனின் பொறுப்புதானே. உரையாசிரியர்கள் உரைத்ததுபோல தன்னைப்பற்றியவர்களை மட்டுமே பிறவிப்பெருங்கடலில் இருந்து கரைச்சேர்ப்பான் என்பது, வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுக்கு பொருந்துமோ?
இனி, குறள் உரையைக்காண்போம்.
அதிகாரம் - 1. கடவுள் வாழ்த்து.
குறள் எண்: 10.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
"பெருங்கடல்போலும் பிறவியை நீந்துபவர் இறைவனடி சேர்வார். நீந்தாதவர் பிறவியாகிய பெருங்கடலிலேயே இருப்பர்".
Comments
Post a Comment