யகரக்குடும்பம்.

வழக்கு ஒழியும் யகரக்குடும்பம்.

"ஆவோ டல்லது யகரம் முதலாது" - தொல்காப்பியம் ஏழுத்ததிகார சூத்திரம் 65.
இதன்பொருள்: யகரமெய்யுடன்(ய்) சேர்ந்த 'ஆ'  - ய்+ஆ= யா, என்னும் உயிர்மெய் எழுத்து மட்டுமே ஒரு சொல்லுக்கு முதலில் வரும்.  ஏனைய பதினோரு மெய்யெழுத்துகள் சொல்லுக்கு இறுதியிலோ, இடையிலோ மட்டுமே வரும்.
 
தற்காலத்தில், 'யா' என்னும் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும்‌ சொல்கள் வேகமாக வழக்கு ஒழிந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, யாறு (ஆறு), யாண்டு (ஆண்டு), யானை (ஆனை), யாடு (ஆடு), யாக்கை (ஆக்கை), யாமை (ஆமை), யாண்டு (எங்கே), யாப்பு, யாழ், யாய் (ஆய்), யாளி (ஆழி), யார் (ஆர்), யாது (ஏது), யாவை (எவை). இதில், யாப்பு என்பதனை 'ஆப்பு' எனவும், யாழ் என்பதனை 'ஆழ்' எனவும் நற்றமிழரால்  வழங்க இயலாமல் போயிற்றுப்போலும்! 'யா' என்பதின் ஒலிப்போலியான 'ஆ' அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. வழக்கிலும் செய்யுளிலும் இப்போக்கு ஊன்றிவிட்டது. யார், யாது, யாவை, யாண்டு, யாங்ஙனம் முதலான வினாச்சொல்லுக்குள் 'யா' முடக்கப்பட்டுவிட்டது.

நாம் செய்யவேண்டுவது, 'யா' எழுத்தில் தொடங்கும் சொல்களை அதிகம் பயன்படுத்தவேண்டும். 'யா'க்குப் பதிலாக அதன் எழுத்துப்போலி 'ஆ'வைப் பயன்படுத்துவதைக் குறைக்கவேண்டும்.

மேலும், ய், ய, யி, யீ, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ முதலான யகரக்குடும்ப எழுத்துகள் வருமாறு சொற்புணர்ச்சியுடன் எழுதப்பழகவேண்டும். எடுத்துக்காட்டாக, போய் வா, ஆயகலைகள், போயிருந்தான், இடையீடு, சாயுங்காலம், இடையூறு,  தாயென்னும் தெய்வம், தாயே வணக்கம், தாயைப் பேணு, தாயொடு செல், தாயோடு வாழ்.

'யி' என்னும் உயிர்மெய் எழுத்து ஒருசொல்லின் முதலில் வரும் இலக்கணத்தை பாவாணரய்யா கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
"நிலைமொழி யீற்றிலுள்ள யகர மெய்யோடாவது, இ,ஈ,ஐ என்ற உயிர்களோடாவது இகரம் புணர்ந்து, 'யி' வருமொழி முதலில் வரலாம்; ஆனால், தனித்து மொழி முதலில் வரவே வராது. எ-டு: போய்+இருக்கிறான் = போயிருக்கிறான்.
துடி+இடை = துடியிடை.
நீ+இருந்தாயா = நீயிருந்தாயா?
இதை+இப்படியே = இதையிப்படியே."

யகரக்குடும்ப எழுத்துகளுக்கு வாழ்வளிப்பதற்கு, உடம்படுமெய்யை நாம் கடைப்பிடிக்கலாம். 
"இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்" - நன்னூல்-162.
எ-டு: மதி+ஒளி = மதியொளி.
தீ+அனல் = தீயனல்.
பறை+அறிவிப்பு = பறையறிவிப்பு.

இவ்வாறாக, தமிழ் நெடுங்கணக்கில், சொல்லுக்கு முதலெழுத்தாக வராதென வரையறுக்கப்பட்ட  எழுத்துகளைச் சொற்புணர்ச்சி வாயிலாக, நாம் புழங்கி கொண்டிருந்தால்தான், அவை வழக்கொழியாது, வாழ்ந்துவரும்.
இது நம் கடமையன்றோ!

 

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்