மொழிமுதல் எழுத்துகள்.
மொழிமுதல் எழுத்துகள்.
நண்பரொருவர், அவர்தம் முகநூல் பக்கத்தில், இலக்கண அறிஞர் திரு அ.கி.பரந்தாமனாரின் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது வருமாறு: "இக்காலத்தில் ரகரம் பிறமொழிச் சொற்களுக்கு மொழிமுதல் எழுத்தாக வரலாம். தொன்றுதொட்டு இராமன், இராமாயணம், அரங்கநாதன் என்று எழுதுவதை, இன்றும் நாம் மேற்கொள்வதால் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே எழுதவேண்டுவதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம் என்று எழுதவேண்டியதில்லை. ரப்பர் என்னும் சொல்லை 'இரப்பர்' என்று எழுதினால் 'யாசிப்பவர்' என்றுதானே பொருள்படும். ஆதலால், தொன்றுதொட்டு எழுதி வருவதற்கு மட்டும் அகரம், இகரம் பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அங்ஙனம் செய்ய வேண்டியதில்லை".
திரு. அ.கி.பரந்தாமனாரின் கருத்துகளை, எண்ணியபோது எழுந்த எண்ணங்களின் விளைவே இப்பதிவு.
ஒல்காப்புகழ் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்துகளாக எவற்றைப் பட்டியலிடுகறாரென அறிவோம். எழுத்ததிகாரம், மொழிமரபு இயல்.
1. உயிரெழுத்துகள்...... -12 (சூத்.59).
2. ககர உயிர்மெய்கள் - 12,
3. தகர உயிர்மெய்கள் - 12,
4. நகர உயிர்மெய்கள் - 12,
5. பகர உயிர்மெய்கள் - 12,
6. மகர உயிர்மெய்கள் - 12 (சூத்.61).
7. சா, சி, சீ, சு, சூ, செ,
சே, சொ, சோ.................. -9 (சூத்.62).
8. வ, வா, வி, வீ, வெ,
வே, வை, வௌ.............. -8 (சூத்.63).
9. ஞா, ஞெ, ஞொ............. -3 (சூத். 64).
10. யா ................................ -1 (சூத். 65).
திரள் எண்........................ - 93.
இதற்குப்பின், பவணந்தி முனிவர் (நன்னூலார்) சேர்த்தவை.
1. ங .................................. - 1
2. ச, சை, சௌ................ - 3
3. ய, யு, யூ, யோ, யௌ.. - 5
4. ஞ .................................. - 1
திரள் எண் ..................... - 10
தொல்காப்பியமும் நன்னூலும் சேர்ந்து 103 எழுத்துக்களே மொழிமுதல் எழுத்துகளாம். தொல்காப்பியருக்குப்பின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் வந்த நன்னூலார் பத்து உயிர்மெய் எழுத்துகளைமட்டுமே மொழிமுதலாக்க முடிந்தது. இப்பத்தில் பெயர்ச்சொல் நீங்கலாக வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எத்துணை புதிதாக ஆக்கப்பட்டனவென ஆயவேண்டும். இப்பத்து உயிர்மெய்யெழுத்துகளில் இருந்து வினை, இடை, உரிச்சொல்கள் பலவும் உருவாக்கப்பட்டிருந்தால்மட்டுமே இவைகள் மொழிமுதலாக இருப்பதற்கான ஞாயம் உண்டெனக் கொள்ளலாம். 1911இல் யாழ்பாணம் திரு நா.கதிரைவேற்பிள்ளையவரின் 'தமிழ்மொழி அகராதி' வெளியிடப்பட்டது. அவ்வகராதியில் நன்னூலார் சேர்த்த பத்து மொழிமுதல் உயிர்மெய் சொல்களாக, தொகுக்கப்பட்ட எண்ணிக்கை வருமாறு:
ங - 2.
ஞ -. 9.
ய - 127.
யு - 40.
யூ -. 16.
யோ- 93.
யௌ-12
700 ஆண்டுகாலத்தில் 299 சொல்களே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் வினை, இடை, உரிச்சொல்கள் எத்துணை எனப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலனவை பெயர்ச்சொல்களே. ச, சை, சௌ ஆகியன மொழிமுதலா என்பது பற்றிய வேறுபாடு தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. தொல்காப்பயர் இவற்றை ஏன் விலக்கினாரென்பது இன்னமும் துலக்கமாகத் தெரியவில்லை.
நாம் அகிப கருத்துகளுக்கு மீள்வோம். ரகரம் என்பதால், இடப்பொருள்கருதி ரகர வரிசை உயிர்மெய்களை கணக்கில் எடுப்போம். நா.கதிரைவேற்பிள்ளையவர் தொகுத்த ரகர வரிசைச்சொல்களின் பட்டியல் வருமாறு:
ர - 24
ரா - 22
ரி - 2
ரு - 18
ரூ - 3
ரே - 4
ரை - 3
ரோ - 9
ரௌ - 3, திரள் எண் - 88. இதில், ரீ, ரெ, ரொ எழுத்துகளில் சொல்கள் இல்லை. இந்த 88 சொல்களில் எத்துணை வினை, இடை, உரிச்சொல்கள் எனப்பார்த்தால் எஞ்சுவது ஏமாற்றமே.
அடுத்ததாக, லகர வரிசைப் பட்டியல் வருமாறு:
ல - 12
லா - 3
லி - 1
லீ - 1
லை - 1
லோ -7, திரள் எண் - 25.
'இரப்பர்' என்றெழுதினால் யாசிப்பவர் எனவல்லவா பொருள்வரும் என்று அகிப விகடமாக உரைத்தார். எனக்குள்ள வருத்தம் என்னவென்றால் பவணந்தியாரும் அகிபவும், ட, ண, ழ, ள, ற, ன வரிசை உயிர்மெய்கள்மீது தமது கவனத்தை செலுத்தாது விட்டுவிட்டனரே என்பதுதான்.
தொல்காப்பியர் விலக்கிய உயிர்முதல் எழுத்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர விரும்புபவர்கள், முதலில் வினை, இடை, உரிச்சொல்களை அவற்றில் உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தபின், அவற்றில் பெயர்ச்சொல்களை உருவாக்கலாம் எனக்கருதுகிறேன். இதுவே மொழிச்செழுமையை ஈனும். இதனைவிடுத்து, பெயர்ச்சொல் ஆக்கத்திற்கான தொல்காப்பியர் விலக்கின உயிர்மெய்களை மொழிமுதலாக பயன்படுத்தினால், அதனால் பயனடைவது சமசுகிருதமே.
Comments
Post a Comment