புலவர் வெற்றியழகனார்.

"மூன்றாம் வேற்றுமை".
மூன்றாம் வேற்றுமையின் பொருள், 1.கருவி, 2.கருத்தா, 3.உடனிகழ்ச்சி என்பன.
ஆல், ஆன் என்னும் உருபுகள் கருவி, கருத்தாப் பொருளுக்கானவை. கொண்டு என்னும் சொல்லுருபு கருவிப் பொருளுக்கானது.  
ஒடு, ஓடு என்னும் உருபுகளும், உடன் என்னும் சொல்லுருபும் உடனிகழ்ச்சிப் பொருளுக்கானது.
இவை நாமறிந்ததே.

இதில் ஒடு, ஓடு ஆகிய உருபுகளுக்கு பொருள் ஒன்றே யெனினும், ஏன் இரண்டு உருபுகள் தோன்றின என்பதற்கு புலவர் வெற்றியழகனார் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.  அதனை அறியலாமே.

உயிரெழுத்துகள் தொடருமானால் 'ஓர்' எனவும்; உயிர்மெய் எழுத்துகள் தொடருமானால் 'ஒரு' எனவும் பயன்படுத்துவதைப் போல், உயிரெழுத்துகள் தொடருமானால் 'ஓடு' எனவும்; உயிர்மெய் எழுத்துகள் தொடருமானால் 'ஒடு' எனவும் வருதல் வேண்டும்.
# உயிரெழுத்து தொடருமானால் 'ஓடு' வருவதற்கான சான்றுகள்.
* "மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா" - தொல். எழுத்து -  10.
* "உருவு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும்" - தொல். எழுத்து - 17.
* "ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோடு
எண்ணான்கு உத்தியின் ஓத்துப் படலம்" - நன். பாயிரம் - 4.
* "அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை" - நன். உயிரியல் - 459.

# மெய்யெழுத்து தொடருமானால் 'ஒடு' வருவதற்கான சான்றுகள்.
* "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" - தொல். எழுத்து - 15.
* "யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்" - தொல். எழுத்து - 29.
* "பிரிதொடு படாஅன் தன்மதங் கொளலே" - நன். பாயிரம் - 11.
* "வினையொடு வரினும்எண் ணினைய வேற்பன" - நன். இடையியல் - 430.
தொல்காப்பியர் எல்லா இடங்களிலும் இம்முறையினைத் தவறாது கடைப்பிடித்துள்ளார். ஒருசில இடங்களில் மாறி வந்துள்ளமை, பதிப்பித்தோரின் சொற்பிரிப்பில் நேர்ந்த பிழை.

திருக்குறள் சான்று:
"விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்" - (எண் 410).

புலவர் திரு. வெற்றியழகனாரின்  "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - எளியவுரை" என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்