யகரக்குடும்பம்.
"யகரக்குடும்பம்".
யகரம் (ய்) உட்பட அக்குடும்பத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக்கள் ('யா' நீங்கலாக), ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக வாரா. இவ்வெழுத்துகள் சொல்லின் இடையில், ஈற்றில் வருவன. எ-டு:
ய் - தாய்.
யி - போயிருந்தான்.
யு - பாயும்புலி.
யூ - இடையூறு.
யெ - எவையெல்லாம்.
யே - தாயே.
யை - ஐயை.
யோ - சேயோன்.
யௌ - தமிழ்ச்சொல் இல்லை.
எனவே, சொல் முதலாக வாராத மேற்சொன்ன பன்னிரண்டு யகரக்குடும்ப எழுத்துகளை, இடையிலும் ஈற்றிலும் அதிக அளவில் பயன்படுத்தி, அவற்றை வாழவைப்பது நம் கடன்.
இக்காலத்தில், ய, யு, யூ, யோ, யௌ முதலானவும் சொல்லின் முதலில் வருகின்றன. எ- டு:
ய - யவனர், யசோதை.
யு - யுனானி.
யூ - யூதர், யூகி.
யோ - யோகம், யோசனை.
யௌ - யௌவனம்.
இவை, தமிழ்ச்சொல்கள் அல்ல. எனினும், இவைகளை நேரடியாக வலிந்துவிலக்காமல், சிறப்பான தமிழ்ச்சொல்கள்வழி உதிர்ந்து விழச்செய்யலாம். சான்றாக, யூகி என்பது ஊகி என்னும் சொல்லாலும், யோகம் என்பது ஓகம் என்னும் சொல்லாலும், யௌவனம் என்பது இளமை என்னும் சொல்லாலும் பயன்பாட்டில் இருந்து நீங்கி வருகின்றன. யவனர், யுனானி, யூதர் போன்றனவற்றுக்கு இன்னமும் எளிய, சிறப்பான தமிழ்ச்சொல்கள் புழக்கத்தில் வரவில்லை. எதிர்காலத்தில் வரும்.
"பன்னீர் உயிரும் கசதந பமவய
ஙஞ ஈரைந்து உயிர்மெய்யும் மொழிமுதல்" - என்னும் நன்னூல் விதி, இச்சொல்களின் புழக்கத்திற்கான உயிர்வளியைத் தருகின்றது. எனவே, இச்சொல்களின் கழுத்தை நெறிக்காமல், புதிய தமிழ்ச்சொல்கள்வழி உதிர்ந்துவிழச்செய்வதே நல்லது.
பேசும்பொழுது, போயிருந்தான் என்பது இயல்பான புணர்ச்சியாக அமைந்து வெளிப்படுகின்றது. போய், இருந்தான் என இருசொல்களாக யாரும் பிரித்துச்சொல்வதில்லை. இதேபோல்தான், எவையெல்லாம் என்பதும். இந்த இயல்பு சொல்லாடல்களில், சொல்கள் புணர்ந்தவழியை உணர்ந்தே உயிர்மெய் எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அதனால்தான் "உடலோடு உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதியும் எழுதப்பட்டது. நிலைமொழி மெய்யீற்று சொல்லாக இருந்து, வருமொழி உயிர்முதல் சொல்லாக இருக்குமானால், எளிமையும் பொருள் தெளிவும் சிதையாவண்ணம், மேற்சொன்ன விதிப்படி புணர்ந்து உயிர்மெய்களாக எழுதத்தொடங்கினால் உயிர்மெய்களின் வாழ்வு சிறக்கும்; தமிழ்மொழிநடையும் மீளும். நன்றி.
Comments
Post a Comment