அறிஞர் தமிழா?
அறிஞர் தமிழா? எழுத்துக்கோத்தவர் தமிழா?
"விதிகட்கு அமையாமல் இங்குக் காட்டப்படாத வலிமிகும் இடங்களையும் வலிமிகா இடங் களையும், மறைமலையடிகள், மகிழ்நன், நாட்டார், கா. சுப்பிரமணிய பிள்ளை முதலியோர் எழுதிய உரைநடை நூல்களிற் கண்டு தெளிக". இவ்வாறு மொழிஞாயிறு பாவாணரய்யா, தமது 'உரைநடை இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும்' என்னும் நூலில் கூறுகிறார்.
இலக்கணவிதிகள், விதிவிலக்குகள் எல்லாவற்றையும் தொகுத்துச்சொல்லிவிடமுடியாது; தமிழறிஞர்களின் நூல்களை ஊன்றி பயிலும்போது, நமது மொழித்திறன் கூடும், செப்பமடையும் என்பது பாவாணர் பெருமானின் கருத்து. தமிழறிஞர்களின் கையெழுத்துப்படியை நாம் படிக்கும் வாய்ப்பில்லை. அச்சிடப்பட்ட அவர்தம் நூல்களையே படிப்பதால், அந்நூல்களில் எப்படி அச்சிடப்பட்டதோ, அவ்வாறே நூலாசிரியர் எழுதியதாக நாம் கருதவேண்டியுள்ளது. அல்லவா? இதனை எண்ணிப்பார்பதே இப்பதிவின் நோக்கம்.
மேலேயுள்ள பத்தி, நூலில் எவ்வாறு அச்சிடப்பட்டதோ, அதேவண்ணம் எடுத்தெழுதப்பட்டது. இதில், 'இங்குக்' என்பதில் ககரமெய் ஈற்றிலுள்ளது; 'இடங்' என ஙகரமெய் ஈற்றிலுள்ளது; இடங்களில் என்னும் சொல் 'இடங்', 'களையும்' என இருசொல்லாக உடைக்கப்பட்டுள்ளது; 'நூல்களிற்' என்பதில் றகரமெய் ஈற்றிலுள்ளது.
பாவாணரய்யா தமது நூலில், "வல்லினமெய்களும், ஙகரமெய்யும் மொழியிறுதி வரவே வரா" என்று விதித்துள்ளார். அப்படியிருக்க மேற்கண்டவாறு அச்சிடப்பட்டது எப்படி? அறிஞர் ஒருவரின் தமிழ், எழுத்துக்கோத்தவரின் கைங்கரியத்தால் இலக்கணத்தை இழந்துள்ளது. இதனைப் படிப்பவர், எதனைச்சரியென எடுத்துக்கொள்வது?
இதேநூலில் மற்றுமொரு பகுதியை, அது அச்சிடப்பட்டபடியே தருகிறேன். படிக்க. "நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரினின்று பிறந்ததென்றும், நாக ரென்பார், பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்திருந்தன ரென்றும், 'ஆயிரத் தொண்ணூறாட்டை முற்றமிழர்' (The Tamils 1800 years ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகநா டெனப்பட்ட கீழ்த் திசை நாடுகளில் வாழ்ந்து வந்த ஒரு மக்கள் வகுப்பார். நாகவணக்க முடைமையின், அவர் நாகரெனப்பட்டார்".
இப்பத்தியிலுள்ள, 'ரென்பார்', 'ஆயிரத்', 'நூலிற்', 'பண்டைக்', 'டெனப்பட்ட', 'கீழத்', 'முடைமையின்' என்பன உரைநடைக்கு ஏற்குமா? ரகரமும், டகரமும் மொழிமுதலாகுமா? பாவாணர் பெருமான் இவ்வாறுதான் எழுதித்தந்தாரா?
உளச்சான்றில்லாமல் நூலை அச்சிட்டு வெளியிட்டவரை என்னென்பது? இன்றளவும் இது தொடர்ந்தே வருகிறது. இலக்கணநூல்களிலாவது, இலக்கணப்பிழைகள் இருக்கக்கூடாதென்ற முயற்சியில்லையே. எழுத்துக்கோத்தவர், புத்தகவெளியீட்டாளர் முதலானோரின் இந்த அக்கறையின்மையை, தமிழறிஞர்களால் களைய முடியவில்லையெனில், எம்போல்வாரின் தமிழ் மேம்படுவது எக்காலம்?
ஒருசொல்லை வரியடைவிற்காக பிரிப்பதானால், முதற்பகுதியின் ஈற்றில் ஓர் இடைக்கோடு (-), இடவேண்டுமென்ற அடிப்படையை எவ்வாறு மறக்கின்றனர்? வரியடைவிற்காக சொல்களின் இடைவெளியை சரிசெய்வதாயிருந்தால், ஒருசொல்லை உடைக்கக்கூடாது, பிரிக்கக்கூடாது என்ற மொழிமரபை கைவிட்டது எவ்வாறு? "மையில்தொட்டு பேப்பரில் அடிச்சா மறுத்துப்பேச ஆளில்லை", என்றபடி, இதனைப்படிப்பவர்களும் இத்தவறுகளையே தொடர்வரல்லவா?
அச்சகத்தாரே, எழுத்துத்தொடுப்போரே இத்தவறுகளைத்தொடராமல், அறிஞர்தமிழை, அத்தன்மையிலேயே வெளிப்படுத்துங்கள். தமிழன்னை மகிழ்வாள். எம்போல்வாரும் நூல்களில் அமைந்த சரியான சொல்லாட்சிகளை அறிந்து பயன்படுத்துவோம்.
Comments
Post a Comment