அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர் புலவர் இராசமனோகரன்.

"செந்தமிழ்ச்சுவை -
 முத்தொள்ளாயிரம்".

அறிவார்ந்த ஐயன்மீர்.
அனைவருக்கும் வணக்கம்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்துபாயுது காதினிலே" என மகாகவி பாரதியார் நமக்குப்பாடிக்காட்டினார். அவர் பாடிக்காட்டியதை நாம் நாடிப்பார்ப்போமா. நாடி பார்ப்பதற்கு, மிகப்பழைய இலக்கியமாய் அமைந்த 'முத்தொள்ளாயிரம்' என்னும் நூலிலிருந்து, முத்தான ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம்.

மூன்று தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் எனப்பட்டது. சேரமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், சோழமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், பாண்டியமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம் என, ஈராயிரத்துஎழுநூறு அழகிய வெண்பாக்களைக்கொண்ட இந்நூல், நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்நூலாசிரியர் யாரெனத்தெரியவில்லை. கிடைத்த நூற்றுமுப்பது பாடல்களும் நல்லிசைப்புலவோரால் மேற்கோள்களாக காட்டப்பட்டவைகளில் இருந்து தொகுக்கப்பெற்றவை.

சோழமன்னன் கிள்ளிக்குப்பிறந்தநாள்
 கொண்டாடப்பட்டது. அதன்பொருட்டு நகரம் தூய்மைப்படுத்தப்பட்டது. அதனை நகைச்சுவை ததும்ப புலவர் உரைக்கிறார். பாடல் வருமாறு:
"அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி ரேவதிநாள்
என்னே
சிலம்பிதன் கூடிழந்த வாறு".

நாவலர் = புலவோர்.
மந்தரம் = ஒரு மலையின் பெயர்.
மாண்ட = மாண்பமைந்த.
களிறு = ஆண்யானை.
ஊரந்தார் = ஏறிச்சென்றார்.
எந்தை = எம்தந்தை.
இலங்குதல் = ஒளிர்தல்.
இலைவேல்= மரத்தின் இலைபோன்ற வடிவமைந்த வேல்.
கிள்ளி = சோழமன்னன் பெயர்.
ரேவதிநாள் = ரேவதி விண்மீன் இலங்கும் நாள்.
(நட்சத்திரம் = விண்மீன்)
சிலம்பி = சிலந்தி.
ஆறு = வழி, வகை.

அந்நாளில், எந்த விண்மீன்நாளில் பிறந்தாரோ, அந்த விண்மீன்நாளையே பிறந்தநாளாக கருதுவர். ரேவதி என்னும் வடசொல்லை 'தோணி'  எனத்தமிழ்படுத்துவார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.

சோழமன்னன் கிள்ளி
 பிறந்த 'தோணி'(ரேவதி) விண்மீன்நாளில், அரண்மனை, மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், தெருக்கள், வீடுகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, நகரம் அழகுபடுத்தப்பட்டு, மக்கள் மகிழ்வாக, கொண்டாட்டமாக உள்ளனர். மன்னன் கிள்ளி, மக்களுக்குத்தந்தையாக இருந்து, காத்துவருவதால் 'எந்தை' எனப்போற்றப்படுகிறான்.

மன்னன் கிள்ளி, தன்பிறந்தநாளில், எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு ஒழுகும் அந்தணர்க்குப்பசுக்களோடு பொன்னைக்கொடையாக வழங்கினான். அக்காலத்தில்,  கொடையாக கொடுக்கப்படும் பசுக்களின் கொம்புகளும் குளம்புகளும் பொன்தகடுகளால் மறைக்கப்பட்டு பூணப்பட்டிருக்கும்.

நாவன்மைமிக்க புலவோர் மலைபோன்ற பெரிய வலிமையான யானைகளை மன்னனிடம் கொடையாக பெற்று, அவற்றில் ஏறிச்செல்கின்றனர். அவ்வாறு செல்லும் புலவர் ஒருவரது உள்ளத்தில் ஒர் இரக்கக்குறிப்பு தோன்றுகிறது. எல்லாரும் மகிழ்ந்திருக்கும் இவ்வேளையில், சிலந்தி தானிழைத்துக்கட்டிய கூட்டினை இழந்தவகையை
என்னென்பேன் எனப்பாடுகிறார்.

ஒட்டடைகள் நீக்கப்பட்டு நகரம் தூய்மையாக இருப்பதை, இவ்வண்ணம் நகைச்சுவை உணர்வு தோன்றுமாறு புலவர் இயம்புகிறார்.

வணக்கம்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்