தமிழ்மொழிமரபுநடை.
"தொடர்மொழியென்பது ஒன்றுக்கு மேற்பட்டசொற்கள் ஒரேசொல்லைப்போல் பிரியாமலிருப்பதாகத்தான் கொள்ளவேண்டும். தொடர்மொழி என்பதும் தொடர் என்பதும் வேறுவேறென்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
"முருகனுக்குநண்பன்" - இது 'கு' என்னும் நான்காம்வேற்றுமையுருபு
வெளிப்பட்டுவரும், நான்காம்வேற்றுமைவிரிநிலைத்-தொடர் எனப்படும். "முருகனுடையவீடு" - இது 'உடைய' என்னும் ஆறாம்வேற்றுமையுருபு வெளிப்பட்டுவரும், ஆறாம்வேற்றுமைவிரிநிலைத்-தொடர் எனப்படும்.
'முருகனுக்கு நண்பன்', 'முருகனுடைய வீடு' என, இந்த வேற்றுமைவிரிநிலைத்தொடர்-மொழிகளை பிரித்து, உருபேற்றதான பெயர்களை உருபுடன் தனியாகவும், பெயரையோ வினையையோ தனியாகவுமெழுதுவோமானால், அப்போது அவை தொடர்மொழிகள் ஆகமாட்டாவென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.
வேற்றுமைப்புணர்ச்சியில், 2, 3, 4, 5, 6, 7 ஆகிய வேற்றுமைத்தொகைநிலைத்-
தொடர்மொழிகள் (வேற்றுமைத்தொகைகள்) ஆறும்; 2, 3, 4, 5, 7 ஆகிய வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கதொகைகள் ஐந்தும், ஆக மொத்தம் பதினொரு வேற்றுமைத்தொகைகள் பிரிக்கவே முடியாதவை; பிரிக்கவுங்கூடாது".
2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு வேற்றுமைவிரிநிலைத்தொடர்களை தேவைக்கேற்றாற்போல் தொடர்மொழியாகவோ அல்லது அவற்றின் நிலைமொழிவருமொழிகளை பிரித்தோ சொல்லவருகின்ற பொருளுக்கேற்றவாறு கொள்ளலாம்".
தெய்வத்திரு வ.பொன்முடியாரின் "தமிழ்வெல்லத்தாழி" நூலின் 170 - 173 பக்கங்கள். இஃது இவ்வளவில் அமைக.
இப்போது, பேராசிரியர் மா. நன்னன் ஐயா எழுதிய "வழுக்குத் தமிழ்" என்னும் நூலிலுள்ள பத்திகள் சிலவற்றை, அது அச்சிடப்பட்டியே எடுத்தெழுதுகிறேன்.
"எனது மனைவி, எனது கணவர், எனது மகன், எனது மகள், எனது தந்தை, எனது மாமா என்பன போன்ற இடங்களில் 'அது' என்னும் உருபைப் பயன்படுத்துவது தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறானதாகும். உயர்திணை மக்களுக்குள் உறவுதான் இருக்கும்; அவ்வுறவுகளை உடைமை பொருளாக கருதவியலாது.
இவ்விடத்தில் தொல்காப்பியர் சொல்வதுபோல், 'கு' உருபைப்கொண்டு, 'எனக்கு மனைவி', 'எனக்குக் கணவன்', 'எனக்கு மகன்' என்பதாகச் சொல்வதுதான் சரி. அப்படிக் குறிப்படும்
வழக்கம் இல்லாமையால், நமக்கு அங்கு 'கு' உருபைப் பயன்படுத்துவது பொருத்தம் அற்றதுபோல் தோன்றும். ஆகவே, 'கு' உருபை அவ்விடங்களில் பயன்படுத்த விரும்பாவிட்டால், எந்த உருபையும் பயன்படுத்தாமலேயே வேற்றுமைத்தொகையாகவே குறிப்பிட்டுவிடலாம். எடுத்துக்காட்டாக, என் மகன், என்
மகள், என் கணவன், என் மனைவி, எம் மக்கள் என்பனவற்றைக் கூறலாம்".
இப்பத்திகளை ஆய்வோம். நான்காம்வேற்றுமைவிரிநிலைத்-தொடராக, 'எனக்கு மனைவி', 'எனக்குக் கணவன்', 'எனக்கு மகள்' என்னும் தொடர்மொழிகளை, ஐயா எழுதியுள்ளார். இவற்றைப்பிரிக்காமல், ஒருசொல்நீர்மையாக ஏன் எழுதவில்லை? பொருள்தெளிவு கருதி வேற்றுமைவிரிநிலைத்தொடர்களை பிரித்தும் எழுதலாம் என்பதால், ஐயா பிரித்தெழுதியதாக ஏற்போம். இவ்வாறு பிரித்தெழுதியதால் இங்கே என்ன பொருள்தெளிவு கிடைத்துள்ளது? ஒருவர் மற்றொருவருக்கு ஏதேனும் ஒரு உறவுநிலையில்தான் இருப்பார். அதனை மகன், கணவன், மனைவி என்பனபோன்ற உறவுபெயர்ச்சொல்கள் வெளிப்படுத்திவிடுகினறன. இங்கே சொல்லவந்தது அவர் தனக்கு என்னவுறவு என்பதனைத்தானே! 'எனக்கு மனைவி' என்று பிரித்துச்சொல்வதால் இந்நோக்கம் நிறைவேறிவிடுகிறதா? சரி, ஒருவர் இதனைப் பேசும்போது, எனக்கு என உச்சரித்தப்பின் அரைமாத்திரை இடைவெளிவிட்டு மனைவி என விட்டிசைப்பது உண்டா? இரு சொல்லாக எழுதியதால் அவ்வாறுதான் விட்டிசைக்கவேண்டும். அவ்வாறு விட்டிசைத்தால், அவர் மேலும் கூடுதலாக ஒன்றைச்சொல்ல விரும்புகிறாரென்பது தொக்கிநிற்கின்றதல்லவா? இலக்கணப்பிழை ஒருபுறமிருக்க, கருத்தாவிடமிருந்தது உறவுக்காரரை பிரித்ததாகவும் நேருமல்லவா!
அடுத்த மாற்றாக நன்னன் ஐயா தொகைச்சொல்லாக, என் மகன், என் மகள், என் கணவர், என் மனைவி, எம் மக்கள் என்பதாகச்சொல்லிவிடலாம் என்கிறார். இங்கே இரண்டு சொல்லாக பிரித்தெழுதியப்பின் தொகைச்சொல் எங்கே வரும்? சொல்களை பிரித்தெழுதியப்பின் அங்கே வேற்றுமையுருபு தொக்கிநிற்கின்றது என நாமாக புரிந்துகொள்ளவேண்டுமோ? இது, புணர்த்திப்பேசி, பிரித்தெழுதி, புணர்த்திப்படித்துப்புரிந்து-கொள்ளும் ஆங்கிலமொழி நடையல்லவா? இது,
தமிழ்மொழியின் மரபுநடையை ஆங்கிலமொழிக்கு ஒப்புக்கொடுத்ததால் நிகழ்ந்த விளைவு.
எனவே, நான்கன்வேற்றுமைவிரியில், எனக்குமனைவி, எனக்குக்கணவன், எனக்குமகள் என்று தெடர்மொழியாகவும்; ஆறன்வேற்றுமைத்தொகையில்,
என்மகன், என்மகள், என்கணவன், என்மனைவி, எம்மக்கள் என்றும் ஒருசொல்நீர்மையாக, தொகைப் சொல்லாகவும் எழுதுவதே தமிழ்மொழிமரபுநடை.
மீண்டும் சந்திப்போம். சிந்திப்போம். வணக்கம்.
Comments
Post a Comment