அண்ணாமலையூர் புலவர்.
"கவிமடல்".
ஒரு கடிதம், அது திருமுகம் எனப்படும். பா வடிவிலமைந்து பாசுரம் எனவும் பெயர்பெற்று "திருமுகப்பாசுரம்" என்னும் சிறப்புபெற்றது. 'கடிதம்' என்பது இக்காலவழக்கு. மடல், அடங்கல், முடங்கல் என்பன, இடைக்காலவழக்கு. ஆழ்வார்கள், 'சிறியதிருமடல்', 'பெரியதிருமடல்' என நாராயணனுக்கு வரைந்துள்ளனர். திருமுகம் என்பது பழையவழக்கு. பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமுறையில் முதற்பாட்டாக அமைந்த இத்திருமுகத்தை அருளியவர், மதுரையம்பதிவாழ் சொக்கநாதப்பெருமானே ஆவர். சோமசுந்தரன், ஆலவாயப்பன் எனப்பரவப்படும் சிவபெருமான், தன்னடியவர் இசைவல்லான் பாணபத்திரனுக்கு உதவுமாறு, மன்னன் சேரமான்பெருமானுக்கு விடுத்த பரிந்துரைக்கடிதம். இத்திருமுகப்பாசுரம், ஒரு கடிதத்திற்குரிய இலக்கணங்கள் நிறைவாக பெற்று, பன்னீர் அடிகளலிலமைந்த 'நேரிசை ஆசிரியப்பா' ஆகும். புரவலனே, புலவராக இருந்து வரைந்த இம்மடலைக்கற்று, நமது மடலெழுதும் திறனை மேம்படுத்திக்கொள்வோமாக!
முதலில் திருமுகப்பாசுரத்தைக் காண்போம்.
"மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்
செருமா உகைக்கும் சேரலன்
காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே".
மதி = நிலா, திங்கள்.
மலி = தவழ்தல்.
புரிசை = மதில்.
மாடக்கூடல் = நான்மாடக்கூடல், மதுரையம்பதி.
பதிமிசை = ஊரின்கண்.
நிலவு = இருக்கின்ற.
பயில் = உலவுதல்.
பொழில் = சோலை.
ஆலவாயில் = சிவபெருமான் திருக்கோவில்.
மன்னிய = நிலைபெற்ற.
மொழிதரு = சொல்கின்ற.
மாற்றம் = சொல், கருத்து.
பருவம் = பொழியும் பருவம், கார்காலம்.
கொண்மூ = மேகம்.
படி = ஒப்ப.
ஒருமையின் = ஒருப்பட்ட மனம்.
உரிமையின் = உரிமையால், கடமையால்.
குரு = நிறம், அழகு.
மாமதி = நிறைமதி, முழுமதி.
புரை = ஒத்த.
குலவிய = விளங்குகின்ற.
செரு = போர்.
மா = குதிரை.
உகைத்தல் = ஏறிசெல்லுதல்.
சேரலன் = சேரமான்பெருமான்.
பண்பால் = இசை அமைவுகள்.
யாழ்பயில் = யாழிசைக்கும்.
தன்போல் = சேரலனைப்போலவே.
தன்பாற்காண்பது = சேரலனைக்காண்பது.
('தன்' - படர்க்கையில்வைத்து சொன்னது)
மாண்பொருள் = மிகுந்த பொருள், மாண்பமைந்தபொருள்.
வரவிடுப்பது = விடைகொடுத்து திரும்ப அனுப்புதல்.
இப்பாடலின் நுண்பொருளை விரிய காண்பதன்முன், நான்மாடக்கூடல், ஆலவாயில் ஆகியவற்றின் பெயர்க்காரணத்தை அறிவோம்.
வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பி பெருமழைபொழியசெய்தான். பாண்டியமன்னன் இறைவன் சிவபெருமானிடம் முறையிட, எம்பெருமான் நான்கு மேகங்களை அனுப்பி மதுரையைக்காக்க பணித்தார். அம்மேகங்கள் நான்கு திசைகளில் நிலைகொண்டு, மாடங்களாக கூடி மதுரையைக்காத்தமையால், 'நான்மாடக்கூடல்' என அழைக்கப்பட்டதாக பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற்புராணத்தில் கூறுகிறார்.
கடம்பமரங்கள் அடர்ந்த வனத்தை சீர்திருத்தி, மதுரைநகர் உருவாக்கப்பட்டது. பாண்டியமன்னன் மதுரைநகர் அமையவேண்டிய எல்லைப்பரப்பினை தனக்கு அறிவிக்கவேண்டி, சிவபெருமானைப்பணிந்தான். சிவனார் தன்விரல்களில் அணிந்திருந்த பாம்பு ஒன்றினை கீழே விடுக்க, அது வளர்ந்துகொண்டேபோனது. அவ்வாறு வளர்ந்த அப்பாம்பு, ஒரு நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக வளைந்து, தன்வாலினை வாயால் கௌவி நின்றது. அப்பாம்பினால் வளைக்கப்பட்ட நிலப்பகுதியே, மதுரைநகரின் எல்லையென உணர்த்தப்பட்டதால், 'ஆலவாயில்' எனப்பெயர்பெற்றது.
திருமுகம் எழுத புகுந்தார், முதலில் தன் ஊரினையும் , தன்னையும் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். அதன்படி, மேகங்கள் தவழ்ந்து நிற்குமாறு உயர்ந்தமதில்களும், பால்நிறமொத்த அன்னபறவைகள் உலாவும் சோலைகளும் அமைந்த மதுரைநகரின் ஆலவாய்க்கோவிலில் நிலையாக குடியிருக்கும் சிவன் யான் என, இறைவன் தான் வாழும் ஊரினையும் தன்பெயரையும் கூறி அறிமுகம் செய்துகொள்கிறார். கூடற்பதி, ஆலவாயில் என்று தனக்கும் மதுரையம்பதிக்கும் உள்ள தொடர்பினை உணருமாறு செய்கிறார். இன்று இவ்வூரில் வாழ்ந்து, நாளை பிறிதோர் ஊருக்குக்குடிபெயர்பவன் அல்லன்; நிலையாக (மன்னிய) அவ்வூரிலேயே வாழ்பவன் எனவும் அறுதியிட்டு கூறுகிறார். இது கடிதத்தின் அநுப்புநர் பகுதி.
கடிதத்தை பெறுநர் ஒருவர் இருக்கவேண்டுமல்லவா. அவரை விளிக்கிறார். சூல்கொண்ட மேகங்களாக, மழைபொழிய பக்குவப்பட்டு, அணியமாகநிற்கும் மேகங்களாக, சொல்மொழியும் (மொழிதரு மாற்றம்) பாவலர்களுடன், மனம் ஒருமைப்பட்டு அவ்வொருமைப்பாட்டு உரிமையால் அவர்க்கு உதவி, புகழ்பெற்று திகழ்கின்ற சேரமானே. 'பருவம்' என்பதற்கு கார்காலம், பொழியும்பருவம் எனப்பொருள் கொள்வதுடன், 'பக்குவம்' என்றும் பொருள் கொள்ளவேண்டும். பருவமெய்திவிட்டாள் என்பதில் பக்குவம் அடைந்தாள் என்னும்பொருள் உள்ளதைக்காண்க. மேலும், 'பருவக்கொண்மூ' என்பதனை பாவலர்க்கும், மன்னன் சேரனுக்கும் பொருத்தி பொருள்காணவேண்டும். பாவலர் சொல்மாரி பொழிவதில் பருவக்கொண்மூவாக இருக்கின்றனர். மன்னன் சேரன் உதவுவதில் பருவக்கொண்மூவாக இருக்கின்றான். ஈண்டு தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் சொல்லும், 'பெய்யெனப்பெய்யும் மழை' என்னும் தொடரை ஒப்புநோக்க, சிறக்கும். அதேபோல், 'ஒளிதிகழ்' என்பதனை மன்னனுக்கும், புரவலர்க்கும் பொருத்தி பொருள்கொள்வதே சிறப்பு. காரணம் என்னை? நிலவு இயற்கையொளி உடையது. அதனை விதந்தோதுதல் சிறப்பன்று.
மாந்தர் தம்செயல்களால் ஒளிபெறுவர்; அதனைச்சிறப்பித்ததாக கொள்வது தகும்.
அழகிய, நிறைமதி ஒப்ப விளங்குகின்ற வெண்கொற்றக்குடைக்கீழ் அமர்ந்து ஆட்சிபுரிகின்ற சேரமானே,
போருக்குச்செல்வதானால் குதிரை மீதேறி செல்வதை விரும்பும் சேரமானே, இத்திருமுகத்தைக்காண்க.
ஓர் அரசனிடம் நால்வகைப்படைகள் இருந்தாலும், அவற்றுள் யானைப்படையே வெற்றிக்கு பெரும்பங்காற்றுவதாக இருந்தாலும், சேரமான் குதிரையையே விரும்பி, அதிலேறி போருக்குச் செல்வதைக் குறிப்பது , பின்னாளில் சேரமான் தனது குதிரையுடன் கைலாயம் செல்ல இருப்பதை முன்னுணர்த்துவதாகவும் கொள்ளலாம். அடுத்ததாக, கடிதத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இத்திருமுகத்தைக்கொண்டுவரும் பாணபத்திரன், பண் அமைத்து யாழிசைப்பதில் வல்லவன், நல்லவன், இசைத்துறைவல்லவன். உன்னைப்போலவே என்னிடத்தில் அன்பு உள்ளவன். அவன் நின்னைக்காணவேண்டுமென நான் கருதியதால், நின்னைக்காண வந்திருக்கிறான் என இறைவன் உரைக்கிறார். என்ன நோக்கத்திற்காக பாணபத்திரனை அனுப்பினாரென்பதை, எம்பெருமான் அவருக்கு அறிவிக்கவில்லைபோலும். என் அன்பனைக்கண்டுவருவாயாக என்றுமட்டும் பாணபத்திரனிடம் சொன்னார்போலும். இங்கே, 'தன்' என்பது படர்க்கையில்வைத்து சொன்னது என, இலக்கணக்குறிப்பு காட்டுவர் உரையாசிரியர். அதனினும் மேம்பட்ட குறிப்பு அதிலிருக்கவேண்டும். எவ்வாறு சேரமான், புலவர்களை தன்னிலிருந்து வேறுபடுத்தி காணாது ஒருமையில் கொண்டாரோ, அவ்வாறே எம்பெருமானும், பாணபத்திரனையும் சேரமானையும் தன்னிலிருந்து வேறுபடுத்தி காண ஒருப்படாமல் 'தன்' என்று தன்மையிலேயே சொல்கிறார்.
மாண்பமைந்தபொருள் கொடுக்க, எனச்சுருக்கமாக சொல்கிறார். சிறப்பு என்பது பொருளினையும்கடந்து அது கொடுக்கப்படும் மாண்பினால்தானே சிறப்படைகிறது. கடிதத்தின் முடிவில் 'மாண்பொருள் கொடுத்து வரவிடுக' என அன்புக்கட்டளையிடுகிறார்.
பாணபத்திரனின் இசையில் ஈடுபட்டு, அவரைத்தன்னுடனே தங்கியிருக்க சேரமான் கூறிவிடலாமல்லவா. மேலும், எம்பெருமானும் இசையாய் இசைப்பயனாய் இருப்பவன். அவருக்கும் பாணபத்திரன் வேண்டுமல்லவா. 'வரவிடுக' என அன்புகட்டளை இட்டதற்கு அஃதன்று காரணம். பாணபத்திரனை வாழ்நாள் முழுவதும் வறுமையின் நிழல்படாவண்ணம், வாழ்விக்க சேரமானால் இயலும். தன்னால் தர இயலாதவொன்றனை பாணபத்திரனுக்கு தரவே இறைவன் வரவிடுக எனக்கட்டளையிட்டார் என்பதையும், அஃதென்ன என்னும் சிந்தனையைத்தூண்டவுமே வரவிடுக என்றார். ஒரு மன்னனாலும் தரமுடியாத, இறைவன் ஒருவனாலே தரக்கூடியதுமான அது, வீடுபேறு அன்றி வேறொன்ன. சேரமானுக்கும் அதனையே அளித்தாரன்றோ.
இத்திருமுகம் இறைவனால் எழுதப்பட்டது என்பதற்கு 'வரவிடுக' எனக்கட்டளையிட்டதே உறுபெறும் சான்று. மன்னனுக்குக்கட்டளையிடும் தகுதி, மண்மீது இறைவனுக்கன்றி வேறு யாருக்கு உள்ளது.
இவ்வாறாக, கடிதத்தின் நிறையிலக்கண அமைவோடும், இலக்கியச்சுவை மிக்கும், வெளிப்படையாயும் குறிப்பாயும் பலவுணர்த்தி ஆலவாயப்பன் அருளிய பாடலின் சுவையை உணர்ந்து, நாமும் கடித இலக்கியம் படைப்போம். வணக்கம்.
திருவள்ளுவராண்டு 2053,
சுறவம் திங்கள், 13ஆம் நாள்,
அறிவன் கிழமை.
(26-01-2022).
Comments
Post a Comment