இராம்முருகன்

'தமிழ்நதி'  திரு. இராம்முருகன்,
தமிழாசிரியர்.   ‌‌

"தமிழில் புணர்ச்சி".

தமிழுக்கே உரியது புணர்ச்சி. புணர்ச்சியின் சிறப்பை, இன்றியமையாமையை ஒரு குறள்வழி அறிவோமா.

வான்சிறப்பு, குறள் எண் - 17.
சொல்பகுக்காத, புணர்ச்சியுடன் அமைந்தது.
"நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்". 

சொல்பகுக்கப்பட்டபின்,
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்".

இக்குறளில், தடிந்து, எழிலி ஆகிய இருசொல்தான் இலக்கியவழக்கு உடையன. ஏனையவை நம் பேச்சுவழக்கில் உள்ளவை.
தடிந்து = மறுத்து, விலக்கி, குறைத்து.
எழிலி = மேகம்.
இக்குறளில் என்னென்ன புணர்ச்சிவிதிகள் பயன்படுத்தப்பட்டால், இது செய்யுள்வடிவம் பெற்று சிறந்தது என்பதனை விளக்கமாக காண்போம்.

செய்யுளில் சொல்களை, 'சீர்கள்' என்பர். இரண்டிற்கும் வேறுபாடு என்ன. சொல் தன்னளவில் முழுமைபெற்று பொருள்தரும். சீர் தனக்கு முன்னும் பின்னும் உள்ள சீர்களுடன் பொருந்தி பொருள்தரும்.

இச்செய்யுளில் சீர்களின் புணர்ச்சியில் செயல்பட்ட, புணர்ச்சிவிதிகளை முதலில் காண்போம்.
1. நெடுங்கடலும் + தன்னீர்மை = நெடுங்கடலுந்தன்னீர்மை.
இதில் மகரவீற்றுப்புணர்ச்சி நிகழ்ந்துள்ளது. வருமொழி முதலில் வல்லினம் வரின், நிலைமொழி ஈற்றிலுள்ள மகரமெய்(ம்), வல்லினத்திற்கு இனமான மெய்யாக திரியும் என்னும் விதிப்படி, மகரமெய்(ம்), தகரத்துக்கு(த்) இனமான நகரமெய்யாக(ந்) திரிந்தது.

2. குன்றும் + தடிந்தெழிலி = குன்றுந்தடிந்தெழிலி.
வ.எண்.1இல் சொல்லப்பட்ட விதிகளே, இப்புணர்ச்சியிலும் செயல்பட்டுள்ளன.

3. தான்நல்காது + ஆகி = தான்நல்காதாகி.  நிலைமொழியான 'தான்நல்காது' என்னுஞ்சொல் உயிர்த்தொடர்க்குற்றியலுகரச்-சொல். "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்பது விதி. உக்குறள் = குறுகி ஒலிக்கும் உகரம். இதன்படி, 'து'(த்+உ) எழுத்தின் உகரம் நீங்கி, தகரமெய்யாக(த்) நின்றது.

"உடலோடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே", என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றில்நின்ற தகரமெய்யோடு, வருமொழி முதல் ஆகாரம்(ஆ) புணர்ந்து 'தா' (த்+ஆ=தா) என்றானது.

தான்நல்காது + ஆகி ---
தான்நல்கா(த்+உ) + ஆகி ---
தான்நல்காத் + ஆகி ---
தான்நல்காதாகி.

அடுத்ததாக, சீர்களுக்குள் (சொல்களுக்குள்), செயல்பட்ட புணர்ச்சிவிதிகளை அறிவோம்.
4. நெடுமை + கடல் + உம் = நெடுங்கடலும்.
'நெடுமை' என்பது ஒரு பண்புபெயர்ச்சொல். ஈறுபோதல் என்னும் விதிப்படி, இச்சொல்லின் 'மை' என்னும் ஈறு நீக்கியது.
அடுத்து, ககரத்துக்கு இனமாகிய ஙகரமெய்(ங்) தோன்றி, நெடுங்கடல்  என்னும் பண்புத்தொகைச்சொல் தோன்றியது. இச்சொல்லுடன் உயிர்முதலான 'உம்', இயல்பாக ஒன்றிவிட்டது.

நெடுமை + கடல் + உம் ---
நெடு + கடல் + உம் ---
நெடு + ங் + கடல் + உம் ---
நெடுங்கடல் + உம் ---
நெடுங்கடலும்.

5. தன் + நீர்மை = தன்னீர்மை. இதில் னகரவீற்றுப்புணர்ச்சிவிதி  செயல்பட்டுள்ளது. தனிக்குறிலை அடுத்து னகரமெய்(ன்) இருந்து,  வருமொழி முதலில் நகரம் வரின், அது னகரமாக(ன) திரியும். இது வலிந்து திணிக்கப்பட்ட விதியன்று. நம்மால் இயல்பாகவே இப்படித்தான் ஒலிக்கமுடியும். 'ன'வையும், 'ந'வையும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து ஒலிக்கமுடியாது. இவ்வியல்பே, விதியாக வகுக்கப்பட்டது.

தன் + நீர்மை ---
தன் + னீர்மை ---
தன்னீர்மை.

6. தடிந்து + எழிலி = தடிந்தெழிலி.
இதில், மென்றொடர்க்குற்றியலுகரப்-
புணர்ச்சியும், மெய்யுயிர் புணர்ச்சியும் நிகழ்ந்துள்ளன.

தடிந்து + எழிலி ---
தடிந்(த்+உ) + எழிலி ---
தடிந்த் + எழிலி ---
தடிந்தெழிலி.

7. வ.எண்-3இல், புணர்ச்சியின்வழி 'தான்நல்காதாகி' என்னுந்தொடர் வந்தவழி அறிந்தோம். இது மூன்றுசொல்லுள்ள தொடர். இதில், முதலிரண்டு சொல்களுள் நிகழ்ந்த, ஒரு புணர்ச்சியைக்காண்போம்.

தனிக்குறில் சாராத னகரமெய்முன்(ன்), நகரமெய்(ந்) வரின், இருவழியிலும் கெடும் என்பது விதி. இருவழி என்றால், நிலைமொழியின் ஈறும், வருமொழியின் முதலும் என்பது பொருள்.  நிலைமொழியின் ஈற்றிலுள்ள னகரமெய்(ன்) நீங்கும்; வருமொழியின் முதலிலுள்ள நகரஅகரத்தில்(ந) உள்ள நகரமெய்(ந்) நீங்கி னகரமெய்யாக(ன்) திரியும். இவ்விதி செயல்படும் முறை வருமாறு:

தான் + நல்காதாகி ---
தான் + (ந்+அ)ல்காதாகி ---
தா + (ன்+அ)ல்காதாகி ---
தானல்காதாகி.

இத்துணை விதிகள் வேண்டுமா என நீவிர் கேட்பதை அறியமுடிகிறது. இதில் எவ்விதியும் வலிந்து திணிக்கப்பட்டவில்லை. தமிழ்மொழியின் சொல்களை ஒலிக்கும்போது, சற்று கூர்ந்து கவனித்தால், மேற்கூறியவாறுதான் சொல்கள் ஒலிக்கப்படுகின்றன என்பதை அறிந்து வியப்படைவீர். இவ்வியல்பான ஒலிப்புகளில் உள்ளமைந்த ஒழுங்குகளேயே இலக்கணவிதிகளாக தொகுத்து தந்துள்ளனர்.

ஆனால், இக்காலத்தில் எளிமை கருதி சொல்களை பிரித்துபிரித்து  எழுதுகிறோம்; எனினும், புணர்த்தியே பேசுகிறோம். இதனால், சொல்கள் எவ்வாறு புணர்ந்தன அல்லது எவ்வாறு புணர்த்தவேண்டும் என்பதனை அறியாத பிள்ளைகளை உருவாக்குகிறோம்.

ஐயன் திருவள்ளுவர் மேற்கூறிய குறளில், இரண்டு இலக்கியவழக்குச்சொல்களை வைத்து நிலைத்துநிற்கின்ற செய்யுளை இயற்றமுடிந்ததற்கு எது காரணம். மொழியின் இயல்பைப்புரிந்து, அதில் உள்ளமைந்த ஒழுங்குகளை, விதிகளை கையாண்டால் தானே காரணம். நாமும் புணர்ச்சிவிதிகளைக்கற்றால், புலவோர் இயற்றிய செய்யுள்களைப்-
புரிந்துகொள்ளவும், செய்யுள் இயற்றவும் இயலுமல்லவா.

இக்குறளில் செயல்பட்ட புணர்ச்சிவிதிகளின் தொகுப்பு வருமாறு:
1. பண்புப்பெயர்ப்புணர்ச்சி.
2. மகரவீற்றுப்புணர்ச்சி.
3. குற்றியலுகரப்புணர்ச்சி.
4. உடலோடு உயிர்வந்து ஒன்றுவது இயல்பு.
5. இனமெய் தோன்றுதல்.
6. தனிக்குறில் சார்ந்த னகரமெய்முன் வரும் நகரம்,  னகரமாக திரிதல்.
7. தனிக்குறில் சாராத னகரமெய்முன், நகரம் வரின், நிலைமொழியின் னகரமெய் நீங்கும்; வருமொழியின் நகரமெய், னகரமெய்யாய்த்திரியும்.

இயல்பாக நாம் பேசும்போது, சொல்கள் புணர்ந்து, பெரும்பான்மையும்  தொடர்களாகத்தான் வெளிப்படுகின்றன. புணர்ந்து எழுதப்பட்ட குறளில் நான்கு எழுத்துகள் குறைந்துள்ளன. சொற்கோவையாக  அமைந்ததுடன், பொருளின் தெளிவுக்கு ஊறுநேரவில்லை. ஆங்கில வாக்கியத்தில் ஒரு சொல்லின் எந்தவொரு எழுத்தை நீக்கினாலும், அச்சொல் தன்னளவில் பொருளை இழந்து, வாக்கியத்தின் பொருளையும் சிதைத்துவிடும்.

புணர்ச்சிவிதிகள் உரைநடைக்கும் இன்றியமையாதன. உரைநடையில், நாம் சொல்லவரும் பொருள் கெடாதவாறு, இயன்ற‌வழிகளில், இயன்றவரை சொல்களைப்புணர்த்தி எழுத பழகவேண்டும். சான்றாக அதனால் என்ன - அதனாலென்ன; அவ்வாறு இல்லை - அவ்வாறில்லை  என்றவாறு. இப்பழக்கம் செய்யுள்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

வணக்கம்.






Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்