அண்ணாமலையூர் புலவர்
"ஒழுக்கம்".
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".
குறள் எண் - 131.
விழுப்பம் = சிறப்பு.
ஓம்பல் = பேணுதல்.
ஒழுக்கத்தை வலியுறுத்தும் தெய்வப்புலவர், அதனை உயிரைவிட மேலானதாக காக்கவேண்டும் என்கிறார். நம்மைவிட்டு உயிர்போனால், அதனை மீண்டும் நாம் பெறமுடியாது. அதுபோல, ஒழுக்கத்தை ஒருமுறை தவறவிட்டாலும், இழந்த ஒழுக்கத்தை நாம் மீட்டெடுக்க முடியாது.
புறநானூற்றில் ஔவைப்பாட்டி, பாடிய பாடல் ஒன்றனைக்காண்போம்.
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே".
அவல் = தாழ்ந்த, பள்ளமான நிலம்.
மிசை = மேடான நிலம்.
இதனை, சொல்பகுப்புப்செய்ய கீழ்க்கண்டவாறு அமையும்.
"நாடாகும் ஒன்றோ காடாகும் ஒன்றோ
அவலாகும் ஒன்றோ மிசையாகும் ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே".
ஒன்றோ என்றால், அப்படியிருந்தால் என்ன, இப்படியிருந்தால் என்ன, என்பது. ஆங்கிலத்தில் this or that என்பர். பாடல் சிறியது. அதில் அடங்கிய, ஒடுங்கிய கருத்து தோண்டதோண்ட வெளிப்படும் ஊற்றுநீர் போன்றது.
நாம் வாழுகின்ற நிலப்பகுதி நாடாக இருந்தாலென்ன, காடாக இருந்தாலென்ன, பள்ளமாக இருந்தாலென்ன, மேடாக இருந்தாலென்ன? நிலம் தன்தன்மையால் பெருமை பெறுவதில்லை. அந்நிலத்தின்கண் வாழுகின்ற மக்கள் நல்லவராக இருந்தால், அம்மக்களின் நல்லுள்ளம் காரணமாக அந்நிலம் பெருமை பெறுகின்றது.
ஆங்கிலத்தில் content, container என்பர். வெள்ளிக்கிண்ணியில் கூழ் குடித்தால், அது பெருமையா என்ன? இல்லை. எளிய மண்குடுவையில் அமுதத்தை உண்டால், அதுவே பெருமை. எனவே, பெருமை கலத்தால் ( container ) அல்ல; கலத்தினிலுள் உள்ளப்பொருளினாலே ( content ). கொள்கலனினும் கொள்பொருளே உயர்ந்தது; சிறந்தது. கொள்பொருளைப் பாதுகாத்துப் பயன்படுத்தவே கொள்கலன். எதுவுமே தாழக்கூடாது; உயரவேண்டும். வீழ்வதற்காக அல்ல, வாழ்வதற்காக என உணரவேண்டும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
"When Wealth is lost, nothing is lost.
Health is lost, something is lost.
If, Charector is lost, everything are lost".
கைப்பொருளினை இழப்பது, இழப்பாகாது.
உடல்நலனை இழப்பது, அருமையான ஒன்றனை இழப்பதாகும்.
நன்னடத்தையை இழப்பதோ, எல்லாவற்றையும் இழந்ததாகும்.
உலகெங்கினும் சான்றோர் ஒன்றாகவே சிந்திக்கின்றனர்; பேசுகின்றனர்.
ஆகவே, நாம் வாழுகின்ற காலத்தில், வாழுகின்ற இடத்தில் முறையாக ஒழுக்கத்தைக்கடைபிடித்து வாழ்வாங்கு வாழவேண்டும். இதுதானே விலங்குக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு.
உயர்திணை என்றால், உயர்ந்த ஒழுக்கமுடைமை என்பது பொருள். உயர்ந்த ஒழுக்கம் இல்லாதது, அல்திணை (அஃறிணை) எனப்பட்டது. உயர்திணைக்கு எதிர்ச்சொல், தாழ்திணை, இழிதிணை என்பதுதானே. நம் சான்றோர் அவ்வாறு இழித்துச்சொல்லவும் உளப்படவில்லை.
"ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்" -
குறள் எண் - 139.
இப்படிப்பட்ட உயர்பண்பாட்டில் பிறந்த நாம், வாழ்வால் சிறக்க வேண்டாவா? சிறக்க வேண்டும். அதற்கு வழியாய் அமைவது ஒழுக்கம் ஒன்றே ஒன்றே. நம் உள்ளத்தில் ஊன்றவேண்டிய கருத்து இதுவே. ஊன்றுக ஊன்றுக.
வணக்கம்.
Comments
Post a Comment