அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர் புலவர் 
திரு. இராச மனோகரன்.

"மழலைச்செல்வம்".

"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்பட 
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே".
புறநானூற்றுப்பாடல் - 188.
இயற்றியவர் : பாண்டிநாட்டரசன் அறிவுடைநம்பி.
உடை = உடைமை.
இடைப்பட = மெதுவாக.
துழந்து = (கைகளால்) துழாவி.
அடிசில் = உணவு.
விதிர்த்து = சிதறி.
மயக்குறு = (இன்பத்தில்) மயங்கி (மகிழச்செய்யும்).
பயக்குறை = பயன்குறைந்த.

சங்கவிலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. அதிலமைந்த இப்பாடலில், மழலைச்செல்வத்தின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக்காட்டியுள்ள, அருந்தமிழ்ப்புலமை பெற்ற இப்புலவர் பாண்டியநாட்டு அரசனானவர்.

அம்மழலைச்செல்வம் எத்தகு மகிழ்ச்சியை வழங்குகிறது என அறிவோமா! குறுகுறுவென மெதுவாக நடந்து, சிறு கைகளால் நெய்மணக்கும் உணவைத் தொட்டு, துழாவி எடுத்து வாயில் இட்டுக்கொள்கிறது. வாயில் இட்டவுணவு சிதறி, மார்பு, வயிறு உள்ளிட்ட உடல்பகுதிகளில் பட்டு தரையில் சிதறுகிறது. தரையில் சிந்திய உணவையும், கைகளிலுள்ள உணவையும் அக்குழந்தை வாயால் கவ்வுகிறது. இச்செயல்களால் நாமும் குழந்தையாய் மயங்கி இன்புறுகிறோம்; மகிழ்கிறோம். இவ்வாறான இன்பப்பயன் இல்லாமை ஒரு குறை.

பற்பல பொருள்களை ஆக்கம் செய்து, எப்பொழுதும் பலரும் உடனிருக்க விருந்துண்ணும் அருமையும், பெருமையும், பெருஞ்செல்வமும் உடைய செல்வர் ஒருவர்க்கு, மேற்சொன்னவாறு இன்பம்பயக்கும் மழலைச்செல்வம், பிள்ளைச்செல்வம் இல்லையென்றால், அவர்தம் வாழ்நாளில் பயனேதும் இல்லை.

தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,
" பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற" (குறள் எண்-61), என்று மக்கட்செல்வத்தைப் பெருஞ்செல்வமாக பாராட்டுகின்றார். தம்மக்கள், குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,  தொட்டும் துழந்தும் இட்டும் கவ்வியும் அளவளாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிதே என ஐயன் இன்புறுகின்றார் (குறள் எண்-64). இவ்வண்ணம் மயக்குறு மழலைச்செல்வம் அறிவு நிரம்பியராதல், பெறுதற்கு அரியபேறு; பெருஞ்செல்வம்.

நம்முடைய மக்கள் நம்மைவிட, ஒழுக்கம், கல்வி, அறிவு, ஆற்றல் முதலானவற்றில் உயர்ந்திருக்கவேண்டும். அவர்தம் மக்களும், மக்கள்தம் மக்களும் அவ்வண்ணமே உயர்ந்திருக்க வேண்டும். தம்மினும் தம்மக்கள் அறிவுடையராதல் என்பது, பெருநோக்கு சிந்தனையாக, தொலைநோக்கு சிந்தனையாக, தொடர்வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வித்திடும் சிந்தனையாக அமைகிறது. இதனை ஆங்கிலத்தில் infinite progress என்பர்.

ஆகவே, யானையும் பசுவும் ஈனுவதுபோல, நாம் ஒன்றோ இரண்டோ மக்களைப்பெற்று மயக்குறு இன்பமும், பயக்குறை இல்லா வாழ்வும் பெறுவோம்.

வணக்கம்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்