அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்ப்புலவர்
இராச மனோகரன்.

கல்லாடக்கவிச்சுவை.

பழந்தமிழ் இலக்கியமாம் கல்லாடத்தில், ஓர் அருமையான பாடல். காண்போமா.

ஒரு தலைவி, தன்தலைவனுடன் 'உடன்போக்கு' சென்றுவிட்டாள். வளர்த்ததாய் வருந்துகிறாள். அவர்களைத்தேடிப்போகிறாள். எதிர்ப்பட்ட பெரியோரிடம், செய்தியைத்தெரிவித்து "கண்டீர்களா" என வினவுகிறாள். அப்பெரியோர் செவிலித்தாய்க்கு  அறிவுறுத்துவதாக அமைந்தது இப்பாடல்.

'உலகியல்புரைத்தல்' என்று தலைப்பிடப்பட்ட இந்நேரிசை ஆசிரியப்பா, ஐம்பத்தைந்து அடிகள் கொண்டது. இதில் ஒன்பது முதல் இருபத்தேழு அடிகள் வரையுள்ள பாடற்பகுதியைக்காண்போம்.

"செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற
10. செம்மகள் கரியோர்க்கு அறுதி போக
மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வினர் இடத்தும் அவ்வழி ஆன
திரைக்கடல் குடித்த‌ கரத்த மாமுனிக்கும்
15. திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தர்க்கும்
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கல்புடை ஆரம்
20. அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால்
உண்டோ சென்றது கண்டது உரைத்த
 பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறம்ஆர் கல்வி அறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டு அவரிடத்தும்
25. அவர்மன அன்னை கவரக் கண்டிலம்
பெருஞ்சேற்றுக் கழனி கரும்புபெறுங் காலை
கொள்வோர்க்கு‌ அன்றி அவ்வயல் சாயா",

செறிதிரை = நிறைந்த அலைகள்.
வயிறு நொந்து = துன்பப்பட்டு.
செம்மகள் = திருமகள்.
கரியோர் = திருமால்.
அறுதிபோக = உடைமையாக.
சென்றிலவால் = செல்லவில்லை. 'ஆல்' அசைநிலை.
விடிமீன் = வெள்ளிக்கோள்.
தரளம் = முத்து.
வவ்வினர் = கொண்டவர்.
கரத்தமாமுனி = கரத்தையுடைய அகத்தியர்.
திங்கள்வாழ்குலம் = நிலவுவழிவந்த பாண்டியமன்னர்குலம்
காணி = உரிமை.
பொருப்பு = மலை‌
நெடுமுதுகு வருத்தம் = மலையினது வருத்தம்; பிள்ளப்பேற்றுவலி.
கல்புடை = கற்களிடையே; மணிகள் பொருந்திய.
ஆரம் = சந்தனமரம்; அணிகலன்.
மா = மிகுதி.
பதி = கணவன்.
உறை = இல்லம்.
கண்டது = மீண்டுவரக்கண்டது.
பள்ளிக்கணக்கர் = ஆசிரியர்.
ஆர் = சிறந்த.
அறமாமகள் = கலைமகளாகிய கல்வி.
கொண்டு வாழுநர் = மாணவர்.
மன அன்னை = ஆசிரியர்.
கவர்தல் = பறித்தல்.
சாயா = பயன்கொள்ளா. 
சாய்தல் = வருந்துதல்.
பாடலின் விளக்கத்தைக்காண்போம்.

நிறைந்த அலைகளையுடைய பாற்கடலில் மந்தாரமலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பினைக்கயிறாகக்கொண்டு, அமுதம் வேண்டி கடைந்தனர். வாசுகிப்பாம்பு வலிதாளாமல் ஆலகால நஞ்சினை உமிழ, மிகுந்த வெம்மை ஏற்பட்டு  துன்பமடைந்தது. இதனை 'வயிறு நொந்து' என்கிறார் புலவர். இவ்வாறு பெற்ற திருமகள், நாராயணனுக்கு மனைவியாக கொள்ளப்பெற்றாள். தானீன்ற மகளால், பாற்கடல் இன்பங்காணவில்லை. அவ்வாறே, வானில் தோன்றி ஒளிரும் வெள்ளிக்கோள் போன்றதான, கடலில் விளையும் முத்துகள், அவற்றை எடுத்தவர்க்கே பயன்தருவதன்றி, கடலுக்குப்பயன் தருவதில்லை.

அகத்தியமுனிவர் கடல்நீரைத்திரட்டி உளுந்தளவாக்கி உள்ளங்கையில் வைத்து அருந்தினார். அதனால், கல்லாடனார் அவரை 'கரத்தமாமுனி' என்கிறார். சந்திரக்குல வழித்தோன்றல்களான பாண்டியமன்னர்குலம் நிலைத்துதங்கி ஆட்சிபரிபவர் என்கிறார் புலவர். அடுத்ததாக, அமுதவூற்று, கடல், இன்பம் என்றெல்லாம் தமிழைப்போற்றி, அத்தமிழை நமக்கு உரிமையாக தந்தனர் என்கிறார். அகத்தியர் தொல்காப்பியருக்கு ஆசிரியர், அகத்தியம் என்னும் முதல் இலக்கணநூலை இயற்றினார் என்பது அறிஞர்க்கருத்து. பாண்டியமன்னர் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ்வளர்த்தது வெள்ளிடைமலை. இவரெல்லாம் தமிழை நமக்கு உரிமையாகும்படிச்செய்தனர். எனினும், தாங்கள் வளர்த்ததமிழ், தங்களுக்கே உடைமை என்று கருதவில்லை.

பொதியமலையின் கற்களுக்கிடையே வளரும் சந்தனமரம், அதனைக்கொண்டு செல்பவர்க்கே பயன்தருகிறது. பொதிகைமலை தாயாகவும், சந்தனமரம் சேயாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. புறனடையாக, கல் என்பதை மாணிக்கக்கல் என்றும், ஆரம் என்பதை‌ அணிகலன் என்றும்  கொள்ளலாம். பொதியமலை, தன்னில் விளையும் விளைபொருள்களால் தான் பயனடைவதில்லை; அவற்றைக் கொண்டு செல்லும் முயற்சி உடையவர்க்கே பயனையும் மகிழ்வையும் தருகிறது. பிறிதொரு வழியில், 'நெடுமுதுகு வருந்திப்பெற்று வளர்த்த' என்னும் தொடர், அன்னையைக்குறிப்பதாக கொள்வதும் பொருந்தும். ஆரம் என்பது, தனக்கு அணிகலன்போன்று பெருமைதந்த மகள் எனக்கொள்க. இவ்வகைகளிலெல்லாம், முயற்சியுடையார் கொள்ள, அவர்க்கு உரிமையாகி, அவர்வாழ் நகர் புகுந்தார்/ புகுவன, மீண்டும் தாம் தோன்றிய இடத்துக்குத்திரும்புவது இல்லை.

ஆசிரியரானவர், தாம் ஆய்ந்து கண்ட நுண்பொருள்களை தாயுள்ளத்துடன், அறத்தை முதன்மையாக வைத்து, தம் மாணாக்கர்க்குக்கற்பிக்கிறார். அத்தகுபெருமைமிக்க கல்வியை, தம்மனத்தில் இருத்தி நல்வாழ்வு நடாத்தும் மாணவரிடம், அதனை மீளப்பெறும் ஆசிரியரைக்காண்பதில்லை. தாயுள்ளம் கொண்ட ஆசிரியரை அன்னையாகவும், அவர் கற்பிக்கும
 கல்வியை அறமாமகளாகவும் புலவர் உருவகப்படுத்துகிறார். 

வளமான வயலில் விளையுங்கரும்பு அதனைக்கொள்வோர்க்கே பயன்தரும்; அவ்வயல் பயனுறாது. மேலும், தன்னில் விளைந்ததை வெட்டியெடுத்துச்செல்வதால், அவ்வயல் வருந்துவதும் இல்லை.

ஓரிடத்தில் ஒன்று தோன்றினாலும், வளர்ந்தாலும், பிறந்தாலும்ன அவைகளால் அவ்விடம் பயனுறுவதில்லை; அவைகளுக்கு உரிமை கொள்வதுமில்லை; அவை தன்னிடமிருந்து பிரிந்ததற்காக வருந்துவதும் இல்லை. விளைவுகளின் அருமையை உணர்ந்து தனதாக்கிக்கொள்வோர்க்கே உரிமையாகின்றன; மகிழ்வையும் தருகின்றன. இதுவே உலகியல் இயற்கை என்பதனை வளர்ப்பு தாய்க்கு, வழியிற்கண்ட பெரியோர் எடுத்துரைத்து, நின்மகள் அறமாமகள்  அவளைத்தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சென்ற பதியும் பெருமையுடையவன். அவயர் மகிழ்ச்சியே உறுவர் என்றும், நீர், உம் உரிமையை முன்வைத்து அவரைப்பிரிக்க வேண்டா, உலகியலைப்புரிந்துகொள் அம்மா என்றும், அறத்தை மிகச்சிறப்பாக, பொருத்தமாக எடுத்தியம்புகின்றனர்.

உடன்போகிய‌மகளைத்தேடி வந்ததால், திருமகளில் தொடங்கி,  கடவுளர், முனிவர், மன்னவர், இயற்கை, நிலத்தினை, ஆசிரியர் ஈறாக மறுக்கமுடியாத சான்றுகளைக்காட்டி அறங்கூறுகிறார் கல்லாடர்பெருமான். இத்துணை உயர் ஒழுக்கத்தில் வாழ்ந்த தமிழரிடையே, இக்காலத்து நிகழும் 'குடும்பப்பெருமை கொலை'களைக்காணும்போது, நாணம் மேலிடுகிறது. நம் முன்னோரது மரபினைப்பேணுவோம்.

வணக்கம்.










Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்