தமிழ்ப்பாடநூலில் புணர்ச்சியிலக்கணம். (1-ஆம் பதிவு).
புணர்ச்சியிலக்கணம்.
+2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் காணப்படும் இலக்கணப்பிழை.
பாடநூலின் 10ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு தொடர் (வாக்கியம்) வருமாறு: "எனதருமைத் தம்பியாகிய திரு நெல்லையப்பரைப் பராசக்தி நன்கு காத்திடுக." இத்தொடரிலுள்ள பிழைகளைக்காண்போம்.
‘எனதருமைத் தம்பியாகிய’ என்னும் சொற்றொடரிலுள்ள முதல்சொல் தகரமெய்(த்) பெற்று அதனையடுத்து இடைவெளியையும் (space) பெற்றுள்ளது. உரைநடையில் ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ தம்முள் இடைவெளியின்றி பொருள்பட சேர்ந்து தமக்கு முன்பின் இடைவெளியைப்பெற்றால் ‘சொல்’ எனப்படும். தமிழ்சொற்கள் எதற்கும் வல்லினமெய்கள் ஈறாகா. இந்த அடிப்படைவிதியை ஏன் மறந்தனர்?
'நெல்லையப்பரைப் பராசக்தி' என்னும் சொற்றொடரிலுள்ள முதல்சொல் செயப்படுபொருள் வேற்றுமையான இரண்டாம்வேற்றுமையின் ‘ஐ’ உருபை ஏற்றுள்ளது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்; பெயருடன் புணராது. நன்னூற்சூத்திரம் - 319 இதனை தெளிவாக வரையறுக்கிறது.
'நெல்லையப்பரைப்பராசக்தி' என்பது ‘வாழைப்பழம்’ போன்ற பெயர்+பெயர் கூட்டன்று. இந்த அடிப்படைவிதியை ஏன் மறந்தனர்?
நன்னூல் சூத்திரம் — 319
“எல்லை ‘இன்’உம் ‘அது’உம் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்குஏழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்“
இப்பிழைகள் நீங்கிய செம்மைத்தொடர் வருமாறு: "எனதருமைத்தம்பியாகிய திரு நெல்லையப்பரை பராசக்தி நன்கு காத்திடுக."
நன்றி. வணக்கம்.
Comments
Post a Comment